வால்பாறையில் வனத்துறை முகாமை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்…!!

18 November 2020, 5:11 pm
elephant - updatenews360
Quick Share

வால்பாறை: வால்பாறை அருகே ஷேக்கல்முடியில் வனத்துறை முகாமை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

வால்பாறையை அடுத்து உள்ள சோலையார் எஸ்டேட்டில் நேற்று 5 யானைகள் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் மருத்துவ அலுவலர் குடியிருப்பு பகுதியில் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இத்தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மருத்துவர் குடியிருப்புக்குள் நுழைய முயன்ற யானைகளை வேன் மற்றும் ஒலிபெருக்கியால் சத்தம் எழுப்பி வனத்திற்குள் விரட்டினர். ஆனால் தொடர்ந்து அதே பகுதியில் உள்ள சிறுவனப்பகுதியில் முகாமிட்ட யானைகள், வால்பாறை முடீஸ் பஜார் சாலையை கடக்க முயன்றன. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்ற யானைகள் மறுபடியும் சாலைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஷேக்கல்முடி எஸ்டேட்டில் வனத்துறை முகாமை காட்டு யானைகள் உடைத்து அட்டகாசம் செய்துள்ளது. இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் கூறுகையில், வனத்தை விட்டு யானைகள் வெளியேறி வருவதால் எச்சரிக்கையுடன் மக்கள் நடமாடவேண்டும். யானைகளை கண்டால் வனத்துறைக்கு தகவல் அளித்து பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.