தொகுதிக்காக அலைமோதும் அவலம் : தத்தளிக்கும் சிறுகட்சிகள் கரை சேருமா? மூழ்குமா?…

12 January 2021, 6:08 pm
ADMK - dmk - updatenews360
Quick Share

தமிழகத்தில் 2016-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கும் வருகிற மே மாதம் நடைபெற உள்ள தேர்தலுக்கும் இடையே ஒரு மிகப் பெரிய வித்தியாசத்தை காண முடிகிறது.

2016 தேர்தலின்போது தமிழகத்தின் பெரும் ஆளுமை சக்திகளாக திகழ்ந்த ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவருமே இன்று உயிருடன் இல்லை. தமிழக தேர்தல் வரலாற்றில் இதுபோன்ற வினோத சூழல் காணப்படுவது இதுவே முதல் முறை. 1952லிருந்து கடந்த 2016 தேர்தல் வரை எடுத்துக்கொண்டால் ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர்,ஜெயலலிதா
என்று வல்லமை பெற்ற தலைவர்களே தமிழகத்தில் கோலோச்சினர்.

இன்றைய நிலையை அன்றைய காலகட்டத்துடன் ஒப்பிடுவது பொருத்தமானது அல்ல. என்றபோதிலும் அதிமுகவை பொறுத்தவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் பெரும் உந்து சக்திகளாக திகழ்கின்றனர்.


ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின் 2017-ல் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி பதவியை தக்க வைக்க முதலில் தடுப்பாட்டம் ஆடினாலும் பிறகு ஒன்றிரண்டு ரன்களாக எடுக்க ஆரம்பித்து, அதன்பின் 20 ஓவர் போட்டிகளில் அதிரடி காட்டும் பேட்ஸ்மேன் போல பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசித் தள்ளி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி, முதல்வர் பதவியில் தாக்குபிடிப்பதே கஷ்டம் என்று நினைத்தவர்கள் கூட ஆச்சரியப்படும் அளவிற்கு தமிழக மக்களிடையே இன்று அவருக்கு ஆதரவு பெருகி இருக்கிறது. மக்கள் மனதிலும் இடம்பிடித்து விட்டார்.

எந்த குறையும் சொல்ல முடியாதவாறு அவருடைய ஆட்சி மிகச் சிறப்பாக இருப்பதாக நடுநிலையாளர்களும் கருத்து கூறுகிறார்கள்.

அதேநேரம் திமுக தலைவர் ஸ்டாலின், தந்தை மு.கருணாநிதியின் அரசியல் பின்புலத்தை கொண்டவராக கருதப்படுகிறார். அவர், ஏற்கனவே தமிழகத்தின் துணை முதல்வராக பதவி வகித்தவர் என்பதால் அவரும் தமிழக அரசியல் களத்தில் மக்களால் அறியப்பட்ட தலைவராக உள்ளார்.

இதனால் இவர்கள் இருவருக்கும் வரும் தேர்தல் களம் சபாஷ் சரியான போட்டி! என்ற நிலையை உருவாக்கி இருக்கிறது.

EPS - stalin - updatenews360

கடந்த ஆண்டின் இறுதிவரை தமிழக அரசியலில் இன்னொரு பெரும் சக்தியாக நடிகர் ரஜினி உருவெடுக்கலாம் என்று கருதப்பட்டது. அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிடப் போவது உறுதி என்று அவர் அறிவித்ததால் இப்படி எதிர்பார்க்கப்பட்டது.

ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆட்சியை கைப்பற்றுவாரா? அல்லது பெருமளவில் ஓட்டுகளை பிரித்து பிரதான கட்சிகளுக்கு வேட்டு வைப்பாரா? என்ற பரபரப்பு சூழலும் தமிழக அரசியலில் உருவானது.

இதனால் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த சிறு சிறு கட்சிகள் எல்லாம் தங்களுடைய தூக்கத்தை கலைத்து கூட்டணிக்காக காவடி எடுக்க ஆரம்பித்தன. எங்கு ஆதாயம், அதிக தொகுதிகள் கிடைக்கிறதோ அங்கே போகலாம் என்று அவை கணக்கும் போட்டன.

ஆனால் கடைசி நேரத்தில் ரஜினி ‘ஜகா’ வாங்கி விட்டார்.
இதனால் அவரை வைத்து அரசியல் களம் காணலாம் என்று கனவு கண்டிருந்த சிறு சிறு கட்சிகள் எல்லாம் நொந்து நூடுல்ஸ் ஆகிப்போனதுதான் மிச்சம்.

ஏனென்றால் ஜெயலலிதாவும், கருணாநிதியும் இருந்தபோது இந்த சிறு சிறு கட்சிகளை எப்படி ‘டீல்’ செய்வது என்பது அவர்களுக்கு அத்துபடி.

இந்தக் கட்சிகளுக்கு ஓரிரு தொகுதிகளை கொடுத்து தங்கள் கூட்டணிக்குள் இழுத்து போட்டு விடுவார்கள்.
லெட்டர் பேடு கட்சிகளுக்கு ‘கவனிப்பு’ மட்டும் இருக்கும்.

kamal_seeman - updatenews360

இப்போது அதிமுக, திமுக தவிர போட்டி களத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், திரைப்பட இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை மட்டுமே மக்களுக்கு ஓரளவு பரிச்சயமான கட்சிகளாக திகழ்கின்றன. இவற்றுடன் கூட்டணி சேர்ந்தால் எந்த விதத்திலும் லாபம் கிடைக்காது என்பதை இந்த சிறு சிறு கட்சிகள் அறிந்தே வைத்திருக்கின்றன.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பல சிறு கட்சிகள் தற்போது வெவ்வேறு மந்தைகளில் இருக்கின்றன.

