ஏறுமுகத்தில் எடப்பாடியார் செல்வாக்கு!!! சரிந்து வரும் ஸ்டாலின் பிம்பம்!!!

4 November 2020, 7:17 pm
eps - stalin - updatenews360
Quick Share

சென்னை : வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையிலான நேரடிப்போட்டியாக இருக்கும் என்பது உறுதியான நிலையில், முதல்வரின் செல்வாக்கு அவரது ராஜதந்திர நடவடிக்கைகளால் உயர்ந்து வரும் சூழலில், ஸ்டாலின் பல்வேறு பிரச்சினைகளில் தொடர்ந்து சொதப்புவதால் அவருக்கான மக்கள் ஆதரவு சரிந்து வருகிறது.

தனது அரசியல் பயணத்தை வேரில் இருந்து தொடங்கிய பழனிசாமி இன்று தனது சாமர்த்தியமான செயல்பாடுகளால் மக்களிடம் நேர்மறையான பிம்பத்தை உருவாக்கியுள்ளார். ஆட்சிக்கு வந்த நாள் முதல் பல்வேறு சவால்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அனைத்திலும் வெற்றிபெற்று அடுத்த முதல்வருக்கான களத்தில் நிற்கிறார்.

EPS-ops-updatenews360

அதிமுகவில் இருந்து பன்னீர்செல்வம் பிரிந்து சென்று நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசை எதிர்த்து வாக்களித்தபோதும், 18 சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி நின்றபோதும், ஆட்சியை உறுதியோடு காப்பாற்றியது அவரது இமாலய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. 2019-ஆம் ஆண்டு 22 இடங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் 9 தொகுதிகளை வென்று ஆட்சியை நிலைப்படுத்தினார். கடுமையான நிதி நெருக்கடியிலும் ஜெயலலிதா அறிவித்த மக்கள் நலத்திட்டங்கள் எதையும் நிறுத்தாமல் செயல்படுத்தியதோடு மட்டுமின்றி, தனது பங்குக்குப் புதிய திட்டங்களையும் நடைமுறைப்படுத்தினார். இதனால், மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு நாள்தோறும் உயர்ந்துவருகிறது.

குடிமராமத்து திட்டம், காவிரி ஆணையம் உருவாகக் காரணமான சட்ட போராட்டங்கள், அத்திக்கடவு-அவினாசிக் குடிநீர் திட்டம் தொடங்கி காவிரி-குண்டாறு திட்டத்தைத் தொடங்கியதுவரை பல பாசனத்திட்டங்கள், பாலங்கள் ஆகியவற்றால் பழனிசாமியின் ஆட்சிக்கு பாராட்டுக் குவிகிறது.

கொரோனாவால் தமிழ்நாடு அதிகமாகப் பாதிக்கப்பட்டபோது, இடைவிடாத நிர்வாக நடவடிக்கைகளினால் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டையும் பெற்றார். கொரோனாக் காலத்திலும் கடுமையான ஊரடங்கு நேரத்திலும் நிதி உதவித் திடடங்களை செயல்படுத்தியும், பொது உணவுத்திட்டத்தில் இலவசமாக உணவுப்பொருட்களை வழங்கியும், மக்களைப் பாதுகாத்த முதல்வர் என்ற பேரையும் வாங்கியுள்ளார். உரிய நேரத்தில் தளர்வுகளைத் தந்து பொருளாதார நடவடிக்கைகளையும் வேகப்படுத்தியுள்ளார் புதிய தொழில் முதலீடுகளையும் ஈர்ப்பதில் தமிழ்நாட்டை இரண்டாவது இடத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

eps - tamilnadu - updatenews360

அண்மையில் அதிரடியாக அரசாணை வெளியிட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி திமுக கூட்டணிக் கட்சிகளின் பாராட்டையும் பழனிசாமி பெற்றார். அரசாணை வெளியிட்டவுடன் ஸ்டாலின் மட்டும் இந்த ஆணை சட்டரீதியாக செல்லுமா..? இல்லையா..? என்று கேள்விகேட்டு அரசியல் செய்ததுபோது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், விடுதலைச்சிறுத்தைகளும் அவருடன் இணைந்து பேச மறுத்ததால் இப்பிரச்சினையில் ஸ்டாலின் மட்டும் தனியாகப் பேசிக்கொண்டிருக்கும் நிலை உருவானது.

