விபத்தில் இறந்த இளைஞர் : மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி மரணமடைந்த இளைஞரின் தாயிடம் வழிப்பறி!!

Author: kavin kumar
10 February 2022, 7:45 pm
Quick Share

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே விபத்தில் உயிரிழந்த மகனை காண மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெண்ணை சரமாரியாக தாக்கி அவரிடமிருந்த நகைகளை வாகன ஓட்டிகள் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த 3 இளைஞர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில், தூக்கி வீசப்பட்ட இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்தனர். அப்போது அவ்வழியே சென்றவர்கள் விபத்தை கண்டு மத்தூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் அங்கு வந்த மத்தூர் காவல்துறையினர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் உயிரிழந்த இளைஞரின் உடலை மத்தூர் அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், போச்சம்பள்ளியை சேர்ந்த சதிஷ் (19), அருண் (21) மற்றும் பரணி (20) என்பதும், இதில் உயிரிழந்தது சதிஷ் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து சதிஷ் உயிரிழந்த குறித்து போலீசார் சதிஷின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையறிந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது உடல்நலம் பாதிக்கப்பட்ட சதிஷின் தாயார் சாந்தி (46) வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இதையறிந்த அடையாளம் தெரியாத இருவர், இருசக்கர வாகனத்தல் வந்து சதிஷ் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக சாந்தியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், சரமாரியாக சாந்தியை தாக்கி அவரிடமிருந்த தங்க நகைகளை பிடுங்கி சென்றுள்ளனர். இதையறிந்த உறவினர்கள் மீண்டும் மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 477

0

0