அனைத்து மாடல்களுக்கும் 6 ஏர்பேக்குகள் அவசியம் | அமைச்சர் வேண்டுகோள் | இதனால் பயனர்களுக்கு பயனா? பாதிப்பா?

Author: Dhivagar
5 August 2021, 1:09 pm
Nitin Gadkari urges carmakers to standardise 6 airbags
Quick Share

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM) பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது, பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, அனைத்து மாடல் கார்களிலும் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக வழங்குமாறு தனியார் வாகன உற்பத்தியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

டிசம்பர் 31, 2021 முதல் அனைத்து கார்களிலும் இரண்டு ஏர்பேக்குகள் இருக்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

ஜூலை 1, 2019 முதல் அனைத்து பயணிகள் வாகனங்களிலும் ஒரு டிரைவர் ஏர்பேக் கட்டாயமாக்கப்பட்டது. அதையடுத்து இந்த ஆண்டு ஏப்ரல் 1, 2021 முதல், அறிமுகப்படுத்தப்படும் அனைத்து புதிய கார்களுக்கும் முன்பக்க பயணிகள் ஏர்பேக்குகள் கட்டாயமாக்கப்பட்டது. பின்பு கொரோனா காரணமாக அதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது, அதையடுத்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் அடைந்ததால் காலக்கெடு டிசம்பர் 31, 2021 வரை ஒத்திவைக்கப்பட்டது.

கூடுதல் ஏர்பேக்குகளை நிறுவுவது வாகனத்தின் விபத்து பாதுகாப்பை மேம்படுத்த உதவும், இருப்பினும் இதில் பல சவால்கள் உள்ளன. முதலில், விலை உயரக்கூடும். குறிப்பாக பட்ஜெட் பிரிவில் உள்ள குறைந்த விலையிலான வாகனங்களின் விலைகளும் உயரும். நுழைவு நிலை காரில் முன்பக்க ஏர்பேக் பொருத்த 5,000 முதல் 10,000 ரூபாய் வரை செலவாகும் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்படும் ஏர்பேக்குகளுக்கு செலவு மேலும் இரட்டிப்பாகும்.

கூடுதலாக, பாதுகாப்பை வழங்க இந்த ஏர்பேக்குகளை நிறுவுவதற்கு கார்களில் நிறைய மறுசீரமைப்பைச் செய்ய வேண்டியிருக்கும். இதனால் தற்போதுள்ள கார்களுக்கு இந்த பாதுகாப்பு ஏர்பேக்குகளை வழங்க முடியாமலும் போகலாம். மேலும், பல நிறுவனங்கள் தங்கள் பழைய மாடல்கள் அப்படியே இருக்க பாதுகாப்பு ஏர்பேக்குகள் பொருத்தப்பட்ட புது கார்களை மட்டுமே விற்பனைச் செய்ய முடியும்.

இப்போதும் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் சில மாடல்களில் ஆறு ஏர்பேக்குகளை வழங்குகிறார்கள், ஆனால் அவை எல்லாமே ஹை-எண்ட் மாடலாகவும் மிகவும் அதிக விலையிலானவையாகவும் உள்ளன. பட்ஜெட் பிரிவில் விற்பனை செய்யும் பிரபல கார் உற்பத்தியாளர்கள் யாருமே தற்போது ஆறு ஏர்பேக்குகளுடன் எந்த மாடல்களையும் விற்பனை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6 ஏர்பேக்குகள் பயன்படுத்துவது பயனர்களுக்கு பாதுகாப்பு தரக்கூடிய ஒன்றாக இருந்தாலும், கார்கள் விலைகள் எல்லாம் எந்த அளவுக்கு உயரபோகிறது, ஏற்கனவே சந்தையில் இருக்கும் மாடல்களில் இந்த பாதுகாப்பு அம்சம் எப்படி வரப்போகிறது என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

Views: - 368

0

0