எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி மீண்டும் வெற்றிக்கொடியா? அரைநூற்றாண்டு வரலாற்றை மாற்றக் களம் இறங்கும் திமுக

25 February 2021, 11:11 pm
Quick Share

சென்னை:தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தமுறை தனது சொந்தத் தொகுதியில் போட்டியிடமாட்டார் என்ற யூகங்களையெல்லாம் பொய்யாக்கி மீண்டும் எடப்பாடி தொகுதியில் களம் இறங்குவதற்காக விருப்பமனு அளித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத்தில் இந்தத் தொகுதியில் இந்தத் தொகுதியில் அதிமுகவைவிட திமுக அதிக வாக்குகளை பெற்றதால் அதிமுக கோட்டையைத் தகர்ப்போம் என்று இந்த தொகுதியைக் குறிவைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல முறை செய்துவருகிறார். 1971 முதல் திமுகவால் ஒருமுறைகூட வெல்ல முடியாத அதிமுகவின் கோட்டையான எடப்பாடி இந்த முறை திமுகவின் முற்றுகையில் விழுந்துவிடுமா என்ற கேள்வி வரும் 2021 தேர்தலின் முக்கியமான கேள்வியாக உருவெடுத்துள்ளது.

அதிமுகவின் கோட்டையைத் தகர்க்கிறேன் என்று கிளம்பி நேரத்தை வீணாக்கி மூன்றாவது முறையும் ஸ்டாலின் ஜார்ஜ் கோட்டையைக் கோட்டைவிடப் போகிறார் என்று தோள் தட்டுகிறார்கள் அதிமுக தொண்டர்கள். நாடாளுமன்றத்தில் அதிமுகவின் கோட்டையை அசைத்துப் பார்த்ததுபோல் அரை நூற்றாண்டுக்குப் பின் எடப்பாடியில் வெல்வோம் என்று மார்தட்டுகிறார்கள் திமுகவினர்.வரலாறு எங்கள் பக்கம் என்கிறார்கள் அதிமுகவினர், அரசியல் காற்று எங்கள் பக்கம் என்கிறார்கள் திமுகவினர். எடப்பாடியின் மண்ணின் மைந்தனான பழனிசாமியை எந்தக் காற்றும் அசைக்காது என்று சொல்லும் அதிமுகவினர் தொகுதியில் முதல்வர் ஆற்றியுள்ள பணிகளையும் கொண்டுவந்த திட்டங்களையும் மக்கள் மறக்க மாட்டார்கள் என்று அடித்துச் சொல்கிறார்கள்.

திமுக தொடங்கிய காலத்திலிருந்தே வட மாவட்டங்களிலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் ஓரளவு வலிமையுள்ளதாக இருந்துவருகிறது. அதிமுக தொடங்கியபின்னரும் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்த மாவட்டங்களில் இருக்கும் முக்கிய தொகுதிகளில் வென்றதால்தான் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. எனவே, திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி பெரும்பாலும் வடக்கு, கிழக்கு மாவட்டங்களில்தான் பெரிதும் பிரச்சாரத்தில் கவனம் செலுத்துவார். கருணாநிதி உள்ளிட்ட திமுகவின் முன்னணித் தலைவர்களும் டெல்டா மாவட்டங்களிலும் சென்னையிலும் வட மாவட்டங்களிலும் போட்டிட்டு வெற்றிபெற்றுள்ளனர்.

அதிமுகவை மக்கள் திலகம் எம்.ஜி,ஆர் தொடங்கிய காலத்திருந்தே கொங்கு மண்டலத்திலும் தென் மாவட்டங்களிலும் மக்களின் பேராதரவைப் பெற்ற கட்சியாக இருந்துவருகிறது. அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்போதெல்லாம் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிபெற்றாலும் மேற்கு மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் பெரிய வெற்றிகளைக் குவிக்கும். அதிமுகவின் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொங்குமண்டலத்தைச் மண்ணின் மைந்தராக இருக்கும் நிலையில் ஸ்டாலின் அந்த மாவட்டங்களில் தொடர்ந்து பிரச்சாரம் செயதுவருகிறார். நாற்பது ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக இருக்கும் எடப்பாடியிழும் அவர் பலநாட்கள் பிரச்சாரம் செய்தார்.ஆனால், கடந்தகால வரலாற்றை அவர் திரும்பிப்பார்க்க வேண்டும் என்று அதிமுகவினர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே இந்தத் தொகுதியில் அந்தக் கட்சிதான் வெற்றிபெற்றுவருகிறது. கடைசியாக 1971-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் திமுக பொருளாளராக இருந்தபோது திமுகவைச் சேர்ந்த ஏ.ஆறுமுகம் 35 ஆயிரத்து 638 வாக்குகளைப் பெற்று வென்றார். இது மொத்த வாக்குகளில் 54.72 சதவீதமாகும். ஆனால், அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கி அந்தக் கட்சி போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலில் அதே திமுக வேட்பாளர் ஆறுமுகம் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். அதிமுக வேட்பாளர் ஐ.கணேசன் 31 ஆயிரத்து 63 ஓட்டுகளை வாங்கி வென்றார். அதிமுகவின் வாக்கு சதவீதம் 38.56 சதவீதமாகவும் திமுகவின் வாக்கு சதவீதம் வெறும் 14.62 சதவீதமாகவும் இருந்தது. இரண்டாவது இடத்தில் காங்கிரசும் மூன்றாவது இடத்தில் ஜனதா கட்சியும் வந்தன.

