“10-ம் வகுப்பு மதிப்பெண்களை 50% கணக்கிடுவது நியாயமில்லை” : மனம் குமுறும் பிளஸ்- 2 மாணவ, மாணவிகள்

Author: Babu Lakshmanan
27 June 2021, 5:57 pm
stalin - updatenews360
Quick Share

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பிளஸ்- 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, மதிப்பெண்கள் எதன் அடிப்படையில் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடம் மட்டுமின்றி அவர்களுடைய பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடமும் ஏற்பட்டது.

ஏனென்றால் மாணவர்களின் உயர்கல்வி படிப்பை பிளஸ்-2 மதிப்பெண்கள்தான் தீர்மானிக்கும்.

Plus One Starts - Updatenews360

மதிப்பெண் கணக்கீட்டு முறை

இந்த நிலையில் மதிப்பெண்கள் வழங்குவது குறித்து ஆலோசிக்க அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின்படி இந்த ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த அறிவிப்பையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன்படி, “10ம் வகுப்பு பொதுத்தேர்வில், உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி, 50 சதவீதம்; பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்து முறை மதிப்பெண் மட்டும், 20 சதவீதம்; பிளஸ் 2 செய்முறை தேர்வு, அக மதிப்பீடு, 30 சதவீதம் என கணக்கிடப்படும்.பிளஸ் 2 வகுப்பில், ஒவ்வொரு பாடத்திலும், செய்முறை தேர்வு, 20; அக மதிப்பீடு, 10 என, மொத்தம், 30க்கு பெற்ற மதிப்பெண் முழுதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்” என்பது இதில் மிக முக்கிய அம்சம் ஆகும்.

Stalin Letter - Updatenews360

மேலும், “இம்மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள், தமக்கு குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பினால், பிளஸ் 2 எழுத்து தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். அவ்வாறு நடத்தப்படும் தேர்வில், பெறும் மதிப்பெண்ணே, அவர்களின் இறுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படும். தனித்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு, கொரோனா தொற்று பரவல் சீரடைந்தவுடன், மேற்குறிப்பிட்டோருடன் சேர்த்து, தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுக்கான கால அட்டவணை, பின்னர் அறிவிக்கப்படும்” என்றும் அவர் அறிவித்து இருந்தார்.

விருப்பப்பட்டால் தேர்வு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறும்போது, “பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் என்பது 10, 11, 12-ம் வகுப்புகளை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இதில்
10-ம் வகுப்புக்கு மட்டும் 50 சதவீத ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு காரணம், இந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு படித்தபோதுதான் கொரோனா தொற்று பிரச்சினையின்றி நேரிடையாக வகுப்புகளுக்கு வந்து பாடங்கள் படித்து தேர்வுகளை எழுதினார்கள்.

பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதியிருந்தால் நான் அதிகம் மதிப்பெண்கள் வாங்கியிருப்பேன். எனவே எங்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு தரவேண்டும் என்று மாணவர்கள் கூறும் பட்சத்தில் சி.பி.எஸ்.இ. போலவே, விரும்பும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தும் முறையை கையாள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார்.

Anbil Mahesh - Updatenews360

கொரோனா கட்டுக்குள் வந்ததும், அப்படி விருப்பப்படும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். முக்கியமாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனித்தேர்வர்கள் இருக்கிறார்கள். இவர்களிலும் தேர்வு எழுத விருப்பப்படுவோருக்கு, இதர மாணவர்களுடன் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும்”என்று குறிப்பிட்டார்.

மாணவர்கள், பெற்றோர்கள் கவலை

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு, மதிப்பெண் கணக்கீடு செய்யும் முறையில், 10 வகுப்பு பொதுத்தேர்வில் வாங்கிய மதிப்பெண்களில் 50 சதவீதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது, குறிப்பிட்ட அளவிற்கு மாணவ மாணவிகளிடையேயும், அவர்களின் பெற்றோர்கள் இடையேயும் மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அவர்கள் கடும் நெருக்கடிக்கும் உள்ளாகி இருக்கின்றனர்.

ஏனென்றால், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவ-மாணவிகளில், சுமார் 15 முதல் 20 சதவீதம் பேர் வரை பிளஸ் -2 பொதுத் தேர்வில் மிகவும் குறைவான மதிப்பெண்களை பெறுவதை காணமுடியும். இதற்கு முக்கிய காரணம்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மிக எளிதாக இருக்கும் என்பதே. இதனால் மாணவ, மாணவிகள் ஒவ்வொரு பாடத்திலும் நூற்றுக்கு நூறு எடுப்பது அல்லது 95 சதவீத மதிப்பெண்களுக்கும் மேல் வாங்குவதென்பது சர்வ சாதாரண நிகழ்வாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் வாங்கிய மதிப்பெண்கள் சதவீதத்தை வைத்தே இதை அறிந்துகொள்ள முடியும்.

