5 பெண்கள் உட்பட 6 தமிழர்கள் தேர்வு..! சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்..!
12 August 2020, 10:56 pm2020’ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம் நாடு முழுவதும் உள்ள 121 காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது
விருது வழங்கப்பட்டவர்களில் சிபிஐ’யைச் சேர்ந்த 15 அதிகாரிகள், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையைச் சேர்ந்த தலா 10 அதிகாரிகள், உத்தரபிரதேச காவல்துறையைச் சேர்ந்த 8 பேர், கேரளா மற்றும் மேற்கு வங்க போலீசிலிருந்து தலா 7 பேர், தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் மற்றும் மீதமுள்ளவர்கள் மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
121 காவலர்களில், இருபத்தொரு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பதக்கம் பெறுபவர்களில் கான்ஸ்டபிள் முதல் துணை போலீஸ் கமிஷனர் வரை உள்ளனர். கடந்த ஆண்டு நாடு முழுவதும் இருந்து மொத்தம் 96 காவல்துறையினருக்கு பதக்கம் வழங்கப்பட்டது.
பதக்கம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரில் ஐந்து பேர் பெண் போலீசார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலிருந்து பதக்கம் பெற்றவர்களின் பட்டியல் :
- ஜி.ஜான்சி ராணி, இன்ஸ்பெக்டர் (ராமநாதபுரம்)
- எம்.கவிதா, இன்ஸ்பெக்டர் (புதுக்கோட்டை)
- ஏ.பொன்னம்மாள், இன்ஸ்பெக்டர் (நீலகிரி)
- சி.சந்திரகலா, இன்ஸ்பெக்டர் (அரியலூர்)
- ஏ.கலா, இன்ஸ்பெக்டர் (பெரம்பலூர்)
- டி.வினோத் குமார், சப் இன்ஸ்பெக்டர் (சென்னை)
குற்றங்களை விசாரிப்பதற்கான உயர் தொழில்முறை தரங்களை மேம்படுத்துவதற்கும், அத்தகைய சிறப்பை அங்கீகரிப்பதற்கும் 2018’ஆம் ஆண்டில் மத்திய உள்துறை அமைச்சகத்தால் இந்த பதக்கம் முதன்முறையாக அறிவிக்கப்பட்டது.