இந்தப் பிரச்சினை மட்டுமில்லாமல் பல்வேறு பிரச்சினைகளிலும் உறுதியான கொள்கை முடிவு எடுக்காமல் தனக்கென ஒரு பிம்பத்தைக் கட்டியமைக்க முடியாத நிலையில் ஸ்டாலின் இருக்கிறார். திருமாவளவன் மனுஸ்மிருதி குறித்துப் பேசியபோதும் ஸ்டாலின் வெறுமனே திருமாவளவன் மீது வழக்கு தொடர்ந்ததை மட்டும் கண்டிக்கிறார். அவரது கருத்து எதையும் கூறவில்லை. பாஜக எழுப்பும் இந்துத்துவப் பிரச்சினைகளில் சிறிய கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் பேசும்போது, அந்தக் கொள்கையில் அதைவிடத் தீவிரமாக இருக்க வேண்டிய திமுகவின் தலைவர் அது குறித்துப் பேசவும் அஞ்சுகிறார்.

dmk_ stalin - updatenews360

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தனியாக பிம்பம் ஒன்று இருந்தது. ஆனால், அவரது மகன் என்பதைத் தவிர ஸ்டாலினுக்கு எந்த அடையாளமும் இல்லை. எல்லாவற்றையும் தாண்டி மக்களின் கடும் வெறுப்புக்கு ஆளாவது, ஸ்டாலின் அவரது மகன் உதயநிதியை வளர்க்கப் பெரும் முயற்சி செய்வதுதான். உதயநிதியின் நடவடிக்கைகளும் கட்சியில் அவரது அதிகாரம் கொடிகட்டிப் பறப்பதும் தொண்டர்களையும், மக்களையும் கடும் எரிச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறது. திமுகவில் உதயநிதிக்கும், கருணாநிதியின் மகள் கனிமொழிக்கும் இடையே நடைபெறும் குடும்ப மோதலும் மக்கள் மத்தியில் அருவறுப்பாகப் பார்க்கப்படுகிறது.

தற்போது, திமுகவின் தென் மண்டல பொறுப்பாளராக கட்சியின் மகளிர் அணித்தலைவியும், எம்.பி.யுமான கனிமொழிக்குத் தருவதை கட்சித்தலைவர் மு.க, ஸ்டாலினின் மகன் உதயநிதி கடுமையாக எதிர்ப்பதால் மூத்த திமுக தலைவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். தென் மாவட்டங்களுக்குத் தொடர்பில்லாத முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை அந்த மண்டலத்தின் பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என்று உதயநிதி வரிந்துகட்டுவதால் தென்மண்டல திமுக நிர்வாகிகளும் உள்ளுக்குள் குமுறிவருகிறார்கள்.

stalin-udhayanidhi-updatenews360

உதயநிதிக்கு கட்சியில் தரும் முக்கியத்துவம் மூத்த தலைவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. நீண்ட காலமாகக் கட்சியில் இருக்கும் தொண்டர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் உழைத்துக்கொண்டிருக்க, அரசியலில் நுழைந்தவுடன் இளைஞர் அணித்தலைவராகிவிட்ட உதயநிதியை உடன்பிறப்புகளும் வெறுக்கின்றனர். பொதுமக்களும் உதயநிதியை திமுக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை கடும் எரிச்சலுடன் பார்க்கிறார்கள். இதனால், உதயநிதியுடன் சேர்த்து மக்கள் திமுகவையும் குப்பையில் வீசிவிடுவார்களோ என்றும், பத்தாண்டுகளுக்குப் பின் 2021-ல் வரும் வாய்ப்பும் வீணாகிவிடுமோ என்றும் திமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் அச்சத்தில் கலங்கிப் போயிருக்கிறார்கள்.
இதேநிலை தொடர்ந்தால் வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே நடைபெறும் நேரடி யுத்தத்தில் பழனிசாமி வென்று மீண்டும் வெற்றிக்கோட்டைத் தொடுவார் என்றும் தொடர்ந்து கோட்டைவிடும் ஸ்டாலின் இந்தமுறையும் கோட்டைவிடுவார் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Views: - 24

0

0