Pondy School - Updatenews360

அதேநேரம், பிளஸ்-2 பொதுத்தேர்வு என்பது உயர்கல்விக்கான அடித்தளமாகும். இதனால், ஒவ்வொரு பாடமும் விரிவான முறையில் இருக்கும். உயர்கல்விக்காக பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேருவதற்காகவும், போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்வதற்கு வசதியாகவும் பாடங்கள் தயாரிக்கப்பட்டு இருக்கும்.

இதனால்தான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கிய மாணவ-மாணவிகளில் குறிப்பிட்ட சதவீதம் பேர் பிளஸ்- 2 பொதுத்தேர்வில் தாங்கள் எதிர்பார்த்ததை மிக மிக விட குறைவான மதிப்பெண்கள் பெறுவதற்கு காரணமாகும்.

அதேநேரம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில்,குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளில் 10 சதவீதம் பேர் வரை பிளஸ் -2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்து விடுவார்கள். தங்களின் எதிர்கால வாழ்க்கையே பிளஸ்-2 பொதுத் தேர்வில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து இவர்கள் தினமும் 8, 9 மணிநேரம் வரை தீவிரமாக படித்து தேர்வுக்கு தயாராகி விடுவார்கள்.

தாங்கள் பத்தாம் வகுப்பில் வாங்கியதை விட அதிக மதிப்பெண்களும் பெற்றுவிடுவார்கள். இதையும் கடந்த கால மாணவர்களின் 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இதுபோன்ற சூழலில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வாங்கிய 50 சதவீத மதிப்பெண்களை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்காக கணக்கில் எடுத்துக் கொண்டிருப்பது எந்த விதத்திலும் நியாயமாகத் தெரியவில்லை” என்று கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என முத்தரப்பினரும் கவலை தெரிவிக்கிறார்கள்.

மாறாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வாங்கிய மதிப்பெண்களில் 30 சதவீதத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு பிளஸ் 1 தேர்வில் வாங்கிய மதிப்பெண்களில் 40 சதவீதத்தையும், பிளஸ்-2வில் வாங்கிய மதிப்பெண்களில் 30 சதவீதத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருந்தால் இதுபோன்ற குறைபாடுகள் நிகழ்வதற்கு வாய்ப்பு உருவாகி இருக்காது” என்பது இவர்களின் கருத்தாக உள்ளது.

தேர்வு நடத்தலாம்…

கொரோனாவுக்கு பிறகான தேர்வு குறித்து கல்வியாளர்கள் சிலர் கூறும்போது,”தற்போது தமிழகத்தில் கொரோனா அதி வேகமாக குறைந்து வருகிறது, எனவே தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு,

ஜூலை 2-வது வாரத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை நடத்தி, உடனடியாக விடைத்தாள்களை திருத்தி மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கலாம். ஜூலை 31-ம் தேதிக்குள் இவர்களுக்கும் தேர்வு முடிவுகளை வெளியிட்டு விடவும் முடியும். ஏனென்றால் இதுபோல தேர்வு எழுத விரும்பும் மாணவ மாணவிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் இருப்பார்கள்.

12th Exam - Updatenews360

இவர்களுக்கு தங்களால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும் என்ற நம்பிக்கை நிச்சயம் இருக்கும். அதன் மூலம் உயர்கல்விக்கு பிரபல கல்லூரிகளில் சேர முடியும் என்ற சிந்தனையும் இவர்களிடம் நிறையவே இருக்கும்.

ஏனென்றால் பள்ளிக்கல்வித்துறை குறைவாக மதிப்பெண்களை வழங்கிவிட்டால் தாங்கள் விரும்பும் கல்லூரிகளில், பிடித்தமான பாடப்பிரிவுகள் இவர்களுக்கு கிடைப்பதில் பெரும் நெருக்கடி ஏற்படும். கொரோனா கட்டுக்குள் வந்த பிறகுதான் எழுத்து தேர்வு நடத்தப்படும் என்பதால் அதற்குள் உயர்கல்வி படிப்பிற்கான சேர்க்கை முடிந்துவிடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. அப்போது, அவர்கள் நல்ல மதிப்பெண்கள் வாங்கி இருந்தாலும் கூட கல்லூரிகளில் விரும்பும் பாடப்பிரிவு கிடைப்பதும் கடினமாகிவிடும். அதனால் இப்போதே பிளஸ் -2 பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவ-மாணவிகளுக்கு விரைவாக தேர்வை நடத்த பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்கலாம்” என்று குறிப்பிட்டனர்.

Views: - 261

0

0