தேர்தல் களத்தில் திமுகவை முந்திப் புறப்பட்ட எடப்பாடி எக்ஸ்பிரஸ் : தீபாவளிக் கொண்டாட்ட மனநிலையில் அதிமுக தொண்டர்கள்!

By: Babu
7 October 2020, 4:03 pm
edappadi palanisamy - updatenews360
Quick Share

சென்னை: தேர்தல் களத்தில் திமுகவை முந்திக்கொண்டு, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி எக்ஸ்பிரஸ் வேகத்தில் புறப்பட்டதால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க, ஸ்டாலின் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதில் கடும் நெருக்கடி ஏற்படும் என்று எதிர்க்கட்சிகள் கட்டிய ஆகாசக் கோட்டை தூள்தூளானதால், தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சித் தொண்டர்கள் அடுத்த மாதம் வரும் தீபாவளி இப்போதே வந்துவிட்டது போன்ற கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.

மக்கள் தலைவர்களாக அரசியலில் வெற்றிவாகை சூடிய முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெ. ஜெயலலிதா ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிமுகவின் மூன்றாவது முதல்வர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியை எம்.ஜி.ஆர் தொடங்கிய காலத்தில் இருந்தே முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் அதிமுக எந்த சட்டமன்றத் தேர்தலையும் சந்தித்தது கிடையாது. அந்த மாபெரும் தலைவர்களின் வழியில் இன்று எடப்பாடி பழனிசாமியும் பயணத்தைத் தொடர்கிறார்.

Edappadi_CM_Updatenews360

திமுகவைப் போல் வாரிசு அரசியலும், குடும்ப அரசியலும் என்றும் அதிமுகவில் இருந்ததில்லை. அதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் இன்றைய அறிவிப்பு திகழ்கிறது. மக்களாட்சியில் ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் கருத்தை வழிமொழியும் வகையில், சாதாரண அரசியல் பயணத்தைத் தொடங்கிய ஒருவரும் உயர்ந்த பதவியை அடையலாம் என்ற அரசியல் அதிசயம் அதிமுகவில் மீண்டும் அரங்கேறியுள்ளது.

இன்றைய முதல்வர் பழனிசாமி கட்சியில் கிளைக்கழகச் செயலாளராக 1974-ஆம் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி தனது உழைப்பால் தமிழ்நாட்டின் உயர்பதவியை அடைந்துள்ளார். கொங்கு மண்ணில் சேலம் மாவட்டத்தில் 1954- ஆம் ஆண்டு பிறந்தார் எடப்பாடி பழனிசாமி. கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், 1989-ஆம் ஆண்டு அதிமுக பிளவுபட்டபோது, ஜெ.ஜெயலலிதாவே எம்.ஜி.ஆரின் அடுத்த அரசியல் வாரிசு என்று தெளிவாக அடையாளம் கண்டு அவருக்குத் துணை நின்றார் பழனிசாமி. அவர் 1989- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கட்சியில் பிளவு ஏற்பட்ட சூழலிலும், வாக்குகள் இருபக்கமாகப் பிரிந்த நிலையிலும், கட்சியின் வெற்றிச்சின்னம் இரட்டை இலை இல்லாத களத்தில் சேவல் சின்னத்தில் வெற்றி பெற்றது பெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 1991-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 1996- ஆம் நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். அதிமுக பெரும்தோல்வியை சந்தித்த காலத்தில் கடுமையான வழக்குகளை கட்சியின் தலைவர்களும், நிர்வாகிகளும் எதிர்கொண்ட சூழலில், பல தலைவர்கள் வெளியேறியபோதும், உறுதியுடன் ஜெயலலிதாவுக்குத் துணைநின்றார். அதன்பிறகு, 1998- ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் திருச்செங்கோடு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2011-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நெடுஞ்சாலைத்துறை அமைச்சரானார். விசுவாசமிக்க செயல்பாடுகளால் ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்று முக்கியமான ஐந்து அமைச்சர்களில் ஒருவராக மாறினார். ஜெ. மறைவுக்கு பின் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததால், 2017- ஆம் ஆண்டு முதல்வரானார் பழனிசாமி.

Edappadi palanisamy - updatenews360

ஒரு மாதத்தில் கவிழ்ந்துவிடும் என்று ஸ்டாலின் உள்ளிட்ட பலர் தொடர்ந்து ஆருடம் கூறிவந்த நிலையில், முழுமையான ஆட்சிக்காலத்தை நிறைவு செய்து மீண்டும் முதல்வர் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார் பழனிசாமி.
அதிமுகவில் இருந்து பன்னீர்செல்வம் பிரிந்து சென்று நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசை எதிர்த்து வாக்களித்தபோதும், 18 சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி நின்றபோதும் ஆட்சியை உறுதியோடு காப்பாற்றியது அவரது இமாலய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. 2019-ஆம் ஆண்டு 22 இடங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் 9 தொகுதிகளை வென்று ஆட்சியை நிலைப்படுத்தினார். கடுமையான நிதி நெருக்கடியிலும் ஜெயலலிதா அறிவித்த மக்கள் நலத்திட்டங்கள் எதையும் நிறுத்தாமல் செயல்படுத்தியதோடு மட்டுமின்றி, தனது பங்குக்குப் புதிய திட்டங்களையும் நடைமுறைப்படுத்தினார்.

