3D முறையில் பட்டமளிப்பு விழா ! புது ஸ்டைலில் அசத்திய ஐ.ஐ.டி
25 August 2020, 1:30 pmஐ.ஐ.டி பம்பாய் கல்லூரியின் கண்டுபிடிப்புகளும் மற்றும் புதுப்புது திட்டங்களும் நம்மை எப்போதுமே ஆச்சரியப்படுத்த தவறியதே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இந்த நேரத்தில் ஒரு புதுமையான நிகழ்வொன்றுக்கு வழிவகுத்த கொரோனா தொற்றுநோய்க்குத் தான் நாம் நன்றிகளைச் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு மாணவர்களும் பரீட்சைகள் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பற்றிய சிந்தனையுடன், கூடவே இந்தாண்டு கல்லூரியை விட்டு வெளியேறுவது குறித்த கவலையுடன் இருக்கும் வேளையில், ஐ.ஐ.டி பம்பாய் இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் மாணவர்களுக்கு ஒரு சிறப்பான தனித்துவமான பட்டமளிப்பு விழாவிற்கென ஒரு ஆப்பை உருவாக்கியது.
அதன் மூலம், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஐ.ஐ.டி பம்பாய் தனது 58 வது வருடாந்திர பட்டமளிப்பு விழாவை Virtual Reality முறையில் நடத்தி முடித்தது.
இந்த சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ‘ஐ.ஐ.டி பாம்பே கான்வோகேஷன் 2020’ (‘IIT Bombay Convocation 2020’) எனும் ஆப் மூலம் நடைபெற்ற நிகழ்வு ஒரு முன்னணி பொறியியல் நிறுவனத்திலிருந்து வெளியேறும் போது இந்த விழா மாணவர்களுக்கு ஒரு பெருமையான நிகழ்வாகவும் மற்றும் கூடுதல் சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு, இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளில் சேர்ந்தவர்கள் உட்பட 2400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிறுவனத்தில் இருந்து பட்டம் பெற்று உள்ளனர்.
மொத்தமாக பட்டம்பெற்றவர்களில், 1200 மாணவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து விழாவில் பங்கேற்க கல்லூரி நிறுவனத்தின் ஆப்பைப் பயன்படுத்தினர். பயன்பாட்டை அணுக முடியாத மாணவர்கள் நிறுவனத்தின் சமூக ஊடகங்கள் மற்றும் டி.டி. சஹ்யாத்ரி (DD Sahyadri) ஆகியவற்றில் நேரலையில் வெளியான ஒளிபரப்பு மூலம் விழாவைக் கண்டுகளித்தனர்.
இந்த விழா வெறும் ஜூம் அழைப்பு போன்ற வழக்கமான நிகழ்வு அல்ல, மாறாக, மாணவர்கள் ஒவ்வொருவரும் 3D அவதாரங்கள் வழியாக தங்களது பட்டங்களைப் பெறுவதைக் காண முடிந்தது. இந்த செயலியின் கூடுதல் அம்சம் என்னவென்றால், இது இயங்க இன்டர்நெட் சேவை என்பது தேவையில்லை.
உண்மையான பட்டமளிப்பு விழாவின் உணர்வை மாணவர்களுக்கு வழங்க, செனட் முதல் இன்ஸ்டிடியூட் பாடல் வரை அனைத்தும் சேர்க்கப்பட்டு, நிகழ்வின் போது ஒளிபரப்பப்பட்டது. COVID-19 காரணமாக நேரடி தொடர்பைத் தவிர்த்து பாதுகாப்பு விதிமுறைகளைப் பேணும் இது போன்ற நிகழ்வு மிகவும் வரவேற்கக்கூடியதுதான். ஆனால், காலம்காலமாக நேரடியாக நடக்கும் நிகழ்வு நடக்காமல் போனதே என்ற மணவருத்தமும் மாணவர்களுக்கு இல்லாமல் இல்லை.
0
0