ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் பண்ணாம எப்படி வாங்குறது? உங்களுக்கான பதில் இதோ! | Ola Test Ride | Ola S1 | Ola S1 Pro
Author: Hemalatha Ramkumar17 August 2021, 1:07 pm
OLA எலக்ட்ரிக் நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓலா மின்சார ஸ்கூட்டர்களை S1 மற்றும் S1 Pro ஆகிய இரண்டு வகைகளில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ரூ.499 விலைக்கு முன்பதிவு செய்யலாம். இந்த மின்சார ஸ்கூட்டர் செப்டம்பர் 8, 2021 முதல் வாங்க கிடைக்கும். இருப்பினும், மின்சார ஸ்கூட்டர்களை சோதனை சவாரி செய்து பார்க்க பலரும் விருப்பம் தெரிவித்துள்ள காரணத்தால், டெஸ்ட் டிரைவ் அக்டோபர் 2021 மாதம் முதல் தொடங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் தகவலின்படி, ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் அக்டோபரில் ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்யலாம். சரி அதற்கு எங்கு செல்வது என்று உங்களுக்கு தோன்றலாம். அதற்கும் நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை. உங்கள் உங்கள் வீட்டு வாசலுக்கே டெஸ்ட் டிரைவ் செய்ய இந்த ஸ்கூட்டர் கிடைக்கும். ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) மொபைல் அப்ளிகேஷன் மூலம் டெஸ்ட் ரைடு செய்ய முன்பதிவு செய்தால், இந்த ஸ்கூட்டர் உங்கள் வீட்டிற்கே கொண்டு வரப்படும்.
அதுமட்டுமில்லாமல் ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன்பு டெஸ்ட் ரைடு செல்ல விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக, பல நகரங்களில் அனுபவ மையங்களை அமைக்க நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அக்டோபர் 2021 க்குள் அனுபவ மையங்கள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அனுபவ மையங்களிலும் நீங்கள் டெஸ்ட் ரைடு செய்ய முடியும்.
ஓலா எலக்ட்ரிக் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மின்சார ஸ்கூட்டர்களை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் இந்திய சாலைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஓலா ஸ்கூட்டர் S1 மற்றும் S1 Pro ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கும், மின்சார ஸ்கூட்டர்கள் கடந்த சில வாரங்களாகவே ரூ.499 விலைக்கு முன்பதிவு செய்ய கிடைக்கின்றன.
வாடகை-சவாரி நிறுவனமாக இருந்த ஓலா, இப்போது இரு சக்கர வாகன உற்பத்தியாளராக மாறி, ஓலா மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை விவரங்களும் நேற்று வெளியாகியுள்ளது.
- S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை 99,999 ஆகவும்,
- S1 புரோவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.129,999 ஆகவும் நிர்ணயம் செய்யபட்டுள்ளது.
ஓலா எலக்ட்ரிக் பல வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது, இதன் மூலம் நுகர்வோருக்கு EMI விருப்பங்களை ஓலா நிறுவனம் வழங்கும். மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமா மாதத்திற்கு ரூ.2,999 முதல் EMI விருப்பங்களை வழங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சமீப காலங்களில், பல மாநில அரசுகள் மின்சார வாகனங்களுக்கு மானியங்களை வழங்கி வருகின்றனா. அந்த வகையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகள் அந்தந்த மாநிலங்களின் மானிய சலுகைகள் மற்றும் மத்திய அரசாங்கம் வழங்கும் FAME-II திட்டத்தைப் பயன்படுத்திய பிறகு மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது.
இந்தியா முழுவதும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மாநில மற்றும் FAME-II மானியத்திற்கு பிந்தைய விலைப்பட்டியல்:
மாநிலம் | S1 விலை | S1 Pro விலை |
குஜராத் | ₹79,999 | ₹109,999 |
டெல்லி | ₹85,099 | ₹110,499 |
மகாராஷ்டிரா | ₹94,999 | ₹124,999 |
ராஜஸ்தான் | ₹89,968 | ₹119,138 |
மற்ற மாநிலங்கள் | ₹99,999 | ₹129,999 |
ஓலா நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படும். OLA Future Factory என்று அழைக்கப்படும் இந்த ஆலை வருடத்திற்கு 1 கோடி யூனிட்டுகள் உற்பத்தித் திறனைக் கொண்டிருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஓலா S1 & S1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி: ஓலா ஸ்கூட்டரில் 3.9 Kwh பேட்டரி பேக் உள்ளது, இது 8.5 kW அதிகபட்ச ஆற்றலை வழங்கும் மின்சார மோட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. 750W போர்ட்டபிள் சார்ஜர் மூலம் வெறும் 6 மணி நேரத்தில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யலாம் அல்லது ஓலா சூப்பர்சார்ஜரைப் பயன்படுத்தி வெறும் 18 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய முடியும்.
ஓலா S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 121 கிமீ பயண வரம்பும், S1 புரோ ஸ்கூட்டரில் 181 கிமீ பயண வரம்பும் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், இது தற்போது இந்திய சந்தையில் வழங்கப்படும் மிக நீளமான மின்சார ஸ்கூட்டர்களில் ஒன்றாகும்.
ஓலா S1 & S1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அம்சங்கள்:
இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க ஸ்கூட்டர் பல அம்சங்களுடன் வருகிறது. இது பல கனெக்ட்டிவிட்டி ஆப்ஷன்களுடன் ஒரு முழு டிஜிட்டல் 7 அங்குல தொடுதிரை டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும்.
50-லிட்டர் பூட் ஸ்பேஸ், க்ரூஸ் கண்ட்ரோல், ரிவர்ஸ் மோட், முழு LED லைட்டிங் செட்அப் மற்றும் வேகமான சார்ஜிங் திறன் ஆகியவை ஸ்கூட்டரில் இருக்கும்.
இந்த ஸ்கூட்டர் உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் அம்சத்தைக் கொண்டிருக்கும்.
ஓலா S1 & S1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சவாரி, செயல்திறன் சிறப்பம்சங்கள்:
8.5 kW அதிகபட்ச ஆற்றலை வழங்கும் மோட்டார் உடன், S1 ஸ்கூட்டர் மணிக்கு 0-40 கிமீ வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டது, அதே போல S1 pro இந்த வேகத்தை 3 வினாடிகளில் எட்டிவிடும். S1 ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், S1 புரோ ஸ்கூட்டரின் வேகம் மணிக்கு 115 கிமீ என மதிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, S1 மாடலில் நார்மல், ஸ்போர்ட் என இரண்டு சவாரி முறைகளும் மற்றும் S1 புரோ மாடலில் ஹைப்பர் மோட் உள்ளிட்ட மூன்று சவாரி முறைகளும் உள்ளன.
ஓலா S1 & S1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் போட்டியாளர்கள்:
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் மற்றும் ஏதர் 450X போன்றவை நேரடி போட்டியாளர்களாக இருக்கும்.
ஓலா S1 & S1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வண்ண விருப்பங்கள்:
புதிய மின்சார ஸ்கூட்டரில் மொத்தம் 10 வண்ண விருப்பங்களை அறிமுகம் செய்வதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வண்ணத் தேர்வுகளில் கருப்பு, வெள்ளை, நீலம், சிவப்பு, மஞ்சள், ஊதா போன்ற நிறங்களும் அடங்கும்.
1
0