FAME II மானியம் அதிகரிப்பு | மேலும் விலை குறையும் மின்சார இரு சக்கர வாகனங்கள் | விவரங்கள் இங்கே

14 June 2021, 8:08 pm
Electric two-wheelers now more affordable after govt revises FAME II subsidies
Quick Share

இந்தியாவில் மின்சார வாகனங்களை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க செய்வதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட FAME II திட்டத்தின் கீழ், மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான மானியத்தை அதிகரிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ள நிலையில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியானது மக்களுக்கு மகிழ்ச்சியை வழங்கியுள்ளது.

கனரக தொழில்துறை திணைக்களம் (Department of Heavy Industry) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மின்சார இருசக்கர வாகனங்களுக்கான ஊக்கத்தொகை கிலோவாட் ஒன்றுக்கு 10000 ரூபாயிலிருந்து  ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, முந்தைய மானிய விகிதத்திலிருந்து கிலோவாட் ஒன்றுக்கு ரூ.5,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை இந்தியாவில் மின்சார இரு சக்கர வாகனங்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்கப்படும். இந்த  அறிவிப்பு வெளியானதை அடுத்து இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்சார இரு சக்கர உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஏதர் எனர்ஜி, அதன் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையைக் குறைப்பதாக அறிவித்து பயனர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை வழங்கியுள்ளது.

FAME II மானிய திருத்தத்திற்குப் பிறகு ஏதர் 450X இப்போது, ரூ.14,500 விலைக் குறைக்கப்பட்டு கிடைக்கும் என்று ஏதர் எனர்ஜி அறிவித்துள்ளது. 

FAME-II திட்டத்தின் கீழ் இதுவரை ஒதுக்கப்பட்ட ரூ.10,000 கோடி மானியத்தில், இரு சக்கர வாகனங்கள் அதுவும் குறிப்பாக இ-ஸ்கூட்டர்கள் தான் மிகப்பெரிய அளவில் பயனடைந்துள்ளன. இருப்பினும், அனைத்து மின்சார இரு சக்கர வாகனமும் இந்த திட்டத்திலிருந்து பயனடைய முடியாது. CRISIL இன் அறிக்கையின்படி, இந்தியாவில் சுமார் 95% மின்சார ஸ்கூட்டர்கள் FAME-II மானியத்திற்கு தகுதியற்றவையாகவே உள்ளன.

இந்த திட்டத்தின் படி, பயனடைய விரும்பும் மின்சார இரு சக்கர வாகனங்கள் FAME II நன்மைகளுக்கு தகுதி பெறுவதற்கு குறைந்தபட்ச உயர் வேகம், சார்ஜிங் வரம்பு, முடுக்கம் மற்றும் ஆற்றல் நுகர்வு திறன் போன்ற சில அளவுருக்களைக் கொண்டிருக்க வேண்டும். எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறைந்தபட்சம் 80 கி.மீ தூரத்தை ஒரே சார்ஜிங் உடன் வழங்கக்கூடியதாக இருக்க வேண்டும் மற்றும் மானியத்திற்கு தகுதி பெற குறைந்தபட்சம் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியதாக இருக்க வேண்டும்.

FAME-II விதிமுறைகளின்படி, 250 வாட் மின்சார மோட்டாரால் இயங்கும் அதிவேக மின்சார ஸ்கூட்டர்கள் மட்டுமே 25 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும் வேகம் கொண்டவை, FAME-II மானியத்திற்கு தகுதியுடையவை, இது மின்சார ஸ்கூட்டரின் விலையைப் பொறுத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மின்சார வாகன பயன்பாடு மெதுவாகவே அதிகரித்து வருகிறது. ஏனெனில் சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக அரசாங்கம் கேட்கும் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டியிருப்பதால் பூஜ்ஜிய-உமிழ்வு மாடல்களுக்கான தேவை இரு மற்றும் முச்சக்கர வண்டி பிரிவுகளில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 367

4

0