25 கிமீ வரை செல்லும் பேட்டரி சைக்கிள் | 13 வயதில் அசத்திக்காட்டிய ராமநாதபுரம் சிறுவன்

7 September 2020, 1:21 pm
A-13-year-old-boy-found-a-battery-powered-bicycle-in-Ramanarapuram
Quick Share

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சிவசங்கர் பேட்டரியில் இயங்கும் சைக்கிளைக் கண்டுபிடித்துத் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். கொரோனா விடுமுறையில் போனிலும் கேமிலும் பொழுதைப் போக்காமல் தன் ஆராய்ச்சிகளுக்கான நாட்களாக மாற்றிக்கொண்ட சாதனைச் சிறுவன் சிவசங்கரைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி ஒன்றியத்தில் ராமசாமிபட்டி எனும் கிராமத்தை சேர்ந்தவர் தான் மாணவர் சிவசங்கர். இவரின் பெற்றோர் பாண்டி – ஸ்ரீதேவி தம்பதியினர் ஆவர். ராமசாமிபட்டி கிராமத்திலேயே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார் சிவசங்கர். தனது பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் தண்ணீர் வீணாகாமல் இருக்க பேட்டரி மூலம் செயல்படும் சிறிய அளவிலான நீரூற்று, கலப்பைகள், டிராக்டர் டேங்கர், மற்றும் அறுவடை இயந்திரங்களை போன்றவற்றை தயாரித்து, மாவட்ட அளவில் பல பரிசுகளை வென்று பல சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறான் இந்த சாதனைச் சிறுவன்.

தற்போது கொரோனா காரணமாக கிடைத்துள்ள விடுமுறையில் வீணாக நாட்களை கடத்தாமல் சூரிய ஒளி மூலம் இயங்கும் கார் ஒன்றை தயாரிக்க போவதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு சிவசங்கரின் பெற்றோர், இப்போது பள்ளிக்கு சைக்கிளில் தானே சென்று வருகிறாய் அதனால் முதலில் சைக்கிளை பேட்டரியால் அல்லது சூரிய ஒளியால் இயங்கும்படி வடிவமைத்துக்காட்டு, அதன் பிறகு செலவு அதிகமாக ஆகும் காரை பேட்டரியால் இயக்குவதை முயற்சிக்கலாம் என்று ஊக்கப்படுத்தியுள்ளனர்.

எதுவாக இருந்தால் என்ன, என்னால் முடியும் என்று முயன்ற மாணவன் சிவசங்கர், தனது சைக்கிளில் 12 வோல்ட் 9 ஆம்சில் இயங்கும் இரண்டு பேட்டரிகளை 4 ஆயிரம் ரூபாய்க்கும், ஆக்ஸிலேட்டர் உட்பட மற்ற உபகரணங்களை ஆன்லைனில் 7,200 ரூபாய்க்கும், சார்ஜரை ஆயிரம் ரூபாய்க்கும் வாங்கி, அவற்றை  சீராக பொருத்தி தனது சாதாரண சைக்கிளை பேட்டரியில் இயங்கும் மின்சார சைக்கிளாக மாற்றி சாதனை படைத்துள்ளார்.

இரண்டு பேட்டரிகளையும் 4 மணிநேரம் வரை சார்ஜ் ஏற்றினால், 25கி.மீ. தூரம்வரை செல்லலாம் என்று மாணவன் சிவசங்கர் கூறியுள்ளார். மாணவனின் சொந்த ஊரான ராமசாமி பட்டியிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் பள்ளிக்கு தினமும் இந்த மின்சார சைக்கிளிலேயே சென்று வர திட்டமிட்டுள்ளார் சிவசங்கர்.

என் கண்டுபிடிப்புகளுக்கு என் அம்மாவும் அப்பாவும் கொடுத்த ஊக்கமும் அவர்கள் என்மீது வைத்த நம்பிக்கையுமே காரணம் என்றும் கூறியுள்ளார் மாணவன் சிவசங்கர். துவக்கத்தில் தான் சூரிய ஒளியினால் இயங்கும் காரையே தயாரிக்க ஆசைப்பட்டதாகவும், பொருளாதார சிக்கல் காரணமாக, இப்போதைக்கு இந்த பேட்டரி சைக்கிளை தான் தயாரித்துள்ளதாகவும் கூறியுள்ளான் சிவசங்கர். பொருளாதார உதவி கிடைத்தால், சூரிய ஒளியால் இயங்கும் காரை தன்னால் வடிவமைக்க முடியும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளான் சிவசங்கர். 

விரைவில், சிவசங்கரின் கனவு நிறைவேற நாமும் வாழ்த்துவோம். 

Views: - 0

0

0

1 thought on “25 கிமீ வரை செல்லும் பேட்டரி சைக்கிள் | 13 வயதில் அசத்திக்காட்டிய ராமநாதபுரம் சிறுவன்

Comments are closed.