ஜல்லிக்கட்டு காளையை வளர்க்க வேண்டி விநோத ஆசை.! காளையை களவாடிய காளையர்கள்.!
7 August 2020, 4:41 pmமதுரை : ஜல்லிக்கட்டு காளை மீதான மோகத்தால் ஜல்லிக்கட்டு காளைகளை திருடிய மூன்று இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மதுரை கோமஸ்பாளையம் ரோஸ்மேரி தெரு பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் நீண்ட ஆண்டுகளாக அந்த பகுதியில் ஆடு மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நீண்ட ஆண்டுகளாக காளை மாடு வளர்க்க ஆசைப்பட்டு இவர் கடந்த மாதம் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள புதிய காளை மாடு ஒன்றை வாங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டு வாசலில் கட்டி வைத்திருந்த மாட்டினை இரவு நேரத்தில் அடையாளம் தெரியாதவர்கள் திருடிச் சென்றுள்ளனர். காலை எழுந்து பார்த்த மகாலிங்கம் அதிர்ச்சியடைந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதே பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் காளை மாட்டினை திருடிச் சென்றது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து மகாலிங்கம் கரிமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, கார்த்திக், தங்கவேலு மூன்று இளைஞர்களை தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் மூன்று இளைஞர்களும் ஏற்கனவே மாடு திருடப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் எனவும் மாடு வளர்க்க வேண்டும் என்ற மோகத்தால் இதுபோன்ற மாடுகளை இரவு நேரங்களில் திருடி வருவதும் தெரியவந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து அதே பகுதியில் காளை மாட்டை மறைத்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஒரு மணி நேரத்தில் மாட்டினை மீட்டு அழைத்து வந்து மாட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.தலைமறைவாக உள்ள மூன்று இளைஞர்களையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.