டிக்டாக்கின் அமெரிக்க வணிகத்தை கைப்பற்றும் மைக்ரோசாப்ட்..? தடையிலிருந்து தப்பிக்க பேச்சுவார்த்தை..!

1 August 2020, 12:44 pm
Tiktok_UpdateNews360
Quick Share

மைக்ரோசாப்ட் நிறுவனம் சீனர்களுக்கு சொந்தமான டிக் டோக்கின் அமெரிக்க வணிகத்தை வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேசிய பாதுகாப்பு கவலைகள் காரணமாக டிக்டாக் செயலியை தடை செய்வதை அமெரிக்கா கருத்தில் கொண்டு இந்த அறிக்கைகள் வெளிவந்தன. 

ஒரு சில செனட்டர்கள் டிக்டாக் செயலியை தடை செய்ய விரும்புகிறார்கள் அல்லது தணிக்கைக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பதை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ, ஜூலை மாதம் டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சத்யா நாதெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் டிக்டாக்கின் அமெரிக்க வணிகத்தை கைப்பற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. திங்கள்கிழமைக்குள் இது தொடர்பான ஒரு ஒப்பந்தத்தை முடிக்க முடியும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பேச்சுவார்த்தைகளில் மைக்ரோசாப்ட், பைட் டேன்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையின் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் டிக்டாக் தடை குறித்து ஆய்ந்து வருவதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது. “நாங்கள் டிக்டாக்கை தடைசெய்திருக்கலாம். ஆனால் டிக்டாக்கைப் பொறுத்தவரை நாங்கள் பல மாற்று வழிகளைப் பார்க்கிறோம்.” என்று அவர் கூறினார். மைக்ரோசாப்ட் மற்றும் டிக்டாக்கின் செய்தித் தொடர்பாளர்கள் இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ கருத்துக்களும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், அது வெள்ளை மாளிகையின் அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படும். மேலும் மைக்ரோசாப்ட் சமூக ஊடகங்களில் ஒரு முக்கிய நிறுவனமாக மாறும். இருப்பினும், எந்தவொரு பரிவர்த்தனையும் ஒழுங்குமுறை தடைகளை எதிர்கொள்ளக்கூடும். பைட் டேன்ஸ் 2017’இல் அமெரிக்க நிறுவனமான மியூசிக்கலியை வாங்கி டிக்டாக் உடன் இணைத்தது.

உலகளவில் 2.3 பில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்ட டிக்டாக் சமீபத்தில் 30 பில்லியன் டாலருக்கும் 50 பில்லியன் டாலருக்கும் இடையில் மதிப்பிடப்பட்டது. சமூக வலைப்பின்னலில் தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய இருப்பு லிங்க்ட்இன் என்பதால், இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நடைபெற்றால், மைக்ரோசாப்ட் இந்த துறையில் ஒரு பெரிய பாய்ச்சலை எடுக்கக்கூடும்.

வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகையில், டிக்டாக் செயலியின் உரிமையை பைட் டான்சிடமிருந்து கைப்பற்றி அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றி விடவே டிரம்ப் நிர்வாகம் அதிக முயற்சி எடுக்கும் என தெரிவித்துள்ளன.

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் டிக்டாக்கை வாங்க அல்லது முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாக பல தகவல்கள் வந்துள்ளன. 

டிக்டாக்கை வாங்குவதில் மைக்ரோசாப்டின் ஆர்வம் ஃபாக்ஸ் பிசினஸ் நியூஸால் முன்னர் தெரிவிக்கப்பட்டது. இது வெற்றிகரமாக நடந்தால், அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு எந்த தடையும் விதிக்கப்படாது என மேலும் கூறப்படுகிறது.

Views: - 57

0

0