யோகி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் : திருப்பதி ஏழுமலையானை தரிசித்த புதுச்சேரி முதலமைச்சர் பேட்டி!!

Author: Udayachandran
4 October 2020, 11:27 am
Pondy CM - Updatenews360
Quick Share

புதுச்சேரி : உத்தரபிரதேசம் சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டார். தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோவிலுக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய நாராயணசாமி, பாண்டிச்சேரியில் வசிக்கும் 15 லட்சம் பேரில் 10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்திருக்கிறோம். பாண்டிச்சேரியில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் 1.6 சதவீதமாக உள்ளனர்.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் சுய வைத்தியம் செய்துகொள்வது தொற்று பரவலுக்கு மிக முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. எங்கள் மாநிலத்தில் ஜிப்மர் மருத்துவமனை, எட்டு மருத்துவக்கல்லூரிகள், மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் கொரோனா நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

எனவேதான் எங்கள் மாநிலத்தில் கொரோனாவை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. மத்திய அரசு யாருடைய பேச்சையும் மதிக்காமல் நினைத்ததை செய்யும் அரசாக உள்ளது.

பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட விவசாய மசோதா விவசாயிகளுக்கு எதிரான மசோதா ஆகும். மசோதாவில் இடம்பெற்று உள்ள ஒப்பந்த பண்ணைகள் அம்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளை விவசாயத் தொழிலாளர்களாக மாற்றிவிடும்.

சர்க்கரை, சமையல் எண்ணெய், வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களை யார் வேண்டுமென்றாலும் ஏற்றுமதி செய்யலாம் என்ற நிலை நாட்டை மிகவும் சிக்கலான சூழ்நிலைக்கு தள்ளிவிடும்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நடைபெற்ற இளம்பெண் கற்பழிப்பு சம்பவம் பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். யோகி ஆதித்யாநாத் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ராகுல்,பிரியங்கா ஆகியோர் மீது உத்தரபிரதேச போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

Views: - 78

0

0