காமராஜரும், விஜயும் ஒன்றா? எஸ்.வி.சேகர் சொன்ன லாஜிக்!

Author: Hariharasudhan
6 November 2024, 4:50 pm

கூட்டத்திற்கும் வாக்குக்கும் சம்பந்தமில்லை என நடிகர் எஸ்.வி.சேகர் விஜயின் தவெக மாநாடு குறித்து கூறியுள்ளார்.

சென்னை: நடிகரும், இயக்குநருமான எஸ்.வி.சேகர் இன்று (நவ.6) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து பேசிய அவர், “விஜய் தற்போது வந்திருக்கிறார், அவருக்கு மிகப்பெரிய கூட்டம் வந்துள்ளது.

அந்தக் கூட்டத்தை வாக்குகளாக மாற்ற வேண்டிய பொறுப்பு தற்போது அதிகப்படியாக விஜய்க்கு உள்ளது. முன்னாள் முதலமைச்சர் காமராஜர் மெரினாவில் கூட்டம் நடத்தியபோது ஒரு லட்சம் பேர் அங்கு கூடினர். ஆனால் அந்த தேர்தலில்தான் காமராஜர் ஒரு கல்லூரி மாணவரிடம் தோல்வியடைந்தார்.

எனவே, கூட்டத்திற்கும் வாக்குக்கும் சம்பந்தம் இல்லை. தமிழ்நாட்டில் தேர்தல் என்றால் திமுக – அதிமுக மட்டும்தான், மற்றவர்கள் யாரும் இல்லை. திமுக கொண்டு வந்துள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், ஆண் பிள்ளைகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ஓட்டுகள் திமுகவுக்கு உள்ளது” என்றார்.

SV SEKHAR

இதனையடுத்து, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பேசுகையில், “அண்ணாமலை போன்று அரசியல் செய்தால் 40க்கு பூஜ்ஜியம்தான் எடுக்க முடியும். அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராவதற்கு தகுதியில்லை எனக் கூறினர், ஆனால் அண்ணாமலை அரசியலுக்கே தகுதியில்லாதவர்.

தற்போது அவர் படிப்பதற்காகச் சென்றுள்ளார். ஆனால் அறிக்கை மட்டும் வெளியிடுகிறார். தமிழக பாஜகவில் ஒரு பிராமணர்கள் கூட இல்லாத நிலையை அண்ணாமலை கொண்டு வந்து உள்ளார். பாஜகவில் பிராமணர்களுக்கு இனப்படுகொலை நடக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விசிக மீது கடும் விமர்சனம்.. கொலை மிரட்டல் விவகாரத்தில் ராமதாஸ் காட்டம்

மேலும், நடிகை கஸ்தூரி விவகாரம் குறித்து பேசிய எஸ்.வி.சேகர், “ஒரு பொதுவெளியில் பேசும்போது என்ன பேச வேண்டும் என்பதை விட, எதை பேசக்கூடாது என தெரிந்துவிட்டுச் செல்ல வேண்டும். நடிகை கஸ்தூரி பேசியது கண்டிக்கத்தக்க செயல். பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கஸ்தூரி சொல்வது முற்றிலும் தவறு” எனக் கூறினார்.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 248

    0

    0