மீண்டும் ரீவைண்டாகும் ஆர்.கே. நகர்…!! உஷாராகும் அமுமக நிர்வாகிகள்!!

28 January 2021, 9:45 pm
AMMK cover - updatenews360
Quick Share

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி மரணமடைந்தார்.
இதைத் தொடர்ந்து, அவர் பதவி வகித்து வந்த ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது.
பொதுவாக, ஒரு தொகுதியில் மக்கள் பிரதிநிதி மரணம் அடைந்து விட்டால், அங்கு அடுத்த ஆறு மாதத்துக்குள் தேர்தல் நடத்தி புதிய பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தேர்தல் நடைமுறை.

ஆனால், 2017 பிப்ரவரியில் சசிகலாவின் சிறைவாசம், அதைத்தொடர்ந்து முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றது, அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணி தனியாக பிரிந்து சென்றது என தமிழக அரசியலில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறின. இந்த நேரத்தில்தான் அதிமுகவை கைப்பற்றும் பகீரத முயற்சியில் சசிகலாவின் அக்காள் மகனான TTV தினகரன் இறங்கினார்.

dinakaran- updatenews360

ஆனால், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் அதி தீவிர விசுவாசிகளான எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் இதை கடுமையாக எதிர்த்தனர். பின்பு இவர்கள் இருவரும் கை கோர்த்தனர். அதிமுகவும் ஒன்றுபட்டது. அதுவரை முடக்கி வைக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னமும் அதிமுகவுக்கு மீண்டும் கிடைத்தது.

இந்த நிலையில்தான் ஜெயலலிதா மறைந்து ஓர் ஆண்டுக்குப்பிறகு 2017 டிசம்பர் மாதம் 21-ம் தேதி ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் சுயேச்சையாக களம் கண்ட தினகரன் 89 ஆயிரம் வாக்குகள் பெற்று, அபார வெற்றி கண்டார். மத்திய பாஜக அரசு தனக்கு தீங்கு இழைத்து விட்டதாக கூறிய அவர், கடுமையாக பாஜகவை எதிர்த்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனால்தான் சிறுபான்மையினர் வாக்குகள் ஒட்டுமொத்தமாக அவர் பக்கம் திரும்பி வெற்றியை அவருக்கு தேடிக் கொடுத்தது.

அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,000 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடத்திற்கும், திமுக வேட்பாளர் மருது கணேஷ் 24,500 ஓட்டுகள் பெற்று மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டனர். திமுகவினரும் கூட பெருமளவில் தினகரனுக்கு வாக்களித்ததாக அப்போது கூறப்பட்டது. இதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் திமுகவிற்கு டெபாசிட் பறிபோனதுதான். மேலும், ஒரு இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையும் TTV தினகரனுக்கு கிடைத்தது.
ஆனால் இதன் பிறகுதான் அவருடைய நடவடிக்கைகள் முற்றிலும் மாறின.

dinakaran - 18 mla - updatenews360


அதிமுக அரசை கவிழ்ப்பதற்காக 2018 தொடக்கம் முதல் 2019 மே மாதம் வரை அவர் மேற்கொண்ட முயற்சிகள் கஜினிமுகமது எடுத்த படையெடுப்பை விட அதிகமாக இருந்தது. இதற்கிடையே, அவர்தான் அதிமுகவின் எதிர்காலம் என்று கருதி அவருடன் சென்ற 18 எம்எல்ஏக்களின் பதவியும் பறிபோனது.

2019 நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு 9 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. தினகரன் தொடங்கிய அமமுக கட்சி அந்தத் தேர்தலில் படுதோல்வி கண்டது.

இந்த நிலையில்தான், கடந்த 4 ஆண்டுகளாக எந்த மத்திய பாஜக அரசை தினகரன் கடுமையாக எதிர்த்து வந்தாரோ, அதே பாஜகவின் ஆதரவதைத் தேடித்தான் இன்று அவர் டெல்லியில் முகாமிட்டு தவமாய் தவம் கிடக்கிறார். ஆடிட்டர் குருமூர்த்தி, சுப்பிரமணியசாமி எம்பி போன்றவர்கள் மூலம் எப்படியோ டெல்லி பாஜக மேலிடத்தை அணுகி மீண்டும் அதிமுகவில் நுழைவதற்காக கடந்த 6 மாதங்களாகவே காய் நகர்த்தியும் வருகிறார்.

gurumoorthi - ttv dinakaran - updatenews360

‘அமமுகவுக்கு தமிழ்நாட்டில் 4 சதவீத ஓட்டுகள் உள்ளது. அதனால் எங்கள் கட்சியின் ஆதரவு இல்லாமல் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது’ என டெல்லி மேலிட பாஜக தலைவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து தூபம் போட்டும் வருகிறார்.

