பிரதமரின் பாதுகாப்புக்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த இளைஞர் : துப்பாக்கிகள் வைத்திருந்ததால் பரபரப்பு!!

5 September 2020, 1:29 pm
Madurai Gun - Updatenews360
Quick Share

மதுரை : மதுரை விமான நிலையத்தில் 4 துப்பாக்கிகளுடன் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை விமானத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பயணிகள் நடைபாதையில் தனது வாகனத்தை நிறுத்தினார். இதைக்கண்ட பாதுகாப்பில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வாலிபரை சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது அந்த இளைஞர் கையில் ஒரு துப்பாக்கியும், பையில் 3 ஏர்கன் வகை துப்பாக்கிளும், 4 செல்போன்களும் இருந்தன. உடனே இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் செல்போன்களை பெருங்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட இளைஞரிடம் நடத்திய விசாரணையில், பிரதமரின் பாதுகாப்பிற்காக டெல்லி செல்ல இருப்பதாகவும், தனி விமானம் தனக்காக காத்திருப்பதாகவும், என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது தனக்கு ஆயிரம் கோடி அளவு சொத்து இருப்பதாக கூறினார்.

இதைக் கேட்டு குழம்பி போன போலீசார் பெருங்குடி போலீசாரை அழைத்து இளைஞர் குறித்து விசாரிக்க முறையிட்டனர். விசாரணையில், மதுரை திருமங்கலம் அருகே வசிக்கும் பாஸ்கரன் என்பவன் மகன் அஸ்வத்தாமன் என்பது தெரியவந்தது.

கல்லூரி படிக்கும் போது என்சிசியில் ஆர்வம் கொண்ட மாணவன், தற்போது பட்டப்படிப்பு முடித்து வேலையில்லாத காரணத்தில் மனநிலை பாதிப்படைந்துள்ளதாகவும், யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை எடுத்து வந்ததாக தெரியவந்தது.

இதையடுத்து பாஸ்கரனை அழைத்து போலீசார், மனநிலை குன்றியவரை கவனமாக வழிநடத்த வேண்டும் என அறிவுரை கூறி மகனை ஒப்படைத்து எச்சரித்து அனுப்பினர். இந்த செயலால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 0

0

0