நீர் வளம் குன்றிய தமிழ்நாட்டில் இருக்கும் நீர்நிலைகளைப் பாதுகாக்க குடிமராமத்துத் திட்டத்தைத் தொடங்கினார். இடைவிடாத சட்டப் போராட்டங்களால் காவிரி ஆணையம் உருவாகக் காரணமாயிருந்து மாநிலத்தின் காவிரி உரிமையைக் காத்தார். அத்திக்கடவு-அவினாசிக் குடிநீர் திட்டம் தொடங்கி காவிரி-குண்டாறு திட்டத்தைத் தொடங்கியது வரை பல பாசனத்திட்டங்களையும் குடிநீர்த் திட்டங்களையும் தொடங்கினார். தமிழகத்தின் பல இடங்களில் உயர்மட்டப் பாலங்களையும் பளபளக்கும் சாலைகளையும் அமைத்தார். மத்திய அரசுக்கு எதிராக மாநிலத்தில் இடைவிடாமல் நடைபெறும் போராட்டங்களை சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படாமல் இன்றுவரை சுமூகமாக சமாளித்து வருகிறார்.

EPS-ops-updatenews360

கொரோனாவால் தமிழ்நாடு அதிகமாகப் பாதிக்கப்பட்டபோது இடைவிடாத நிர்வாக நடவடிக்கைகளினால் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டையும் பெற்றார். கொரோனாக்காலத்திலும் கடுமையான ஊரடங்கு நேரத்திலும் நிதி உதவித் திடடங்களை செயல்படுத்தியும் பொது உணவுத்திட்டத்தில் இலவசமாக உணவுப்பொருட்களை வழங்கியும் மக்களைப் பாதுகாத்த முதல்வர் பழனிசாமி, மக்களின் வாழ்க்கை தேவைகளைக் கருதி உரிய நேரத்தில் தளர்வுகளைத் தந்து பொருளாதார நடவடிக்கைகளையும் வேகப்படுத்தியுள்ளார் புதிய தொழில் முதலீடுகளையும் ஈர்த்துள்ளார்.

கடுமையான போராட்ட சூழலிலும் புன்னகை பூத்த முகத்துடன் அனைவரிடத்திலும், இன்முகம் காட்டும் பழனிசாமி அனைவரும் எளிதில் அணுகும் வண்ணம் பழகும் விதத்தால் ‘காட்சிக் கெளியன் கடும்சொல் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்’ என்ற திருக்குறளில் ஆள்பவரின் இலக்கணமாக வள்ளுவர் சொல்லிய பண்போடு திகழ்பவர். தேவையான நேரத்தில் புயலாக வீசவும் தயங்கமாட்டார். சட்டமன்றத்தில் அரசு மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்ளும்போது இந்த புயல் முகத்தைப் பார்க்கலாம்.

அடுத்த கட்டமாக இன்னும் ஏழு மாதங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பழனிசாமி தயாராகிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாக உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. மாநிலத்தில் 60 தொகுதிகளில் தனியாக வெற்றிபெறுவோம் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் எல்.முருகன் சொல்லி வருகிறார். குறைந்தது 80 தொகுதிகளை எதிர்பார்க்கும் பாமக தலைவர் ச.ராமதாஸ் தனித்துப் போட்டியிடுவது பற்றி அடிக்கடி பேசி பேர வலிமையைக் கூட்டி வருகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் விஜயகாந்தையே முதல்வராக்குவோம் என்று கூறி அதிக தொகுதிகளுக்கு அடிபோட்டுவருகிறார்.

அதிமுக தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் குறைந்தது 150 முதல் 160 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகபட்சமாக 75 இடங்களையே ஒதுக்க முடியும். ஆனால், அதிமுக எந்தவிதக் குழப்பமும் இன்றி வலிமையான தலைமையுடன் முதல்வர் வேட்பாளருடன் களம் இறங்குவதால், கூட்டணிக் கட்சிகளால் அதிமுகவுக்கு நெருக்கடி தர முடியாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CM Edappadi - updatenews360

எந்தக் கூட்டணிக் கட்சிகளை வைத்துக்கொள்வது, எதைக் கழற்றிவிடுவது என்பது போன்ற சாமர்த்தியமான முடிவுகளையும், யாருக்கு எத்தனை தொகுதிகளைத் தருவது, அதிமுகவுக்கு வலிமையான வெற்றிவாய்ப்புகள் இருக்கும் தொகுதிகளை எப்படித் தக்கவைப்பது என்பது போன்ற உத்திகளையும் முதலமைச்சர் பழனிசாமி எடுக்க வேண்டும்.

தொகுதிப் பேச்சுகளை வெற்றிகரமாக முடித்தபின், சொந்தக் கட்சியினருக்கு சரியான தொகுதிகளை ஒதுக்குவதிலும், தேர்தல் பிரச்சாரத்திலும், களப்பணிகளை ஒருங்கிணைப்பதிலும் மக்களைக் கவரும் திட்டங்களைத் தேர்தல் அறிக்கையில் சேர்த்து, அதை மக்களிடம் கொண்டுசெல்வதும் முதல்வர் பழனிசாமியின் முன்புள்ள அடுத்தடுத்துள்ள சவால்களாகும். இதுவரை எத்தனையோ சோதனைகளை வெற்றிகரமாக சமாளித்த எடப்பாடி பழனிசாமி, எதிர்வரும் போராட்டங்களிலும் வெற்றிபெறுவார் என்று உறுதியுடன் அதிமுக தொண்டர்கள் அவர் பின்னே களம் நோக்கி அணிவகுத்து நிற்கின்றனர்.

Views: - 44

0

0