+2 தேர்வு எழுத 3 நாள் வருகை போதுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் அடித்த பல்டி!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2023, 8:20 pm
AnbilMini - Updatenews360
Quick Share

நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில மொழித் தேர்வுகளை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தமிழகத்தையே
ஒரு உலுக்கு உலுக்கியுள்ளது.

பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட்!!

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் கூட்டத்தை உடனடியாக கூட்டி மாணவர்கள் தேர்வு எழுத வராத காரணம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,”அரசுப்பள்ளி மாணவர்கள் 38,000 பேரும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 8,500 பேரும், தனியார் பள்ளி மாணவர்கள் 1,500 பேரும் முதல் நாளில் தமிழ் தேர்வை எழுதவில்லை. அதனால் பொதுத் தேர்வு நடந்த நாளன்றே தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்கள் தேர்வுக்கு வராததற்கு காரணம் என்ன என்பது குறித்தும் விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில மாணவர்கள் பள்ளிகளுக்கு மிக குறைந்த நாட்களே வந்திருந்தாலும், அவர்களுக்கும் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களை தேர்வு எழுத வைக்க அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.

தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வாய்ப்பு

அதேநேரம் எஞ்சியுள்ள பொதுத் தேர்வுகளையும் இதேபோல் மாணவ, மாணவிகள் புறக்கணித்து விடக்கூடாது என்பதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை தீவிர கவனம் செலுத்துகிறது.

தேர்வு எழுதாத மாணவர்களை ஜூன் மாதம் நடைபெறும் துணைப் பொதுத் தேர்வுகளை எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தேர்வுக்கு வராத மாணவர்களின் விவரங்கள் தேர்வு மைய முதன்மை கல்வி கண்காணிப்பாளர் தேர்வு நடைபெறும் அன்று பிற்பகலிலேயே பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வட்டார மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாயிலாக மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் பொது தேர்வின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

11-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதாத மாணவர்களை கண்டறிந்து, அவர்களின் பெற்றோருக்கும் துணை தேர்வுக்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று பல்வேறு யோசனைகளை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.

3 நாட்கள் வந்தாலே பொதுத்தேர்வு எழுதலாம்

இந்த நிலையில் சென்னை மகளிர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாக கூறப்படுவது இதுதான்.

“50 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தாலும், அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத வைக்கவேண்டும் என்ற முனைப்புடன் அரசு செயல்பட்டு வருகிறது. பள்ளிகளில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் வருகை பதிவு இருந்தால்தான் தேர்வு எழுத முடியும் என்ற விதிகள் இருந்தாலும் கூட, மூன்று, நான்கு நாட்கள் வருகை தந்திருந்தாலே பொதுத் தேர்வுகளை எழுத அனுமதி கொடுத்து இருக்கிறோம். இனியும் அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள் தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறோம்” என்று தெரிவித்தாக செய்திகள் வெளியானது.

இதனால் இனி வரக்கூடிய ஆண்டுகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுமா? குறைந்தபட்ச வருகை பதிவேடு இருந்தால்தான் மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதிமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரப்படுமா? என்ற கேள்விகளும் எழுந்தன.

அமைச்சர் மீது கல்வியாளர்கள் அதிருப்தி

இதனால்தான் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்த கருத்துக்கு கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஏனென்றால் 3 அல்லது 4 நாட்கள் மட்டும் பள்ளிகளுக்கு வந்தவர்களால், பொதுத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை புரிந்துகொண்டு எப்படி தெளிவான பதிலை அளிக்க முடியும் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர்.

இன்று பள்ளி கல்வித்துறையில் குறைந்த வருகை பதிவு கொண்ட மாணவர்களை பொதுத்தேர்வு எழுத அனுமதித்தால் நாளை உயர் கல்வித் துறையிலும் இதே நிலை ஏற்பட்டு அது மாணவர்கள் கல்வி கற்பதற்கான அடையாளத்தையே சிதைத்து விடும். தேர்வு நெருங்கும்போது, ஒரு சில நாட்கள் கல்லூரிக்கு போனாலே போதும் என்ற அலட்சிய மனநிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டு விடுவார்கள் என்றும் கூறப்பட்டது.

இது போன்ற கருத்துகள் சமூக ஊடகங்களில் பெரும் பேசு பொருளாகவும் மாறியது.

