ஹாரன் அடித்ததால் ஆத்திரம்…அரசு பேருந்து ஓட்டுநர் மீது சரமாரித் தாக்குதல்: கம்பி எண்ணும் குடிகார இளைஞர்..!!

Author: Aarthi Sivakumar
23 December 2021, 3:29 pm
Quick Share

செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை அடித்து உதைத்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிங்கப்பெருமாள் கோவில் வழியாக திருவள்ளூர் வரை அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கிராசிங்கில் இருந்து பேருந்து கிளம்பிய போது இருசக்கர வாகனத்தில் வந்த மது போதை ஆசாமி ஒருவர் சாலையிலேயே நிறுத்தி தனது நண்பருடன் பேசி வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படவே அரசு பேருந்தின் நடத்துனர் பழனி என்பவர் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு ஹாரன் அடித்து கேட்டுள்ளார்.

மதுபோதை உச்சத்தில் இருந்த போதை ஆசாமி அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்தும், நடத்துனர் பழனியை தாக்கியதுடன் தடுக்க வந்த ஓட்டுநர் புருஷோத்தமனையும் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மறைமலைநகர் போலீசார் ஓட்டுநர் மீது தாக்குதலில் ஈடுபட்ட தெள்ளிமேடு பகுதியை சேர்ந்த விஜயக்குமார் என்கிற இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களாக இருந்தாலும் சரி, போதை ஆசாமிகளாக இருந்தாலும் சரி ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 259

0

0