எங்கெங்கோ பேசி முடியாமல் கடைசியில் இந்திய நிறுவனத்திடமே கெஞ்சும் டிக்டாக்! | மீண்டு வருமா டிக்டாக்?
13 August 2020, 10:03 amடிக்டாக்கின் இந்தியா நடவடிக்கைகளில் முதலீடு செய்ய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் பைட் டான்ஸ் ஆரம்பகால பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக டெக் க்ரஞ்ச் தெரிவித்துள்ளது. உரையாடல்கள் கடந்த மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கி இன்னும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் இறுதி செய்யவில்லை என்றும் அறிக்கை மேலும் கூறியுள்ளது.
பாதுகாப்பு தொடர்பான காரணங்களை சுட்டிக்காட்டி பிரபலமான வீடியோ பகிர்வு வலையமைப்பிற்கு இந்திய அரசு தடை விதித்துள்ள நேரத்தில் இந்த பேச்சுவார்த்தை வந்துள்ளது.
அமெரிக்காவிலும், டிக்டாக் செப்டம்பர் 15 க்குள் ஒரு அமெரிக்க நிறுவனத்தால் கையகப்படுத்தப்படாவிட்டால் தடையை எதிர்கொள்ள நேரிடும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க செயல்பாடுகள் மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளின் விற்பனைக்கு, பைட் டான்ஸ் மைக்ரோசாப்ட் மற்றும் ட்விட்டர் போன்ற பிற வாங்குபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, இது சில காலமாக டிக்டாக்கின் உலகின் மிகப்பெரிய சந்தையாக உள்ளது. ஜூன் தடைக்கு முன்னர், டிக்டாக்கில் 200 மில்லியன் பயனர்கள் இருந்தனர். இது ஒரு வளர்ந்து வரும் உள்ளடக்க படைப்பாளர்களின் சமூகத்தையும் வெற்றிகரமாக உருவாக்கி இருந்தது.
இந்தியாவில் முக்கிய நிர்வாகிகளைத் தக்க வைத்துக் கொள்ள பெற்றோர் நிறுவனமான பைட் டான்ஸ் போராடி வருவதால் டிக்டாக்-ரிலையன்ஸ் பேச்சு வார்த்தைகள் வந்துள்ளன என்று டெக் க்ரஞ்ச் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவில் பைட் டான்ஸின் ஹலோ நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய ரோஹன் மிஸ்ரா ஏற்கனவே நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டார்.
இந்நிறுவனத்தில் இந்தியாவில் 2,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். பைட் டான்ஸ் கடைசியாக தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்ய விரும்பவில்லை என்று கூறியிருந்தது. இருப்பினும், ரிலையன்ஸ் உடனான ஒரு ஒப்பந்தம், டிக்டாக் அதன் மிகப்பெரிய சந்தையில் பல சவால்களை சமாளிக்க உதவும்.
இதற்கிடையில், ரிலையன்ஸ், டிஜிட்டல் சந்தையில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளது. அதன் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், அதன் தொலைத் தொடர்பு, இ-காமர்ஸ் மற்றும் பிற சேவைகளின் மூலம் இது பேஸ்புக், கூகிள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பதில் என்னவாக இருக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.