செய்தித்தாளில் நான்கு வண்ண புள்ளிகள் இருப்பதற்கான காரணம் என்ன? அட இவ்வளவு நாள் இது தெரியாம போயிடுச்சே!!

30 August 2020, 8:40 pm
What is the meaning of four colour dots in the Newspaper
Quick Share

செய்தித்தாள்களின் பக்கங்களின் கீழே நான்கு வண்ண புள்ளிகள் இருப்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? அது எதற்கு என்று எப்போதாவது யோசித்ததுண்டா? அந்த வண்ண புள்ளிகள் இருக்க வேண்டியது அவசியமா? இந்த கேள்விகள் எல்லாம் உங்களுக்குள்ளும் இருந்தால் உங்களுக்கான பதிலை இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க…..

செய்தித்தாள் நம் வாழ்க்கை முறையின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. அலுவலகங்கள், பள்ளிகள், முதல்  சலூன் கடை, டீ கடை வரை செய்தித்தாள் படிப்பதற்கென ஒரு  தனி கூட்டமே உள்ளது. சரி, நம்ம முக்கியமான விஷயத்தைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

நான்கு வண்ண புள்ளிகள் – காரணம்:

சில வருடங்களுக்கு முன்பெல்லாம் செய்தித்தாள்கள் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணத்தில் மட்டுமே அச்சிடப்பட்டிருந்தன. காலம் செல்ல செல்ல தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவதால், செய்தித்தாள்களும் இப்போதெல்லாம் வண்ணமயமாக உருவாகியுள்ளன. கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கொடுக்கவும், செய்திகளைச்  சுவாரசியமானப் புகைப்படங்கள் மூலம் தெரியப்படுத்தவும் வண்ணங்கள்  என்பது மிகவும் அவசியம்  ஆகிவிட்டன. 

இந்த கவர்ச்சிகரமான வண்ணங்களுக்காகவே, செய்தித்தாளின் அடிப்பகுதியில் நான்கு வண்ண புள்ளிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அட.. இதுக்கும்  அதுக்கும் என்ன சம்பந்தம் என்று  நீங்கள் கேக்கலாம். ஆனா இருக்குங்க. 

சில செய்தித்தாள்களில், இந்த வண்ண புள்ளிகள் வடிவங்களால் வேறுபட்டிருக்கும்; சில நேரங்களில் அவை வட்ட வடிவில், இதயம் வடிவில் அல்லது நட்சத்திர வடிவில் எல்லாம் இருக்கும். மேலும், சில செய்தித்தாள்களில், அவை ஒரு பக்கத்தின் மையத்தில் அல்லது சில விளிம்புகளில் அச்சிடப்பட்டிருக்கும். 

அடிப்படை வண்ணங்கள்

முக்கியமாக மூன்று வகையான வண்ணங்கள் உள்ளன என்பதை நாம் படித்திருப்போம்: அவை RGB எனப்படும் Red, Green மற்றும் Blue. இந்த மூன்று வண்ணங்களும் அடிப்படை வண்ணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. 

இதேபோன்ற அச்சுப்பொறிகளுக்கும் அதாவது  Printer களிலும் சில அடிப்படை வண்ணங்கள் உள்ளது. அவை தான் CMYK என்பதாகும்.

இதில், 

  • C என்பது சியான் அதாவது அச்சிடுகையில் நீல நிறத்தைக் குறிக்கும்.
  • M என்பது மெஜந்தா எனும்  இளஞ்சிவப்பு நிறத்தையும்
  • Y என்பது மஞ்சள் நிறத்தையும்
  • K என்பது கருப்பு நிறத்தையும் குறிக்கும்.

இந்த நான்கு வண்ணங்களின் சரியான விகிதத்தை சேர்ப்பதன் மூலம் எந்த நிறத்தையும் பெறலாம். ஒரு படத்தை அச்சிட, இந்த வண்ணங்களின் தட்டுகள், அச்சிடும் போது அடுத்தடுத்து வரிசையாக பிரிண்டரில் பொருத்தபட்டிருக்கும். ஒரு முழு வண்ண படத்தை துல்லியமாக அச்சிட இந்த நான்கு வண்ணங்களும் அவசியம். 

செய்தித்தாள்களில் உள்ள படங்கள் மங்கலாக இருந்தால், இந்த நான்கு வண்ணத் தகடுகள் சீராக இல்லமால் அல்லது ஒரே வரிசையில் இல்லை என்று அர்த்தம். அதனால்தான் CMYK என்பது பதிவு குறி என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் எத்தனை செய்தித்தாள்கள் அச்சிடப்படுகின்றன என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். அதே போல், எண்ணவே முடியாததை சரியாக அச்சிடப்பட்டுள்ளதா என்பதை ஒவ்வொரு பக்கமும் திருப்பியா பார்த்துக்கொண்டிருக்க முடியும்? 

எனவே தான், காகிதத்தின் அனைத்து பக்கங்களையும் சரிபார்க்க சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். சென்சார்கள் அச்சுப்பொறிக்கு, பொருத்தமான CMYK எப்படி இருக்கும் என்று தெரியும், ஏதாவது தவறு நடந்தால், அந்த பிரிண்டர் இணைக்கப்பட்டிருக்கும் கம்பியூட்டரில் சென்சார் காட்டிக்கொடுத்துவிடும். எனவேதான், இந்த வண்ண புள்ளிகள் ‘printer marker’ ஆக செயல்படுகிறது. புத்தகங்களின் பக்கங்களிலும் இந்த CMYK குறி கொடுக்கப்பட்டிருக்கும், ஆனால் புத்தகத்தின் பக்கங்கள் சிறியதாக இருப்பதால், பக்கங்களை வெட்டும்போது அவை அகற்றப்படுகின்றன.

இப்போதெல்லாம் செய்தித்தாள் அச்சிடும் முறை என்பது மிக அதிக வேகத்தில் நடக்கிறது. அச்சிடும் இயந்திரங்கள் ஒரு மணி நேரத்தில் சுமார் 90,000 செய்தித்தாள்களை அச்சிடலாம். எனவே, ஒவ்வொரு செய்தித்தாளையும் தனித்தனியாக சரிபார்க்க முடியாது. நவீன அச்சுப்பொறிகளின் உதவியுடன், இதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்படுகின்றன. இந்த நான்கு புள்ளிகள் செய்தித்தாளில் சரியாக அச்சுக்கள் பதிவாகி உள்ளதா என்பதை தொழில்நுட்ப உதவியுடன் எளிதாக காட்டிவிடுகிறது. 

அவ்ளோதாங்க, இது போன்ற கேள்விகள் உங்களுக்குள்ளும்  இருந்தால்  கமெண்டில் பதிவிடுங்கள். அதற்கான விளக்கங்களையும் இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

Views: - 35

1

0