சீட்டுக்கட்டு – 5ஜி அலைக்கற்று- மின்சாரம் | காற்றிலிருந்து மின்சாரம்… அசத்தும் ஆராச்சியாளர்கள்!
3 April 2021, 1:20 pmதென்கொரியா, ஜெர்மனி, அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே 5ஜி அலைவரிசை பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் 5ஜி சேவையை விரைவில் அறிமுகம் செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த 5ஜி சேவை வந்தால், அதிக இணைய வேகத்துடன் தெளிவான தகவல் தொடர்பு இருக்கும் என்று மட்டுந்தான் நாம் நினைக்கிறோம். ஆனால், 5ஜி அலைக்கற்றிலிருந்து மின்சாரமும் கூட தயார் செய்ய முடியும் என்று அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் உண்மையிலேயே இதை செய்ய முடியுமா என்ற சந்தேகம் நமக்கு எழும். அதற்கான விளக்கத்தையும் அவர்கள் அளித்துள்ளனர்.
இந்த 5ஜி அலைக்கற்று (Spectrum) மற்ற அதிர்வெண்களை விட அதிக மின்காந்த ஆற்றலைக் கொண்டுள்ளது. எனவே அதை பிரித்தெடுக்க மட்டுமே நமக்கு ஒரு தொழில்நுட்பம் தேவைப்பட்டது. அதற்கு செய்ய வேண்டியது எல்லாம் நாம் விளையாட பயன்படுத்தும் சீட்டு கட்டு அளவிலான ஒரு கார்டு மட்டுந்தான். ஒரு 3D printer உதவியுடன் அந்த கார்டில் ‘ஆண்டெனா சர்க்யூட்’ (Antenna Circuit) ஒன்றை அச்சிட வேண்டும். இந்த அச்சு, காற்றில் மிதக்கும் மின்காந்த அலைகளிலிருந்து 6 மைக்ரோவாட் மின்சாரம் வரை உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கும்.
இந்த அச்சிடப்பட்ட ஆண்டெனாவை ஒரு குறிப்பிட்ட திசையில் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. அச்சிடப்பட்ட சர்கியூட் நடுவில் இருக்கு ‘ராட்மேன்’ லென்ஸ் என்ற ஒரு கருவியானது அலைக்கற்றில் உள்ள மின்காந்த சிக்னல்களை குவிக்கும். இதன் மூலம், 590 அடி தூரத்தில் இருக்கும் ஒரு கருவி அனுப்பும் 5 ஜி அலைவரிசையிலிருந்தும் கூட மின்சார சக்தியை உருவாக்க முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த சாதனம் சிறிய சென்சார்களை இயக்க போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்வதை ஜார்ஜியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
0
0