கூகிள் டாஸ்க் மேட் என்றால் என்னங்க? இதிலிருந்து பணம் சம்பாதிப்பது எப்படி?
25 November 2020, 2:01 pmகூகிள் நிறுவனம் முன்னதாக அதன் Google Opinion Reward பயன்படுத்தி பணம் சம்பாதிக்க பயனர்களை அனுமதித்தது. இருப்பினும், அதில் பெறும் பணத்தினை கூகிள் பிளே ஸ்டோரில் மட்டுமே பயன்படுத்த முடியும். நிறுவனம் இப்போது கூகிள் டாஸ்க் மேட் என்ற புதிய பயன்பாட்டை உருவாக்கி வருகிறது. இது இப்போது பீட்டா-சோதனை கட்டத்தில் உள்ளது. இதன் மூலம் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
இந்த கட்டுரையை எழுதும் நேரத்தில், கூகிள் டாஸ்க் மேட் பயன்பாடு பீட்டா சோதனை கட்டத்தில் உள்ளது, அங்கு அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் மட்டும் அணுக கிடைக்கிறது. கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து எவரும் பயன்பாட்டை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் என்றாலும், பயன்பாட்டை அணுக ஒருவருக்கு அழைப்பு (Invitation Code) என்பது தேவைப்படும்.
கூகிள் டாஸ்க் மேட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி?
அருகிலுள்ள கடைகளின் புகைப்படத்தை எடுப்பது, கணக்கெடுப்பு கேள்விகளுக்கு பதிலளிப்பது, உள்ளூர் மொழிகளின் வாக்கியங்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பது மற்றும் இது போன்ற எளிய பணிகளை செய்து முடிப்பதன் மூலம் கூகிளிடம் இருந்து சம்பளம் பெற முடியும். ஒருவர் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை என்றால் ஒரு பணியைத் தவிர்ப்பதற்கான விருப்பமும் உள்ளது. உங்கள் கணக்கில் தொகையை வரவு வைப்பதற்கு முன்பு பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து பணிகளும் கணினியால் மதிப்பாய்வு செய்யப்படும்.
ஒவ்வொரு வெற்றிகரமான பணிகளையும் முடிக்க முடிக்க உள்ளூர் நாணய மதிப்பில் கூகிள் டாஸ்க் மேட் பயனருக்கு பணம் செலுத்தும். எனவே, இந்திய பயனர்களுக்கு இந்திய ரூபாயில் பணம் செலுத்தப்படும். கூகிள் மூலம் வரவு வைக்கப்படும் பணத்தை ஒரே கிளிக்கில் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு மாற்ற முடியும்.
இந்தியாவில் கூகிள் டாஸ்க் மேட்டை எவ்வாறு பெறுவது?
இப்போதைக்கு, கூகிள் டாஸ்க் மேட்டுக்கான அழைப்பைப் பெற இரண்டு வழிகள் உள்ளன. கூகிள் உங்களுக்கு அழைப்பை அனுப்ப வேண்டும் அல்லது அழைப்பைக் கொண்ட ஒருவர் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். உத்தியோகபூர்வ பட்டியலின் படி, கூகிள் இந்த நேரத்தில் அழைப்புகளை விரிவாக்குவதை நிறுத்தியுள்ளது, ஏற்கனவே அழைப்பை வாங்கிய ஒருவர் மட்டுமே கூகிள் டாஸ்க் மேட் செயலியுடன் இணைய உதவ முடியும். கூகிள் டாஸ்க் மேட் பயன்பாடு Android சாதனங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, மேலும் எதிர்காலத்தில் iOS சாதனங்களுக்கும் வரக்கூடும்.
0
0