2016 தேர்தலில் அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை, தமிழ் மாநில முஸ்லிம் லீக் என்று சுமார் அரை டஜன் சிறு கட்சிகள் இருந்தன.

ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் 2017க்கு பின்பு பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருந்து கழன்று கொண்டன.
இதற்கு முக்கிய காரணம் பாஜகவுடன் அதிமுக கைகோர்த்ததுதான் என்று இந்த கட்சிகள் குற்றம் சாட்டின. இதில் ஒரு சில கட்சிகள் தற்போது திமுகவுடன் நெருக்கம் காட்டி வருகின்றன.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக விவசாயிகள், உழைப்பாளர்கள் கட்சி, சமூக சமத்துவ படை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று அதிமுகவை போலவே திமுக கூட்டணியிலும் சுமார் அரைடஜன் கட்சிகள் இருந்தன. இதில் பெரும்பாலானவை தற்போதும் திமுக கூட்டணியில் தொடர்கின்றன.

இதேபோல் விஜயகாந்த் தலைமையில் அமைந்த தேமுதிகவின் மக்கள் நலக் கூட்டணியில் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழ் மாநில காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி என 5 கட்சிகள் இருந்தன.

Vijayakanth - updatenews360

2019 நாடாளுமன்ற தேர்தலின்போது தேமுதிக தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் அப்படியே திமுக கூட்டணிக்கு தாவி விட்டன.
2016-ல் பாஜக அணியில் இந்திய ஜனநாயக் கட்சி இடம் பெற்றிருந்தது. அதுவும் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக அணிக்கு சென்றுவிட்டது.

பாமகவும், நாம் தமிழர் கட்சியும் கடந்த சட்டப் பேரவை தேர்தலில் தனித் தனியாகயே களம் கண்டன.

இவை தவிர தமிழ்நாடு இளைஞர் கட்சி, இந்திய மக்கள் முன்னேற்ற கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய சமூக ஜனநாயக கட்சி, AIMIM, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி என்று பல குட்டிக் கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. இந்தக் கட்சிகளால் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் கூட பல தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை தடுத்து நிறுத்தின என்பது உண்மை. இப்போது எதற்கு இந்த நினைவூட்டல்?

காரணம் இருக்கிறது.

ரஜினி அரசியல் களத்திற்கு வருவார் என்று எதிர்பார்ப்பு இருந்தவரை இந்த சிறு கட்சிகளுக்கு கடும் கிராக்கி இருந்தது.

Rajini Discharge - Updatenews360

தாங்கள் சேரும் பிரதான அணியில் கறாராக பேரம் பேசி ஓரிரு தொகுதிகளை பெற்று எம்எல்ஏ ஆகி விடலாம் என்று இவை கனவு கண்டன. ஒருவேளை, சீட்டு கிடைக்காவிட்டாலும் கூட வைட்டமின் ‘சி’ கிடைக்கும் என்றும் கணக்கு போட்டிருந்தன. ஆனால் நடிகர் ரஜினியின் முடிவு யாருக்கு பாதகமாக அமைந்ததோ, இல்லையோ இந்த சிறு கட்சிகளுக்கு பேரிடியாக அமைந்து விட்டது.

தற்போது, அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே நேரடி போட்டி என்பதுபோல் தேர்தல் களம் அமைந்து விட்டதால் இந்த கட்சிகள் எல்லாம் தத்தளித்து நிற்கின்றன.

சீட்டுகள் கிடைத்தால் வந்த வரை லாபம், வைட்டமின் ‘சி’ யும் சேர்ந்து கிடைத்தால் பெரும் அதிர்ஷ்டம்… என்ற நிலையில் தங்களை யாரும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள மாட்டார்களா? என்று ஏங்கி தவியாய் தவித்து வருகின்றன.

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே ஏதாவது ஒரு கூட்டணியில் இடம் பிடித்து, சீட் வாங்கி விடவேண்டும் என்று இந்த கட்சிகள் துடியாய் துடிக்கின்றன. ஆனால் இதுவரை இவர்களை தேடுவார் யாரும் இல்லை. அழைப்பு விடுத்து அரவணைப்பாரும் கிடையாது. குறிப்பாக திமுக ஆதரவு குட்டி கட்சிகள்தான் இதில் அதிகமாய் விழி பிதுங்கி நிற்கின்றன.

எப்படியும் கடைசி நேரத்தில் தங்களை தேடி பெரிய கட்சிகள் வரும் என்ற நம்பிக்கையில் இந்த கட்சிகள் காத்திருக்கின்றன.

பண பலம் மிகுந்த கட்சிகளாக கருதப்படும் இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி போன்றவற்றின் நிலைமை இதில் சற்று வித்தியாசமானது. இவையும் கூட பிரதான கட்சிகளின் கண் அசைவுக்காக காத்திருப்பதுதான் வேடிக்கை.

தமிழகத்தின் பெரிய கட்சிகளின் கூட்டணியில் இடம் கிடைக்குமா? தொகுதிகள் ஒதுக்கப்படுமா? என்ற வினாவுக்கு விடை தெரியாத நிலையில் கடலில் தத்தளிப்பது போன்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த சிறு சிறு கட்சிகள் கரை சேருமா? அல்லது மூழ்குமா? என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

Views: - 8

0

0