தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகை அன்னமழகி பற்றிய ஒரு பதிவு!!!

22 January 2021, 9:34 pm
Quick Share

பாரம்பரியமாக நமது முன்னோர்கள் பின்பற்றி வந்த விஷயங்கள் பல  இப்போது காணாமல் போய் விட்டது. இப்போது இருக்கும் தலைமுறையினருக்கு எல்லாமே ஃபாஸ்டாக நடக்க வேண்டும். இன்ஸ்டன்ட் காபி முதல் இன்ஸ்டன்ட் அரிசி வரை இப்போது வந்தாச்சு…. அதில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வரும் ஒன்று தான் நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகள். அப்படி சிறப்பு வாய்ந்த ஒரு நெல் வகை தான் அன்னமழகி. இந்த நெல் வகையைப்பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.

தமிழ்நாட்டில் அன்னமழகி: 

அன்னமழகி தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நெல் வகை. இது ஒரு இனிப்பு சுவை கொண்ட ஒரு நெல் வகை.  இது தமிழ்நாட்டில் எங்கு அதிகம் வளர்க்கப்பட்டது மற்றும் இதன் சாகுபடி பற்றிய விவரங்கள் எதுவும் சரியாக இல்லை. இந்த தித்திப்பான அரிசி வகையை நம் முன்னோர்கள் பல காலமாக சாப்பிட்டு வந்துள்ளனர். ஆனால் தற்போதைய தலைமுறைக்கு இப்படி ஒரு நெல் வகை இருக்கு என்பது கூட தெரியாமல் போய்விடும் போல உள்ளது. ஏனெனில் ஏராளமான நன்மைகள் அடங்கிய இந்த நெல் வகை தற்போது புழக்கத்தில் இல்லை என்பது வருத்தத்தை தரக்கூடிய விஷயம் ஆகும். இது ஒரு புல் வகை தாவரம் ஆகும். இதனை பண்டைய தமிழர்கள் பயன்படுத்தினார்கள் என்பது அகத்திய முனிவர் இதைப்பற்றி தனது பாடலில் கூறியுள்ளதன் மூலம் தெரிகிறது. அந்த பாடல் இதோ உங்களுக்காக:-

“அன்ன மழகியரி ஆரோக்கிய

ங்கொடுக்குந்

தின்ன வெகுரிசியாஞ்

செப்பக்கேள்- இந்நிலத்து

நோயனைத்துந் தூளாய்

நொறுங்கத் தகர்த்துவிடுந்

தீயனலைப் போக்குந் தெளி.”

பாடலுக்கான பொருள்:

அதிகப்படியான சுவை மிகுந்த அன்னமழகி நெல் பித்த வெப்பத்தை போக்கி, மனித உடலுக்கு தேவையான அத்தனை சுகத்தையும் கொடுக்கும் தன்மை கொண்டது. 

அன்னமழகி நன்மைகள்:

*ஒரு சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாகும். இதற்கு அன்னமழகி அரிசியை சமைத்து அதனோடு மோர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். 

*மேலும் வயிற்று போக்கு, தண்ணீர் தாகம் போன்றவற்றிற்கு அன்னமழகி அரிசி சாதத்தோடு மோர் கலந்து குடித்து வரும்போது அது ஒரு அருமருந்தாக அமைகிறது.

*இந்த சாதத்தை இரவில் தண்ணீர் ஊற்றி வைத்து அந்த நீராகாரத்தை பருகி வர ஆண்மை அதிகரிக்கும். 

*அன்னமழகி அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடல் மினுமினுப்பாக இருக்கும். 

*முக்கியமாக அன்னமழகி அரிசிக்கு வெறிநோயை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. 

*பித்தம், உடல் உஷ்ணம், மனபிரம்மை, தூக்கமின்மை போன்றவற்றிற்கு இது மருந்தாக கருதப்படுகிறது.

*இந்த சாதத்தை அதிக அளவில் சாப்பிட்ட பிறகு கண்கள் சொக்கி உடனடியாக தூக்கம் வந்துவிடும். 

இத்தகைய நன்மை வாய்ந்த ஒரு நெல் வகையை இன்றைய தலைமுறை நிச்சயமாக மிஸ் பண்ணுவார்கள். எனவே எஞ்சி இருக்கும் நம் பாரம்பரிய உணவுகளையாவது இனி பாதுகாப்போம்.