ஐபோன் 12 சீரிஸ் 5G போன்களின் செலவுகளைக் குறைக்க இதைத் தான் செய்யப்போகிறதா ஆப்பிள்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
21 August 2020, 7:25 pmஆப்பிள் நிறுவனத்தின் வரவிருக்கும் ஐபோன் 12 சீரிஸ் பற்றி மூலை முடுக்கெல்லாம் பேச்சாக உள்ளது. ஐபோன் 12 தொடரின் பல அம்சங்கள் இன்னும் மர்மமாகவே உள்ளன, ஆனால் 5ஜி ஆதரவு இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குவோவின் புதிய அறிக்கை, ஆப்பிள் 5ஜி செலவில் சிலவற்றை குறைக்க மலிவான பேட்டரி வடிவமைப்புகளுடன் மாற்றுவதன் மூலம் ஈடுசெய்யக்கூடும் என்று குறிப்பிடுகிறது.
மலிவான பேட்டரியுடன் ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ்?
சந்தையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஏராளமாக உள்ளன, மேலும் அவை அவற்றின் 4ஜி மாடல்களை விட மிகவும் விலை உயர்ந்தவை என்பதையும் நாம் அறிவோம். மேலும், ஐபோன் வரிசையைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை, அவை எப்போதுமே ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப்களை விட விலை உயர்ந்தவை தான். 5ஜி சேர்க்கப்பட்ட நிலையில், வரவிருக்கும் ஆப்பிள் தயாரிப்பு நிச்சயமாக வாங்குபவரின் பாக்கெட்டைப் பதம் பார்க்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
பெருகிவரும் செலவை ஈடுசெய்ய, ஆப்பிள் ஐபோன் 12 தொடருக்கு மலிவான பேட்டரி வடிவமைப்பைப் பயன்படுத்தலாம். குவோவின் சமீபத்திய முன்கணிப்பு அறிக்கை இதைத் தான் தெரிவிக்கிறது. 5ஜி ஆதரவைச் சேர்ப்பதற்கு ஒரு ஐபோனின் விலை $85 வரை கூடுதலாக அதிகரிக்கக்கூடும் என்பதை சிறப்பிக்கும் ஒரு சப்ளையர் தரவை அறிக்கை மேற்கோள்காட்டுகிறது. 5ஜி ஆதரவுக்காக மில்லிமீட்டர்-வேவ் சேர்ப்பதற்கு செலவு மேலும் $135 ஆக உயரக்கூடும்.
உபகரணங்களின் விலையைக் குறைக்க ஆப்பிள் தனது சப்ளையர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கைகள் நம்பப்பட வேண்டுமானால், ஐபோன் 12 தொடரின் ஒட்டுமொத்த செலவைக் குறைக்க எளிய பேட்டரி வடிவமைப்பைப் பயன்படுத்த நிறுவனம் இப்போது திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வரவிருக்கும் ஐபோனின் பேட்டரி போர்டு விவரக்குறிப்புகள் குறைந்த எண்ணிக்கையிலான அடுக்குகளையும் சிறிய பகுதிகளையும் கொண்டுள்ளது.
செயல்திறன் எப்படி இருக்கும்?
இங்கே மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பேட்டரி என்பது கடின பலகை வடிவமைப்பை அகற்றி மென்மையான பலகை பேட்டரி வடிவமைப்பைத் தேர்வுசெய்கிறது. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பேட்டரி மூலம், ஆப்பிள் ஐபோன் 11 தொடருடன் ஒப்பிடும்போது 40-50 சதவிகிதம் செலவுகளைக் குறைக்க முடியும் என்று குவோ குறிப்பிடுகிறார். இருப்பினும், இது பேட்டரியின் செயல்திறன் குறையுமோ என்ற கேள்வியை எழுப்புகிறது.
5ஜி ஸ்மார்ட்போன் 4ஜி போன்களை விட வேகமாக பேட்டரியைத் தீர்க்கக்கூடும் என்று பயனர்கள் எண்ணுகின்றனர். ஆப்பிள் உண்மையில் மலிவான பேட்டரி வடிவமைப்பிற்கு மாறினால், அது பேட்டரியின் செயல்திறனில் சமரசம் செய்யாது என்று நம்புகிறோம். சொல்லப்போனால், இந்த தகவல் இப்போதைக்கு வெறும் வதந்தியாகவே உள்ளது. இது முழுமையாக உண்மையான தகவலாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பதையும் அறிவுறுத்துகிறோம்.