கவுன்சிலராக தகுதியை இழந்துட்டீங்க.. மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ் : வேட்பு மனுவில் உண்மையை மறைத்த திமுக கவுன்சிலர்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2022, 4:59 pm
Dmk councilor - Updatenews360
Quick Share

தஞ்சாவூர் மாநகராட்சியில் திமுக கவுன்சிலர் பிரகாஷ் என்பவர் , அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வரும் தன் தம்பி குறித்த விவரங்களை வேட்புமனுவில் மறைத்து விட்டதாகவும், அதனால் தன்னியல்பாகவே கவுன்சிலராக பதவி வகிக்கும் தகுதியை இழந்து விட்டதாக கூறி குறிப்பிட்ட அந்த கவுன்சிலருக்கு மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கவுன்சிலர் பதவியை இழந்ததால், அந்த கவுன்சிலர் முதல் மாமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது எனவும் கூறப்படுவது தஞ்சை திமுக மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை எம்எல்ஏ நீலமேகத்தின் அக்கா மகனான பிரகாண், 16 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக் கூடியவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மாநகராட்சி பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்திருக்கக்கூடாது என்பது விதி.

மாநகராட்சி மூலமாக வருமானம் ஈட்டக்கூடிய எந்த வேலையும் செய்திருக்க கூடாது என்பது தேர்தல் விதிமுறையில் உள்ளது. ஆனால் பிரகாஷின் உடன்பிறந்த தம்பி ராம்பிரசாத் அரசு ஒப்பந்ததாராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் பிரகாஷ் தனது வேட்பு மனுவில் உண்மை மறைத்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலராக பதவியும் வகித்து வரகிறார். இந்த விவகாரம் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து பிராகஷ் மற்றும் அவரது தம்பி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அளித்த விளக்கம் திருப்தியளிக்காததால் பிரகாஷ் கவுன்சிலராக பதவி வகிக்க தகுதியினை இழந்து விட்டதாக ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தேர்தல் மூலம் தேர்வான ஒரு திமுக கவுன்சிலர் தன் பதவியை இழந்திருப்பது திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 30ம் தேதி தஞ்சாவூர் மாமன்ற முதல் மாநகராட்சி கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதில் பிரகாஷ் கலந்து கொள்ள முடியாது.

Views: - 506

0

0