ஏப்ரல் மாதம் பூமியை நோக்கி வரும் மலை அளவு பெரிய அஸ்ட்ராய்டு|உடனே பயப்படாதீங்க….!!!

25 March 2020, 4:45 pm
Quick Share

கடந்த வார இறுதியில் நான்கு அஸ்ட்ராய்டுகள் பூமிக்கு அருகில் வந்து சென்றதை பற்றி ஏற்கனவே நாம் பார்த்தோம். ஆனால் அவை நான்கும் சிறிய அளவிலான அஸ்ட்ராய்டுகள். இப்போது வரும் ஏப்ரல் மாதம் வர இருக்கும் அஸ்ட்ராய்டு ஒரு மலை அளவு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இது குறித்து நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. இது பூமியை நோக்கி வரப்போவதில்லை. கொரோனாவினால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்தே இன்னும் மீண்டு வராமல் இருக்கும் நமக்கு இது ஒரு அச்சுறுத்தலாக இருக்காது. ‘அஸ்ட்ராய்டு 527 1998 OR2’ யை சென்டர் ஃபார் நியர் எர்த் ஆப்ஜெக்ட் (Centre for Near Earth Object) ‘பொட்டென்ஷியலே ஹசார்டஸ் ஆப்ஜெக்ட்’ அதாவது மிக ஆபத்தான ஒன்று என கூறியுள்ளது. இருப்பினும் இது பூமியை எந்த விதத்திலும் பாதிக்கப் போவது இல்லை.

‘அஸ்ட்ராய்டு 527 1998 OR2’ நான்கு கிலோமீட்டர் அகலமாக இருக்கும். இந்த வருடத்தில் இதுவரை வந்த அஸ்ட்ராய்டுகளில் இது தான் பெரியது. இது பூமியில் இருந்து 6.3 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் பறக்க உள்ளது. இந்த தூரமானது நிலவிற்கும் பூமிக்கும் இருக்கும் தூரத்தை விட பதினாறு மடங்கு அதிகம். 

எனவே இது பூமியை இடிப்பதற்கு துளியும் வாய்ப்பு இல்லை. இந்த அஸ்ட்ராய்டு ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று இந்திய நேரப்படி மாலை 3:26 மணிக்கு பூமியை கடக்கும். இது ஆல்பில் உள்ள மான்ட் பிளான்க் அளவு பெரியதாக இருந்தாலும் நம்மால் இதனை வெறும் கண்களால் பார்க்க முடியாது. வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் தொலைநோக்கியின் மூலம் இதனை பார்க்கலாம்.

நிலவு மற்றும் பூமியை அஸ்ட்ராய்டுகள் கடப்பது ஒரு சாதாரண விஷயம் தான். இது குறித்து நாம் அச்சமடைய வேண்டாம். இருப்பினும் இவை கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். ஏனெனில் ஒரு சில அஸ்ட்ராய்டின் பாகங்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து மீட்டியோர் ஷவராக மாறிவிட வாய்ப்புகள் உண்டு.