உள்ளாட்சி தேர்தல்: பட்டியலின பெண்ணுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு…தடையை மீறி தலைவராகும் இளம்பெண்!!

Author: Aarthi Sivakumar
24 September 2021, 11:22 am
Quick Share

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மலை கிராம மக்கள் எதிர்ப்பை மீறி வேட்பு மனுவைதாக்கல் செய்த பட்டியலின பெண் வேட்பாளர் இந்துமதி போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்படுகிறார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சிகுட்பட்ட காமனூர்தட்டு, சீக்கஜோனை உள்ளிட்ட மலை கிராமங்களில் பிற்படுத்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த 2889 வாக்காளர்களும், பொதுப்பிரிவினர் 551 வாக்காளர்கள் என 3440 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் மலை கிராம மக்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இட ஒதுக்கீடு அளித்து வந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவருக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பெண்ணுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவியை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இதற்கு நாயக்கனேரி ஊராட்சியில் உள்ள மலை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்த நாயக்கனேரி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று நாயக்கனேரி ஊராட்சியில் உள்ள தேவதாஸ் என்பவரது மனைவி பியூலா (வயது42) வேட்புமனு தாக்கல் செய்தார். கிராம மக்கள் அவரிடம் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பியூலா மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக கிராம மக்களிடம் தெரிவித்து விட்டு சென்றுவிட்டார்.

இதனையடுத்து, மாலை 5 மணிக்கு மேல் நாயக்கனேரி ஊராட்சியை சேர்ந்த இந்துமதி (வயது22)என்பவர் அவரது கணவர் பாண்டியனுடன் மனுத்தாக்கல் செய்ய வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள் திடீரென ஒன்று சேர்ந்து அவர்களை உள்ளே அனுமதிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆம்பூர் டி.எஸ்.பி சரவணன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கிராம மக்கள் எதிர்ப்பு - கடைசி நேரத்தில் ஓடோடி வந்து பரபரப்பாக வேட்புமனு தாக்கல் செய்த பெண்

தொடர்ந்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை மீறி அங்கிருந்த இந்துமதி மற்றும் அவரது கணவரை உள்ளே அனுமதித்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடையும் என்பதால் இந்துமதியும், பாண்டியனும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வேகமாக ஓடிச்சென்று உரிய நேரத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாத நிலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்த இந்துமதி போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்டம்.

இந்நிலையில் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி வேட்பு மனு தாக்கல் செய்த இந்துமதி ஆம்பூர் அடுத்த பெரியாங்குபோம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். தற்போது இந்துமதிக்கு எந்த அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அவர் தங்கி உள்ள வீட்டு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இரண்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 211

0

0