சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியா..? 234 தொகுதிகளிலும் விருப்ப மனுக்களை பெறும் தேமுதிக..!!

18 February 2021, 11:14 am
Quick Share

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 25ம் தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெறுவதற்கான தேதியை அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து விட்டன. மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்திருப்பதால், தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகே விருப்ப மனுக்களை பெற வேண்டிய நிலையில் உள்ளன.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள், தொகுதிகளை உறுதி செய்து விட்டு, விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என நிதானத்தை கடைபிடித்து வருகின்றன. இப்படியிருக்கையில், கடந்த முறை போலவே, இந்தத் தேர்தலிலும் அதிமுக, திமுக என இருதரப்பிலும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை தேமுதிக நடத்தி வருகிறது. இதனால், அக்கட்சியின் தொண்டர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். எனவே, அவர்களை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அடிக்கடி புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

vijayakanth-updatenews360

அந்த வகையில், 2006ல் இருந்த ஆதரவு தற்போது இருக்கிறதா..? என்பதை அறியாமல், தனித்து போட்டியிடவும் தயாராக இருப்பதாக அவர் அடிக்கடி கூறி வருவது தேமுதிக தொண்டர்களை தலைதெறிக்க ஓடவிடும் நிலையை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மோசமான அணுகுமுறையினால் அதிமுக, திமுக என இரு கட்சிகளும் தங்களை ஓரங்கட்டும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டதாக பிரேமலதா மற்றும் சுதீஷ் மீது அவர்கள் அதிருப்தியை நேரடியாகவே தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 25ம் தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் சட்டமன்ற தேர்தல் விருப்பமனுக்களை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் 25ம் தேதி முதல் 05ம் தேதி வரை காலை 10 மணியிலிருந்து மாலை 5 வரை விருப்பமனுக்களை பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாகவும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15 ஆயிரமும், தமிழ்நாடு சட்டமன்ற தனி தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற தனி தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூபாய் 5 ஆயிரம் செலுத்தி விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

Vijayakanth - updatenews360

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், தேர்தல் பனி குழு செயலாளர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்டம், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்டம், வார்டு, கிளைக் கழக நிர்வாகிளும், சார்பு அணி நிர்வாகிகளும் மற்றும் கழகத் தொண்டர்களும் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாம் மாபெரும் வெற்றியடைய பாடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் யாருடைய தயவும் இல்லாமல் தனித்து போட்டியிடுவது கவுரமாக இருந்தாலும், தற்போதை கட்சியின் நிலையை புரிந்து தலைமை செயல்பட வேண்டும் என்பதே தேமுதிக தொண்டர்களின் சொல்ல முடியாத கோரிக்கையாக இருந்து வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 1

0

0