குடிபோதையில் தகராறு…தொழிலாளி குத்திக்கொலை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் அதிரடி..!!

Author: Aarthi Sivakumar
23 September 2021, 6:18 pm
Quick Share

கோவை: கடந்த 2018 ஆம் ஆண்டு குடிபோதையில் தொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை சிங்காநல்லுார் ராமானுஜம் நகரை சேர்ந்தவர் மோகன்பாபு. இவரது குழந்தைக்கு காதுகுத்து விழா கொண்டாடினர். இதற்காக, மோகன்பாபுவின் நண்பர்கள் மணிகண்டன், ஆனந்தராஜ், நவீன்குமார், சசிமோகன், ஆகியோருக்கு ‘பார்ட்டி’ வைத்தார்.

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22ம் தேதி ஐந்து பேரும் அங்குள்ள டாஸ்மாக்கில் மது குடித்து விட்டு போதையில் வந்தனர். அப்போது, சிங்காநல்லுார் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி பாபு என்பவர், ரோட்டோரத்தில் நின்று கொண்டிருந்தார்.

அவரிடம், மீண்டும் மது குடிப்பதற்கு தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளனர். பாபு கொடுக்க மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. ஐந்து பேரும் சேர்ந்து, பாபுவை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்தனர். அவரிடமிருந்து மொபைல் போன் மற்றும் பணத்தை பறித்து தப்பினர்.

இதுகுறித்து, பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஐந்து பேரையும் கைது செய்து கோவை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன், குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.

Views: - 192

0

0