சிறுமுகை வனப்பகுதியில் குட்டியை ஈன்ற காட்டுயானை இறப்பு : பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கல்..குட்டிய யானையும் பரிதாப பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
26 April 2022, 12:41 pm
Elephant Dead With Cub -Updatenews360
Quick Share

கோவை : சிறுமுகை வனப்பகுதியில் சுமார் 20 வயதுள்ள காட்டு யானை பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலால் குட்டியுடன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கோவை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவுக்காகவும்,தண்ணீருக்காகவும் ஊருக்குள் புகும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

அவ்வாறு ஊருக்குள் புகும் யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு மனிதர்களையும் அச்சுறுத்தியும் வருகின்றன. இதனால் பல இடங்களில் மனித-வன உயிரின மோதல்களும் ஆங்காங்கே நடந்தேறி வருகின்றன.

இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட லிங்காபுரம், பெத்திக்குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பவானியாற்றின் நீர்தேக்கப்பகுதிகளில் உள்ளதால் வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து வருகின்றன.

அதன் ஒருபகுதியாக சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட சம்பரவள்ளி சராகம் பெத்திக்குட்டை பீட் மோதூர் பகுதியில் உள்ள இரட்டைக்கண் மாரியம்மன் கோவில் பாலம் அருகே நேற்றிரவு ரோந்து சென்ற வனத்துறையினர் அப்பகுதியில் காட்டு யானை ஒன்று குட்டியுடன் உயிரிழந்திருப்பதை கண்டுள்ளனர்.

மேலும்,இச்சம்பவம் குறித்து வனச்சரகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட வன அலுவலர் அசோக்,உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார், சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குட்டியுடன் இறந்த யானை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலின் காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனவும், இறந்து இரு நாட்கள் இருக்கலாம் எனவும் வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Views: - 530

0

0