செல்போனை பறித்துச் செல்ல முயன்ற கொள்ளையர்கள் : ஆயுதங்களால் தாக்கிய போதும் மடக்கி பிடித்த துணிச்சல் சிறுமியின் வைரல் வீடியோ…!
1 September 2020, 5:26 pmசெல்போனை பறித்துச் சென்ற வழிப்பறி கொள்ளையர்களை, மடக்கி பிடித்த 15 வயது சிறுமியின் வீரதீர செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சாலையில் நடந்து செல்பவர்களிடம் செல்போன் மற்றும் நகை பறிப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் நாட்டின் ஏதேனும் ஒரு மூளையில் இந்த சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறித்தான் வருகிறது.
இந்த நிலையில், தனது செல்போனை வழிப்பறி செய்த நபர்களை 15 வயது சிறுமி மடக்கி பிடித்த வீரதீர சம்பவம் அரங்கேறியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் – கபுர்தலா சாலையில் உள்ள தீன்தயாள் உபாதத்யாய் நகர் அருகே 15 வயதுள்ள குஷும் குமாரி என்னும் சிறுமி வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அந்த சிறுமியின் கையில் இருந்த செல்போனை பறித்துள்ளனர்.
அப்போது, சுதாரித்துக் கொண்ட சிறுமி இருசக்கர வாகனத்தில் பின்பக்கம் அமர்ந்திருந்த நபரை கெட்டியாக பிடித்துக் கொண்டார். அந்த நபரும் அந்த சிறுமியை தள்ளிவிட்டு விட்டு தப்பியோட முயற்சித்தார். தனது கையில் இருந்து கூர்மையான ஆயுதத்தை வைத்து தாக்கியும், சிறுமி அந்த நபரை விட்டபாடில்லை. ஒரு கட்டத்தில், அந்த வழியாக வந்தவர்களும் விரட்டிப் பிடிக்க முற்பட்டதால், ஒருவன் வசமாக சிக்கினான். மற்றொருவன் அங்கிருந்து தப்பியோடினான்.
இதையடுத்து, தனது செல்போனை மீட்ட அந்த சிறுமி, சிகிச்சைக்காக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளியை, அப்பகுதியினர் போலீசில் ஒப்படைத்தனர். அந்த நபரின் பெயர் அவினாஷ் என்பதை உறுதி செய்த போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, தப்பியோடியவனை தேடி வருகின்றனர்.
உயிரையும் பொருட்படுத்தாமல் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையனை மடக்கி பிடித்த சிறுமியின் வீரதீர செயல்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த வீடியோ அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகிய நிலையில், சமூக வலைதளங்களில் அது வைரலாகி வருகிறது. அனைவரும் சிறுமியின் தைரியத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
0
0