வயதில் மூத்த பெண்ணை காதல் திருமணம் செய்த இளைஞர் : நண்பர்கள் கிண்டலால் எழுந்த பிரச்சனை.. இளம்பெண் தற்கொலை!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2021, 1:48 pm
Wife Suicide arrest- Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் பெண் தற்கொலை செய்த நிலையில் கணவனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள திப்பனூத்து கிராமத்தினை சேர்ந்த கணேசன் – செண்பகவல்லி தம்பதியின் மகன் செண்பகராஜ் (24). இவர் எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனத்தில் செயல்பட்டு வரும் தனியார் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில டிரைவராக பணியாற்றி வருகிறார்.

செண்பகராஜ் இதற்கு முன்பு கடலையூரில் உள்ள தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அங்கு பணியாற்றி வந்த கடலையூரைச் சேர்ந்த முத்துச்சாமி – மாடத்தி மகள் மகாராணி (வயது 26) என்பவருக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது.

இது இரு வீட்டுக்கும் தெரிய வர வயது வித்தியாசத்தினை காண்பித்து மறுத்துள்ளனர். ஆனால் காதலர்கள் வீட்டின் எதிர்ப்பினை மீறி கடந்த ஆண்டு திருமணம் செய்து, திப்பனூத்தில் தங்களது வாழ்வினை தொடங்க ஆரம்பித்தனர்.

முதலில் எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர் நாள் செல்ல, செல்ல ஏற்றுக்கொள்ள தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு எழ தொடங்கியுள்ளது. இருவருக்கும் உள்ள வயது வித்தியாசத்தினை சிலர் கிண்டல் செய்ய ஆரம்பித்த காரணத்தினால் செண்பகராஜ் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்வார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் தான் அதிக சித்திரவதை சந்தித்து வருவதாக தனது தாய் மாடத்தியிடம் செல்போன் மூலமாக மகாராணி தெரிவித்துள்ளார். இதனை கேட்ட தாய் மாடத்தி, கடலையூருக்கு வந்து அங்குள்ள தங்களுக்கு சொந்தமான வீட்டில் இருவரும் குடும்பம் நடத்த வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மகாராணி தனது கணவனிடம் கூற இருவருக்கும் இடையே பிரச்சினை எழுந்ததாக தெரிகிறது. மேலும் செண்பகராஜ் பெற்றோரும் மகாராணியை திட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3,4 தேதிகளில் திப்பனூத்து கிராமத்தில் திருவிழா நடைபெற்றுள்ளது.

செண்பகராஜ் மட்டும் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். மகாராணி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். கடந்த 3ந்தேதி நள்ளிரவு திருவிழாவிற்கு போய் விட்டு செண்பகராஜ் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனை மகாராணி கண்டிக்கவே இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது.

இதில் கோபமடைந்த செண்பகராஜ் தனது இருசக்கர வாகனத்தினை எடுத்து வெளியே சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் வீட்டிற்கு வந்த போது, வீட்டில் இருந்த மின்விசிறியில் மகாராணி தூக்கில் தொங்கிய படி சடலமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதையெடுத்து செண்பகராஜ் அழுதுள்ளார். அவரது அழுகை குரலை கேட்ட அருகில் இருந்தவர்கள் வீட்டில் வந்து பார்த்துள்ளனர். இதனை தொடர்ந்து எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் விரைந்து உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திருமணமாகி ஒரு வருடத்தில் மகாராணி உயிர் இழந்துள்ளதால் கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாரயணனும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தங்களது மகள் உயிரிழப்புக்கு அவரது கணவர் செண்பகராஜ் மற்றும் அவரது பெற்றோர் தான் காரணம் என்று மகாராணி பெற்றோர் எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி நேற்று மகாராணியை தற்கொலைக்கு துண்டியதாக அவரது கணவர் செண்பகராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

வயது வித்தியாசம், மற்றவர்களின் கிண்டல் என அடுத்தடுத்த பிரச்சினைகளால் காதல் திருணம் செய்து வசந்தமாக வாழ நினைத்தவர்களின் வாழ்வில் புயல் அடித்தது மட்டுமின்றி ஒரு உயிரும் பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Views: - 714

0

0