உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைகோ மறுப்பு ; கூட்டணிக்கு நிபந்தனைகள் விதிக்கும் ஸ்டாலினுக்கு வெளிப்படையான எச்சரிக்கை!!

Author: Babu
10 October 2020, 9:04 pm
Vaiko - stalin - updatenews360
Quick Share

சென்னை : திமுக கூட்டணியில் மதிமுக, இடதுசாரிக்கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகும் நேரத்தில் தனிச்சின்னத்தில்தான் மதிமுக போட்டியிடும் என்று வைகோ அறிவித்துள்ளது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு விடுக்கும் வெளிப்படையான எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவும், விடுதலைச்சிறுத்தைகளும் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று ஸ்டாலின் கூறியதாக முதலில் தகவல்கள் வெளிவந்தன. அந்தத் தகவல்களை உறுதியாக்கும் வகையில், மதிமுகவும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் து.ரவிகுமாரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மட்டும் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். ரவிகுமாரும் அதே சின்னத்தில் நின்றிருந்தால் விடுதலைச்சிறுத்தைகளுக்கு இரண்டு எம்.பி.க்கள் கிடைத்திருப்பார்கள். மதிமுகவும் விடுதலைச்சிறுத்தைகளும், மதிமுகவும் 2011 சட்டமன்றத் தேர்தல் முதல் ஒரு கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெறும் அளவுக்கு வாக்குகளையோ, தொகுதிகளையோ பெறவில்லை. இதனால், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரமோ, தனிச்சின்னமோ இல்லாமல் இந்த இரு கட்சிகளும் உள்ளன.

வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 சதவீதம் வாக்குகளை வாங்கும் அளவுக்கோ அல்லது எட்டு தொகுதிகளில் வெற்றிபெறும் அளவுக்கோ இந்த இரு கட்சிகளும் தனிச்சின்னத்தில் போட்டியிட்டால்தான் இழந்த அங்கீகாரம் மீண்டும் கிடைக்கும். அதற்கு அரசியல் எதிர்காலமும் இருக்கும். எனவே, திமுக கூட்டணியில் குறிப்பிட்ட தொகுதிகளைப்பெற்று தனிச்சின்னத்தில் நிற்க மதிமுக தலைவர் வைகோவும், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனும் விரும்புகின்றனர்.

ஆனால், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியதுபோக, குறைந்தது 170 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளது. இத்தனை தொகுதிகளில் நின்றாலும் தனிப்பெரும்பான்மை கிடைக்குமா என்ற சந்தேகம் திமுக தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், இடதுசாரிக்கட்சிகள் ஆகியோரையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக தலைவர்கள் வற்புறுத்திவருவதாக செய்திகள் வந்துள்ளன.

நீண்ட காலம் கழித்து மதிமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ள தொண்டர்கள் இந்த செய்தியால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொதுச்செயலாளர் க. துரைமுருகனும் அமைப்பு செயலாளர் டி.கே.எஸ், இளங்கோவனும் திமுக கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என்று பேசி வருகிறார்கள். திமுக கொடுக்கும் இடங்களை வாங்கிக்கொண்டு அது சொல்லும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத கட்சிகள் கடைசி நேரத்தில் கழற்றிவிடப்படும் என்ற மிரட்டலாகவே இருவரின் பேச்சும் பார்க்கப்படுகிறது.

Vaiko 04 updatenews360

இந்த நிலையில், மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்று வைகோ அறிவித்துள்ளது துரைமுருகனின் கருத்துக்கும் திமுகவின் நிபந்தனைகளுக்கும் வெளிப்படையான பதிலடியாகக் கருதப்படுகிறது. வைகோவைப் பொறுத்தவரை கடைசிநேரத்தில் கூட்டணையை விட்டு வெளியேறத் தயங்காதவர். தோல்வியே வரும் என்று தெரிந்தாலும், தனித்துப் போட்டியிடவோ மூன்றாவது அணி அமைத்தோ களம் காண அவர் கடந்த காலங்களில் தயங்கியதில்லை.

தற்போது உறுதியான பாஜக எதிர்ப்பு நிலையை எடுத்துள்ளதால் திமுக கூட்டணியில் அவர் இடம்பெற்றிருக்கிறார். பாஜக இல்லாத கூட்டணியில் சேராத அணியில் சேரவும் அவர் தயங்கமாட்டார். அதிமுகவுடன் அவர் 1998 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2006 சட்டமன்றத் தேர்தலிலும் 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் ஏற்கனவே கூட்டணியின் இருந்துள்ளார், 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் இருந்து அவர் வெளியேறினாலும் திமுகவை அவர் ஆதரிக்கவில்லை. அதிமுகவுடன் பாஜக இல்லாமல் போனால் அவர் அதிமுகவுடன் கைகோர்க்கத் தயங்கமாட்டார் என்று கூறப்படுகிறது.

dmk_alliance - updatenews360

2001 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியைவிட்டுப் பிரிந்து அவர் தனியாக நின்றபோது, அதிமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து திமுகவைத் தோல்வி அடையச் செய்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் விஜயகாந்தை சேரவிடாமல் அவருடன் இணைந்து மூன்றாவது அணி அமைத்ததால் மீண்டும் அதிமுக எதிர்ப்பு ஓட்டுகள் சிதறி திமுக தோல்வியை சந்தித்தது. கடந்தகால தேர்தல் வரலாற்றில் பாடம் பெறாமல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நடந்துகொள்வதால் 2021 தேர்தலில் மீண்டும் திமுக தோற்குமோ என்ற கலக்கத்தில் இருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

கொடுக்கும் இடங்களை வாங்கிக்கொண்டு வாயை மூடிக்கொண்டு இருந்தால் கூட்டணியில் இருக்கலாம் என்ற தொனியில் திமுக தலைவர்கள் பேசுவது மற்ற கட்சித் தலைவர்களை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது என்றும், அக்கட்சியின் தொண்டர்கள் கொந்தளிக்கிறார்கள். எந்தக் கட்சியைத் திமுக வெளியேற்றும் என்று இப்போது தெரியாத நிலையில், கடைசி நேரத்தில் திமுக கழுத்தறுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டால் என்ன செய்வது என்றும், இப்போதே வெளியேறிவிடலாமா என்றும், கூட்டணித் தலைவர்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டதையே வைகோவின் பேச்சு காட்டுகிறது.

Views: - 56

0

0