பொறியாளர் தினம் 2020: இந்தியாவின் இதயத்தில் குடியிருக்கும் ஐந்து பொறியாளர்கள்
15 September 2020, 9:51 pmபொறியாளர் தினம் ஆன செப்டம்பர் 15 அன்று, நவீன இந்தியாவின் கட்டமைப்புக்கு அடித்தளமிட்ட முக்கிய பொறியியலாளர்களை நாம் கொண்டாடுகிறோம். உலகெங்கிலும், நாடுகள் பொறியாளர் தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடுகின்றன, இந்த தினத்தில் தங்கள் சொந்த நாடுகளின் முக்கியஸ்தர்களை அந்தந்த நாடுகள் கௌரவிக்கின்றன. இப்போது நாம் அனுபவிக்கும் பல தொழில்நுட்ப அற்புதங்களை கண்டுபிடித்து நமக்காக விட்டுச்சென்ற சில உயர்ந்த மனிதர்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. சர் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா
செப்டம்பர் 15, 1860 இல் பிறந்த சர் எம். விஸ்வேஸ்வரய்யா ஹைதராபாத் நகரத்திற்கு வெள்ளப் பாதுகாப்பு முறையை உருவாக்கிய பின்னர் அவர் பிரபலமானார். எம் விஸ்வேஸ்வரய்யா ஒரு சிவில் இன்ஜினியர் ஆவார், இவர் மைசூருவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் தலைமை பொறியாளராக பணியாற்றினார். அணை கட்டப்பட்ட நேரத்தில் ஆசியாவின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக இருந்தது. மைசூருவின் திவானாகவும் ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். 1955 ஆம் ஆண்டில், அவருக்கு நாட்டின் மிக உயர்ந்த கௌரவமான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
2. சதீஷ் தவான்
சோதனை திரவ இயக்கவியலில் ஆராய்ச்சியின் தந்தை என்று கருதப்படும் சதீஷ் தவான் ஒரு கணிதவியலாளர் மற்றும் விண்வெளி பொறியியலாளர் ஆவார். டர்புலென்ஸ் மற்றும் பௌண்டரி லேயர் துறையில் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி உள்நாட்டு விண்வெளி திட்டத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது. ஸ்ரீஹரிகோட்டா செயற்கைக்கோள் ஏவுதல் மையம் அவருக்குப் பிறகு சதீஷ் தவான் விண்வெளி மையம் என மறுபெயரிடப்பட்டது. அவருக்கு பத்மா விபூஷன் மற்றும் பத்ம பூஷண் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டது.
3. A. P. J. அப்துல் கலாம்
அவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம் ஒரு இந்திய விண்வெளி விஞ்ஞானி ஆவார், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ஆகியவற்றில் பணிபுரிந்தவர்களில் மிகவும் முக்கியமானவர் இவர். சிவில் விண்வெளி திட்டத்திற்காக இவர் பெரிதும் பாராட்டப்பட்டார். பாரத ரத்னா விருது பெற்ற கலாம் பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கி வாகன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதற்காக இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்.
4. இ.ஸ்ரீதரன்
எலட்டுவலபில் ஸ்ரீதரன் மெட்ரோ மனிதன் என்று நினைவுகூரப்படுகிறார். அவர் ஒரு இந்திய சிவில் இன்ஜினியர், கொங்கன் ரயில்வே மற்றும் டெல்லி மெட்ரோவை கட்டிய பெருமைக்குரியவர். 1995 முதல் 2012 வரை டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராக இருந்தார். அவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் விருதுகளை வழங்கியது.
5. என்.ஆர்.நாராயண மூர்த்தி
நாகாவர ராமராவ் நாராயண மூர்த்தி இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸின் இணை நிறுவனர் ஆவார். கர்நாடகாவில் பிறந்த இவர் மைசூர் பல்கலைக்கழகத்தின் தேசிய பொறியியல் நிறுவனத்தில் பட்டம் பெற்றார். கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்திலிருந்து முதுகலைப் பெற்றார். மூர்த்தி இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தந்தை என்று அறியப்படுகிறார். அவருக்கு பத்ம விபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை விருதுகளை வழங்கி இந்திய அரசு கௌரவித்துள்ளது.
0
0