மகிழ்ச்சி..! தமிழகத்தில் கொரோனா குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 2 லட்சம் கடந்தது
3 August 2020, 6:45 pmசென்னை: தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.
உலகின் 200 நாடுகளில் வலம் வரும் கொரோனா தொற்றுகள் இன்னமும் குறையவில்லை. அதிக பாதிப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் பிரேசில் இருக்கிறது.
இந்தியாவிலும் கடுமையான பாதிப்பு உள்ளது. தொடக்கத்தில் குறைந்த தொற்றுகள் காணப்பட்டாலும் பின்னர் உச்சம் பெற்றது. அதிக பாதிப்பு மகாராஷ்டிராவில் தான். அதன் பின்னர் தமிழகத்தில் அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
நாள்தோறும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையை சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. அதன் அடிப்படையில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ஒரே நாளில் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,63,222 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 5,800 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணம் பெற்று உள்ளனர்.
இதுவரை நோயில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,02,283 ஆக உள்ளது. முன் எப்போதும் இல்லாத உச்சமாக முதல் முறையாக இன்று ஓரே நாளில் மட்டும் 109 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,241 என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.