மொபைலைக் கடைகளில் வேலை செய்ய கொடுக்கும் போது மறக்காமல் இந்த விஷயங்களை எல்லாம் செய்யுங்கள்!
19 September 2020, 8:49 pmஉங்கள் மொபைல் போனில் ஏதேனும் குறைபாடு இருந்தால், மக்கள் அதை ஒரு சேவை மையத்திற்கு தான் எடுத்துச் செல்ல வேண்டும். ஏதேனும் சின்ன சிக்கல் என்றால் உடனே உங்கள் கண் முன்னமே வேலை முடிந்துவிடும். ஏதேனும் பெரிய பிரச்சினை என்றால் உங்கள் போனை பழுதுபார்க்கும் மையங்களிலேயே கொடுக்க வேண்டி இருக்கலாம். அது, போன்ற சமயத்தில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் போனில் இருந்தால் உங்களுக்கு சற்று கலக்கமாகவே இருக்கும். கொடுத்துவிட்டு பின்னர் வருத்தப்பட வேண்டியிருக்கும். எனவே, அவ்வாறு கொடுப்பதற்கு முன், உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டும். அவை என்னவென்று தான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்.
ஸ்மார்ட்போன்களில் மக்கள் இணைய வங்கி சேவையை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால், முதலில் உங்கள் வங்கி தொடர்பான தகவல்களை நீக்குங்கள் அல்லது மறைத்து வையுங்கள். அதாவது, பலர் Password மற்றும் அக்கவுண்ட் நம்பர் போன்ற தகவல்களை தங்கள் மொபைல் போன்களிலேயே சேமிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், மறந்துவிடுமோ என்று மக்கள் தங்கள் ஏடிஎம் கார்டு PIN போன்றவற்றை தங்கள் மொபைல் போன்களிலேயே சேமிக்கிறார்கள். இந்த தகவல்களை சேவை மையத்தில் போனைக் கொடுக்கும் முன்பு ஒரு டைரியில் எழுதி வைத்துவிட்டு நீக்கிவிட வேண்டும்.
அது போன்ற தகவல்கள் தெரிந்தாலும், அதிக பயன்படுத்த முடியாத வகையில் ஆப் லாக் போன்ற அம்சங்களைப் பயன்படுத்தலாம். இப்போதெல்லாம் ஆப் லாக் என்பது எளிதாக பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் கிடைக்கின்றது. இதனுடன், பல ஸ்மார்ட்போன்களிலும் in-built ஆகவும் ஆப் லாக் அம்சம் வழங்கப்படுகிறது. உங்கள் ஸ்மார்ட்போனை சேவை மையத்தில் கொடுப்பதற்கு முன், அதைப் முக்கியமான அனைத்து பயன்பாடுகளையும் பூட்டி விடுங்கள். இதன் மூலம், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தொடர்புகள் போன்றவற்றை யாரும் அணுக முடியாது, மேலும் உங்கள் எல்லா தரவும் பாதுகாப்பாக இருக்கும்.
ஆன்லைன் கட்டணம் செலுத்த பெரும்பாலான மக்கள் போன்பே, கூகிள் பே மற்றும் பேடிஎம் போன்ற பயன்பாடுகளையே பயன்படுத்துகின்றனர். உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது ஐபோனை சேவை மையத்தில் கொடுப்பதற்கு முன்பு இந்த எல்லா பயன்பாடுகளையும் நீக்கிவிடுங்கள் அல்லது மறைத்து வைத்து விடுங்கள். பணம் போய்விட்டதே என்று வருத்தப்படுவதற்கு பதிலாக இரண்டு நிமிடத்தில் இந்த செயலிகளை setup செய்து கொள்ளலாம்.
மொபைல் போனை SIM உடன் கொடுக்க வேண்டாம். ஏனெனில், யார்வேண்டுமானாலும் உங்கள் மொபைல் எண்ணைத் தவறாக பயன்படுத்திவிடக்கூடும். வங்கி தொடர்பான மற்றும் பிற பயன்பாடுகளைப் பயன்படுத்த உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு தான் OTP வரும் என்பதால் உங்கள் பணம் திருடுபோகவும் வாய்ப்புண்டு.
உங்கள் ஜிமெயில் ID யிலிருந்து log out செய்து விடுங்கள். வங்கி தொடர்பான அலுவலக வேலைகள் தொடர்பான மின்னஞ்சல்கள் உங்கள் ஜிமெயில் ஐடியில் தான் வந்திருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், மொபைல் தொலைபேசியை சேவை மையத்தில் கொடுக்கும்போது, உங்கள் அலுவலக தகவல்களை யார் வேண்டுமானாலும் பார்த்துவிடக்கூடும். ஜிமெயில் மட்டுமல்ல, உங்கள் பேஸ்புக்கிலிருந்தும் நீங்கள் log out செய்துவிட வேண்டும். இந்த விஷயங்களை எல்லாம் செய்து முடித்தபின், உங்கள் மொபைல் போனை சேவை மையத்தில் எந்தவித பயமும் இல்லாமல் கொடுக்கலாம்.