கோடை விழா மலர் கண்காட்சிக்கு தயாராகும் பூங்காக்கள்..! விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட பணிகள்

Author: kavin kumar
26 February 2022, 1:54 pm
Quick Share

சேலம் : ஏற்காட்டில் கோடை விழா நடத்துவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. சுமார் 40-க்கும் மேற்பட்ட மலர் ரகங்களில் 3 லட்சம் விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாத இறுதியில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். மலர் கண்காட்சியின் போது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை. தற்போது தமிழகம் முழுவதுமே கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதனால் இந்த ஆண்டு ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதனிடையே ஏற்காட்டில் கோடை விழா நடத்துவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பண்ணை ஆகிய இடங்களில் மலர் செடிகளின் விதைகள் விதைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 40-க்கும் மேற்பட்ட மலர் ரகங்களில் 3 லட்சம் விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இவைகள் மே மாதத்தில் பூக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு பராமரிக்கும் பணி நடந்து வருகிறது.

Views: - 766

0

0