“நாங்களும் முயற்சி செய்யுறோம்…. ஆனா இந்தியாவுல..” எலோன் மஸ்க் வேதனையாக கூறியது என்ன? | Elon Musk Replied Madan Gowri

Author: Dhivagar
24 July 2021, 10:53 am
Elon Musk's Reply On Launching Tesla In India
Quick Share

உலகெங்கிலும் பிரபலமான டெஸ்லா கார்களை இந்தியாவிலும் சீக்கிரமாக அறிமுகம் செய்ய வேண்டும் என்று பிரபல யூடியூபர் ஆன மதன் கௌரி ட்விட்டரில் டெஸ்லா நிறுவன தலைவரான எலோன் மஸ்க் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் இந்தியாவில் வெற்றி அடைந்தால் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஒரு தொழிற்சாலையை அமைக்க வாய்ப்புள்ளது என்று தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் முன்னதாக தெரிவித்திருந்தார். 

ஆனால், இப்போது மதன் கௌரியின் கோரிக்கைக்கு பதில் அளித்த எலோன் மஸ்க், நாங்களும் இந்தியாவிற்கு டெஸ்லா கார்களை கொண்டு வர தான் முயற்சிக்கிறோம்.  ஆனால் இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் அதிக அளவிலான இறக்குமதி வரி காரணமாக இது சாத்தியமற்றதாகிறது. 

உலகில் இருக்கும் நாடுகளிலேயே அதிக இறக்குமதி வரி வசூலிக்கும் நாடு இந்தியா தான் என்று வேதனை தெரிவித்துள்ளார். அதோடு, தூய்மையான எரிசக்தி உடன் இயங்கும் வாகனங்களுக்கும் கூட பெட்ரோல் டீசல் கார்களைப் போல மிக அதிக அளவிலான வரி வசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் மின்சார கார்களுக்காவது வரிச்சலுகை கிடைக்கும் என நம்புகிறோம் என்று எதிர்பார்ப்புடன் எலோன் பதிலளித்துள்ளார். 

இந்தியாவின் இறக்குமதி வரி குறித்து எலோன் மஸ்க் ஏற்கனவே பல முறை கருத்து தெரிவித்துள்ளார். தற்போதைய இறக்குமதி வரி நிலவரப்படி, $40000 விலைக்கும் குறைவாக இருக்கும் கார்களுக்கு 60% இறக்குமதி வரியும், $40000 மேல் விலை கொண்டிருக்கும் கார்களுக்கு 100% இறக்குமதி வரியும் வசூலிக்கப்படுகிறது. 

இறக்குமதி செய்வதற்கான கூட்டாட்சி வரிகளை 40% குறைத்தால் மட்டுமே இந்தியாவில் விற்பனை லாபகரமானதாக இருக்கும் என்று இந்திய அமைச்சர்கள் மற்றும் நிதி ஆயோக் ஆகியோருக்கு அளித்த கடிதத்தில் டெஸ்லா குறிப்பிட்டுள்ளது.

டெஸ்லா மாடல் 3 ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் மட்டுமே இப்போதைக்கு $40000 க்கும் குறைவான விலை கொண்டுள்ளது. மற்ற அனைத்து கார்களும் விலை உயர்ந்தவை. 

இது குறித்து கடந்த மார்ச் மாதம் கருத்து தெரிவித்த நிதின் கட்கரி, சீனாவில் இருப்பதை விட டெஸ்லாவின் உற்பத்தி செலவுகளை இந்தியாவில் குறைக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு உள்நாட்டிலேயே கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் டெஸ்லா தனது கார்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Views: - 949

0

0