இதனால்தான் அண்மையில் டெல்லிக்கு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரையும் சந்தித்த பின்னர் “அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை. தினகரனையும் சேர்க்க முடியாது” என்பதை திட்டவட்டமாக அறிவித்தார். அவர்கள் இருவரும் அதிமுகவுக்குள் வர நேர்ந்தால் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் ஒரு தர்ம யுத்தத்தை தொடங்குவார் என்பதையும் அவர் சூசகமாக குறிப்பிட்டார்.

CM edappadi palanisamy - updatenews360

அதேநேரம் அதிமுகவில் தங்களை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு அதிமுகவை தோற்கடிக்க தினகரன் திட்டம் தீட்டி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் அவர் ஏற்கனவே போட்டியிட்டு வென்ற ஆர்.கே. நகரில் மீண்டும் களம் இறங்கப் போவது உறுதி என்றும் அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில் அவர் தனது சொந்த தொகுதியான மன்னார்குடியில் போட்டியிடலாம் என்று கருதப்பட்டது. மேலும் அமமுகவுக்கு செல்வாக்கு அதிகம் உள்ளதாக கருதப்படும் மேலூர் தொகுதியில் அவர் போட்டியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டு ஆர்.கே. நகரில் மீண்டும் போட்டியிடுவதில் மிக உறுதியாக இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வென்ற ஆர்.கே. நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு ஜெயித்தால்தான் தமிழக அரசியலில் மாபெரும் கவுரவம் தனக்கு கிடைக்கும் என்று அவர் கருதுவதுதான் இதற்கு முக்கிய காரணம். மேலும் திமுகவின் கோட்டை என்று கூறப்படும் சென்னைக்குள் அமமுகவை ஆழமாக காலூன்ற வைத்துவிட்டால், 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் ஆட்சியை பிடித்து விடலாம் என்றும் தினகரன் உறுதியாக நம்புகிறார்.

Chennai TTV Dinakaran Byte- updatenews360

இது குறித்து அமமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “அண்ணன் தினகரன் மீண்டும் ஆர்.கே. நகர் தொகுதியில் களம் இறங்குவார். அது ஜெயலிதாவுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மிகவும் ராசியான தொகுதி, அதனால்தான் 2017-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அண்ணன் இங்கே அமோக வெற்றி பெற்றார். அவர் இருபது ரூபாய் டோக்கன் கொடுத்துதான் வெற்றி பெற்றார் என்று கூறுவதெல்லாம் பொய்யான குற்றச்சாட்டுகள் என்பதை நிரூபித்து, நாங்கள் ஆர். கே. நகரில் மீண்டும் அமோக வெற்றி பெறுவோம்.

அண்ணன் இன்னொரு கோணத்திலும் ஆர்.கே. நகரில் போட்டியிடுவதை மிகவும் விரும்புகிறார். அவர் மன்னார்குடியிலோ, மேலூரிலோ போட்டியிட்டால் வெற்றி பெறுவது மிக மிகச் சுலபம். ஆனால், அதற்கு எளிதில் சாதிய சாயம் பூசி விடுவார்கள். எனவேதான் அனைத்து தரப்பு மக்களும் வசிக்கும் ஆர்.கே. நகரில் இந்த முறையும் அண்ணன் போட்டியிடுவதை விரும்புகிறார்.

2017 இடைத்தேர்தலில் எப்படி 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டாரோ அதைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணன் இம்முறையும் வெற்றி பெறப்போவது உறுதி. இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

வரும் சட்டப் பேரவை தேர்தலில் எங்களால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று தெரியும். ஆனால், குறைந்தபட்சம் 70 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என்பதே எங்களது இலக்கு.

அதேநேரம் நாங்கள் நினைத்தால் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியை தோல்விக் காணச் செய்யமுடியும். சசிகலாவையும், தினகரனையும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளாவிட்டால், இந்த வேலையைத்தான் முதலில் பார்ப்போம். அதற்கு முன்பாக இரட்டை இலை சின்னத்தை முடக்குவோம். எங்களுடைய இலக்கு 2026 சட்டப் பேரவை தேர்தல்தான்” என்று மனம் திறந்து அந்த நிர்வாகிகள் கூறினர்.

அப்படியென்றால் ஆர்.கே. நகரில் இம்முறை அதிமுக, திமுக கூட்டணிகளுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. சபாஷ் சரியான போட்டி தான்!

Views: - 0

0

0

1 thought on “மீண்டும் ரீவைண்டாகும் ஆர்.கே. நகர்…!! உஷாராகும் அமுமக நிர்வாகிகள்!!

Comments are closed.