ஓடும் ரயிலில் குழந்தையுடன் தவறி விழுந்த பெண் : ஓடிச் சென்று காப்பாற்றிய ஆர்பிஎஃப் காவலருக்கு குவியும் பாராட்டு…

Author: kavin kumar
20 January 2022, 8:51 pm
Quick Share

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் தவறி விழுந்த குழந்தையையும் தாயையும் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அதிகாரிகள், பொது மக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.

மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கலம்.65. இவர் நேற்று மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை சென்றார். அவரை வழியனுப்புவதற்காக அவரது மகள்கள் தையல்நாயகி , கவிதா ஆகியோர் வந்துள்ளனர். மங்களத்தை ரயிலில் ஏற்றி இருக்கையில் அமர வைத்துவிட்டு இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். இந்நிலையில் ரயில் புறப்பட்டு உள்ளது. அதனை அறிந்த சகோதரிகள் இருவரும் அவசரமாக ரயிலை விட்டு இறங்கி உள்ளனர். முதலில் கவிதா ரயிலில் இருந்து இறங்கியுள்ளார். அவரைத் தொடர்ந்து தையல்நாயகி தன் குழந்தையுடன் ரயிலிலிருந்து இறங்கும் போது தடுமாறி விழுந்துள்ளார்.

நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்த தையல்நாயகியையும், அவரது குழந்தையையும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுதீர்குமார் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிச் சென்று தனது கால்களால் தாங்கி பிடித்து இருவரையும் எந்தவித காயமும் இன்றி காப்பாற்றினார். இதில் இன்ஸ்பெக்டர் சுதீர்குமார் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனை அடுத்து ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய சகோதரிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். தன் உயிரைப் பணயம் வைத்து தாய், குழந்தையை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுதீர்குமாரின் சமயோஜித வீர செயலுக்கு உயர் அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Views: - 210

0

0