அமைச்சர் அந்தர் பல்டி

இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அரசு பொதுத் தேர்வெழுத ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே ஹால் டிக்கெட் வழங்கப்படும் என நான் கூறவில்லை. அது, தவறான செய்தி. கடந்த ஆட்சியில் கொரோனா காலத்தில் இந்த வழிமுறை பின்பற்றப்பட்டது. பள்ளிக்கு 75 சதவீத வருகைப் பதிவு உள்ள மாணவர்களுக்கு மட்டுமே அரசு பொதுத் தேர்வு எழுத ஹால் டிக்கெட் தரப்பட்டது. வரும் கல்வியாண்டிலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படும்” என்று மறுத்து இருக்கிறார்.

இதன்பின் திருச்சியில் அமைச்சர் கூறும்போது,”இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத வராத பல மாணவர்கள் ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து வருவது பள்ளிக் கல்வித் துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முழு தேர்ச்சி வழங்கப்பட்டு மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நேரடியாக வந்து மாற்றுச் சான்றிதழ் பெறும் வரை வருகை பதிவேட்டில் இருந்து நீக்கக் கூடாது என அரசு அறிவுறுத்தி இருந்தது. எனவே இந்த மாணவர்களின் எண்ணிக்கையை கழித்தால்தான் எவ்வளவு பேர் தேர்வு எழுதவில்லை என்பது தெரியும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இப்படி திடீர் பல்டி அடிக்க என்ன காரணம்?…

இது குறித்து கல்வியாளர்கள் கூறும் போது,”இதற்கு பல காரணங்களை சொல்லலாம். அதில் மிக முக்கியமானது மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக
மிகக்குறைந்த நாட்கள் வருகையே போதும், அதுவும் மூன்று, நான்கு நாட்கள் இருந்தாலே பதினோராம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளை எழுத மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலை உருவானால், அரசு மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வருடத்தில் எத்தனை நாட்கள் வேலை இருக்கும் என்ற கேள்வி தானாகவே எழுகிறது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மேற்படிப்பிற்காக பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல ஐடிஐ படிப்பவர்கள் அதை முடித்தவுடன் முதலில் வேலைவாய்ப்பை தேடிச் செல்லவே விரும்புவார்கள். அப்படி இருக்கும்போது இவர்கள் எதற்காக பிளஸ் டூ பொதுத் தேர்வை எழுதவேண்டும்?…

அப்படியே இருந்தாலும் கூட இவர்களில் மிக மிகக் குறைந்த அளவிலேயே பிளஸ் டூ பொதுத் தேர்வை எழுத விண்ணப்பித்திருக்க வாய்ப்பு உண்டு. பல்லாயிரக்கணக்கில் இருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.

பள்ளிக்கல்வித்துறைக்கு கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட 37 ஆயிரம் கோடி ரூபாயில் 34 ஆயிரம் கோடி ரூபாய் அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளம், பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள், புத்தகங்கள், சத்துணவு, வேறு பல நலத்திட்டங்கள் உட்பட அத்தனைக்கும் போய் சேர்ந்து விடுகிறது. அதனால்தான் பள்ளிக் கல்வித் துறையில் பெரிய அளவில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்படும் நிலையில் மாணவர்களுக்கு வருகை பதிவு நாட்கள் குறைந்து போனால் ஆசிரியர்களுக்கு பணி நாட்களும் மிகவும் குறைந்து போய்விடும். ஒரு சில அரசு பள்ளிக்கூடங்களில் சில பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் தேவைப்படாத நிலையும் ஏற்படும்.

ரூ.250 கோடி வீணாகிவிட்டதா?

இதனால் அவர்களுக்கு ஏன் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் மாணவர்களின் வருகை பதிவுக்கு தகுந்தாற் போல் சம்பளம் வழங்கினாலேபோதும் என்ற வாதங்களும் எழலாம். தவிர தமிழக அரசு ஒரு பள்ளி மாணவரை படிக்க வைக்க ஆண்டுதோறும் 54 ஆயிரம் ரூபாய் செலவிடுகிறது. 50 ஆயிரம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதாமல் போனதால் அவர்களுக்காக இந்த ஆண்டு செலவிட்ட 250 கோடி ரூபாயும் வீணாகிப் போய்விட்டது என்றுதானே அர்த்தம்? என்ற விமர்சனங்களும் எழும்.

இதனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் எழுந்த அழுத்தத்தால் தற்போது 75 சதவீத வருகைப்பதிவு உள்ள மாணவர்கள் மட்டுமே பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது. அதுவே இனியும் தொடரும் என்று அமைச்சர் திடீர் பல்டி அடித்ததற்கான காரணமாக இருக்கலாம்” என அந்த கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.

Views: - 266

0

0