ஹைப்பர்லூப் சோதனை மிகப்பெரிய வெற்றி..! இனி மின்னல் வேகப் பயணம் சாத்தியம் தான்..!

9 November 2020, 2:45 pm
First_Passengers_Josh_Sara_Virgin_Hyper_Loop_UpdateNews360
Quick Share

போக்குவரத்து உலகில் ஒரு வரலாற்றை உருவாக்கி, விர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனம் முதன்முறையாக ஒரு ஹைப்பர்லூப் ரயில் பெட்டியில் மனித பயணத்தை வெற்றிகரமாக சோதித்துள்ளது.

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் லாஸ் வேகாஸுக்கு வெளியே உள்ள பாலைவனத்தில் உள்ள நிறுவனத்தின் டெவ்லூப் சோதனை பாதையில் இந்த சோதனை நடந்தது. முதல் இரண்டு பயணிகளாக விர்ஜின் ஹைப்பர்லூப்பின் சி.டி.ஓ மற்றும் இணை நிறுவனர் ஜோஷ் கீகல் மற்றும் பயணிகள் அனுபவ இயக்குனர் சாரா லூச்சியன் ஆகியோர் பயணம் செய்தனர்.

சோதனையின் போது ஹைப்பர்லூப் ரயில் பயணித்த வேகம் மணிக்கு கிட்டத்தட்ட 160 கி.மீ ஆகும். ஆனால் இறுதியில், காற்று இல்லாத குழாய்கள் வழியாக மனிதர்கள் மணிக்கு 1,223 கி.மீ வேகத்தில் பயணிக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் குறிக்கோளாக உள்ளது.

“கடந்த சில ஆண்டுகளாக, விர்ஜின் ஹைப்பர்லூப் குழு அதன் அற்புதமான தொழில்நுட்பத்தை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மாற்றுவதில் ஈடுபட்டுள்ளது” என்று விர்ஜின் குழுமத்தின் நிறுவனர் சர் ரிச்சர்ட் பிரான்சன் கூறினார்.

“இன்றைய வெற்றிகரமான சோதனையின் மூலம், இந்த கண்டுபிடிப்பு உண்மையில் எல்லா இடங்களிலும் வாழும் மக்களின் பயணிக்கும் முறையை முற்றிலுமாக மாற்றிவிடும் என்பதைக் காட்டியுள்ளோம்.” என அவர் மேலும் கூறினார்.

ஹைப்பர்லூப் என்பது ஒரு புதிய போக்குவரத்து பயன்முறையாகும். இது ஒரு நேரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பொருட்களின் அதிவேக இயக்கத்தை காற்று இல்லாத குழாய்கள் மூலம் இயக்கப்படுகிறது.

லாஸ் வேகாஸில் உள்ள விர்ஜின் ஹைப்பர்லூப்பின் 500 மீட்டர் டெவ்லூப் சோதனை தளத்தில் இந்த சோதனை நடந்தது. அங்கு நிறுவனம் முன்பு 400’க்கும் மேற்பட்ட சோதனைகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ஹைப்பர்லூப் பாதுகாப்பானதா என்று அடிக்கடி தன்னிடம் கேட்கப்படும் கேள்விக்கு இன்றைய வெற்றிகரமான சோதனை சரியான பதிலாக இருக்கும் என்று விர்ஜின் ஹைப்பர்லூப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஜே வால்டர் கூறினார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் எதிர்கால போக்குவரத்து அமைப்பு குறித்த சிந்தனையின் அடிப்படையில் 2014’இல் விர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனம் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 27

0

0

1 thought on “ஹைப்பர்லூப் சோதனை மிகப்பெரிய வெற்றி..! இனி மின்னல் வேகப் பயணம் சாத்தியம் தான்..!

Comments are closed.