கால்வாயில் குப்பையை அகற்றிய தொழிலாளி நீரில் மூழ்கி பலி: மகன்கள் கண்முன்னே பலியான சோகம்..!!

Author: Aarthi Sivakumar
6 November 2021, 11:37 am
Quick Share

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் கால்வாயில் தேங்கிய குப்பையை அகற்றிய கூலித்தொழிலாளி மகன்கள் கண்முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் முத்து. கூலி தொழிலாளியான இவரது மனைவி பச்சையம்மாள், இவர்களுக்கு பாலாஜி, சரவணன், சரண்ராஜ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் மதியம் இவர்களது வீட்டின் அருகே உள்ள வாசுகி நகர் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் குப்பை கழிவு தேங்கியதால் தண்ணீர் செல்வதற்கு தடையாக இருந்துள்ளது. இதனால், கால்வாய் அடைப்பை சரிசெய்ய முத்து, தனது மகன்கள் பாலாஜி, சரவணன் ஆகியோருடன் கால்வாயில் இறங்கினர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக முத்து தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாலாஜி, சரவணன் ஆகியோர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தந்தையை தேடினர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே இதுகுறித்து புளியந்தோப்பு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று காலை 8 மணியளவில் முத்துவின் உடல் கன்னிகாபுரம் வஉசி நகர் அருகேயுள்ள கால்வாயில் மிதப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அங்கு சென்ற தீயணைப்பு துறையினர், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன்கள் கண்முன்னே தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 356

0

0