2 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை எதிரொலி : ஒரே நாளில் இவ்வளவு வருமானமா..?
15 August 2020, 1:01 pmசென்னை : டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ச்சியாக இரு தினங்களுக்கு விடுமுறை வருவதால், மதுபானக் கடைகளில் அதிகளவிலான விற்பனை நடந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 7வது கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதிலும், 2வது மாதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் 3வது ஞாயிற்றுக்கிழமையான நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால், அனைத்து கடைகளும் அடைக்கப்பட இருக்கின்றன.
குறிப்பாக, டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகின்றன. இதனால், சனிக்கிழமைகளிலேயே தேவையான அளவு மதுபாட்டில்களை குடிமகன்கள் வாங்கி இருப்பு வைத்துக் கொள்கின்றனர்.
இந்த நிலையில், இன்று நாடு முழுவதும் 74வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இரு தினங்கள் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை என்பதால், நேற்றே இருப்பு வாங்கி வைத்துக் கொள்ள மதுப்பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு பறந்தனர். இதனால், ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. ரூ.250 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ.248.10 கோடிக்கு விற்பனையாகியுள்ளன.
அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.56.45 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.55 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.54.60 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.49.78, சென்னை மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.31.50 கோடி வசூலாகி உள்ளது.