1977-ஆம் ஆண்டு அடைந்த படுதோல்வியால் இந்தத் தொகுதியில் 1980-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவே வேண்டாம் என்று கருணாநிதி முடிவெடுத்தார். இந்தத் தொகுதி திமுக கூட்டணிக்கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு முந்தைய தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு இரண்டாவது இடம்பிடித்த காங்கிரஸ் திமுகவுடன் அணிசேர்ந்ததால் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. மீண்டும் அதிமுக வேட்பாளர் ஐ.கணேசன் 37 ஆயிரத்து 978 வாக்குகளைப் பெற்று சட்டமன்றம் சென்றார். அதிமுகவின் வாக்கு சதவீதம் 38-93 சதவீதமாக உயர்ந்தது. சுயேச்சை வேட்பாளராக நின்ற நடராசன் இரண்டாவது இடம்பிடித்தார்.

1984-ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கோவிந்தசாமி 64.78 சதவீதம் பெற்று வென்றார். திமுகவின் பி.ஆறுமுகத்துக்கு வெறும் 26.32 சதவீத ஓட்டுகளே கிடைத்தன. 1989-ஆம் ஆண்டு அதிமுக இரண்டாகப் பிளவுபட்ட சூழலிலும் அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அணி சார்பாகக் களங்கண்ட தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 30 ஆயிரத்து 765 வாக்குகள் (33.08 சதவீதம்) பெற்று உடைந்தாலும் பிரிந்தாலும் இந்தத் தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை உறுதிசெய்தார்.

மீண்டும் 1991-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி 58.24 சதவீத வாக்குகள் பெற்று பெரும் வெற்றிகண்டார். திமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டதுடன் வெறும் 16.10 சதவீத ஓட்டுகள் வாங்கி டெபாசிட் தொகை இழந்தது. இரண்டாவது இடத்தை பாமக பிடித்தது. பழனிசாமி 72 ஆயிரத்து 379 ஓட்டுகள் பெற்றார், பாமக 31ஆயிரத்து 113 வாக்குகளும் திமுக வெறும் 20 ஆயிரத்து 11 ஓட்டுகளும் பெற்றன. அடுத்து 1996-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோற்றபோதும் திமுக வெற்றிபெறவில்லை. பாமகவே இந்தத் தொகுதியில் வென்றது.

2001-ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் நின்ற பாமக திமுகவை வென்றது. மீண்டும் 2006-ஆம் ஆண்டு பாமவே வென்றது. அதிமுக தோற்றாலும் திமுக வெற்றிபெறாத தொகுதியாகவே எடப்பாடி இருக்கிறது. 2011-ஆம் ஆண்டு திமுக இந்தத் தொகுதியில் நிற்காமல் கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஒதுக்கியது. இந்த முறை எடப்பாடி பழனிசாமி ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 586 ஓட்டுகள் (56.38 சதவீதம்) பெற்று வென்றார். மறுபடியும் பழனிசாமி 98 ஆயிரத்து 703 வாக்குகளை அள்ளி வாகை சூடினார். திமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது, பாமகவே இரண்டாம் இடத்தைப் பெற்றது. கடந்த அரை நூற்றாண்டாக திமுக வெற்றிபெறாத இடமாகவே எடப்பாடி இருக்கும் நிலையில் ஸ்டாலின் இந்தத் தொகுதியைக் குறிவைப்பது பாறாங்கல்லில் முட்டிக்கொள்வதுபோல்தான் என்று அதிமுகவின் தொண்டர்கள் சவால் விடுகிறார்கள்.

ஆனால் வரலாறு திரும்பிவிட்டது என்று நம்பும் உடன்பிறப்புகள் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைக் காட்டுகிறார்கள். கடுமையான பாஜக எதிர்ப்பு அலை வீசிய சூழலில் எடப்பாடி பகுதியில் அதிமுக 42.93 சதவீத வாக்குகளைப் பெற்றது. திமுக 46.53 சதவீத வாக்குகளைப் பெற்றது. மிகவும் கடுமையான சூழலிலும் திமுகவால் வெறும் 3.6 சதவீத ஓட்டுகளையே அதிகமாகப் பெற முடிந்தது. தேர்தல் வரலாறும் புள்ளிவிவரங்களும் ஒரு பக்கம் இருக்க சட்டமன்றத் தேர்தல் என்று வரும்போது முதல்வரே நிற்கும்போது அதிமுகவுக்கு வெற்றி உறுதி என்று கருதப்படுகிறது. ஆனால், இதுவரை இல்லாத வகையில் போட்டி கடுமையாக இருந்தாலும் முதல்வர் பழனிசாமி மீண்டும் வெற்றிக்கொடியைப் பறக்கவிடும் வாய்ப்புகளே அதிகம் காணப்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால், வெற்றிபெறும் வாக்கு வித்தியாசம் முன்பைவிடக் குறையுமா என்பது அனைவராலும் கவனிக்கப்படுகிறது.

Views: - 8

0

0