2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் பாமக… முடிவை மாற்றிய ராமதாஸ்… பாஜகவின் கருணைப் பார்வை கிடைக்குமா…?

Author: Babu Lakshmanan
9 July 2022, 2:23 pm
Quick Share

2024 நாடாளுமன்ற மற்றும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழகத்தில் இப்போதே ஆயத்தமாகிவிட்ட மாநில கட்சி எது? என்று கேட்டால் டாக்டர் ராமதாஸின் பாமக என கண்களை மூடிக்கொண்டு பதில் சொல்லி விடலாம்.

புது தலைமை

2016 தமிழக சட்டப் பேரவை தேர்தலில் ‘மாற்றம் முன்னேற்றம்’ என்ற முழக்கத்தை எழுப்பி 230 தொகுதிகளில் பாமக தனித்து போட்டியிட்டது. அப்போது பாமகவின் இளைஞரணி தலைவராக இருந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.

ஆனாலும் அந்த தேர்தலில் மொத்தம் 23 லட்சம் ஓட்டுகளை வாங்கிய அக்கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இத்தனைக்கும் அப்போது 6 முனை போட்டி நிலவியது. வன்னியர்கள் அதிகம் நிறைந்த பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் அன்புமணி 58 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி இரண்டாம் இடம் பிடித்தார்.

2019 நாடாளுமன்ற தேர்தலும் அவருக்கு கை கொடுக்கவில்லை. தர்மபுரி தொகுதியில் அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்ட அன்புமணி வெற்றி வாய்ப்பை இழந்தார். என்றபோதிலும் பின்னர் அதே ஆண்டு அதிமுக ஆதரவால் மாநிலங்களவை எம்பியாக தேர்வானார்.

இதன்பின் கடந்த 3 ஆண்டுகளாக டாக்டர் ராமதாசும், அன்புமணியும் அரசியலில் அதிக ஆர்வம் காட்டினாலும் கூட பெரும்பாலும், முகநூல் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் அறிக்கை வெளியிடுவது, கருத்து தெரிவிப்பது போன்றவற்றில்தான் கவனம் செலுத்தி வருகின்றனர். கட்சி பணிகளுக்காக அவ்வப்போது வட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதும் உண்டு.

‘பாமக 2.0’

இந்த நிலையில்தான் கடந்த மே மாதம் பாமக தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி, ‘பாமக 2.0’ என்ற செயல் திட்டத்தை அதிரடியாக கையில் எடுத்துள்ளார்.

அதன்படி 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாமக தனித்துப் போட்டியிட்டு எப்படியும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பது தெரிகிறது. இலக்கு சட்டப் பேரவை தேர்தல்தான் என, பாமக நிறுவனர் ராமதாசும், அன்புமணியும் கூறினாலும் கூட அதற்கு முன்பாக 2024 நாடாளுமன்ற தேர்தலில் குறைந்த பட்சம் 5 எம்பிக்களையாவது பெற்று, மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற வேண்டும் என்பது அவர்களின் பிரதான நோக்கமாக உள்ளது.

PMK - Updatenews360

அப்போதுதான் தங்களது கட்சிக்கு15, 20 வருடங்களுக்கு முன்பு இருந்ததுபோல மதிப்பு கிடைக்கும் என்றும் இழந்த செல்வாக்கையும் மீட்க முடியும் எனவும் தந்தையும் மகனும் நம்புகின்றனர்.

தனித்து வெற்றி பெற முடியாது என்பதை, 2016 தேர்தலிலேயே பாமக உணர்ந்து விட்டது. எனவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் அணியில் சேர, ராமதாஸ் விரும்புகிறார். உள்கட்சி குழப்பங்களால், அதிமுக நெருக்கடியை எதிர்கொண்டிருந்தாலும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கையே அதிமுகவில் ஓங்கும் என்பதும் அவருக்கு நன்றாக தெரிகிறது.

அதனால் தமிழகத்தில் அதிமுக, பாஜக தலைமையில் அமையும் கூட்டணியில் இணைவதே நல்லது என்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணியை உருவாக்கிவிடும், அக்கூட்டணியில் 2019 தேர்தல் போலவே 7 தொகுதிகளை பேரம் பேசி வாங்கி விட முடியும். அதில் 5 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி காணலாம் என்றும் பாமகவின் மூத்த தலைவர்கள் டாக்டர் அன்புமணியிடம் கூறியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு உள்ளது.

2024 தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று உறுதியாக கூறப்படுவதுதான் இதற்கு காரணம். தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடக்கும் நிலையில் பாஜகவுக்கு வெற்றி எளிதாக கிடைத்துவிடும் என்றும் அந்த தலைவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் அன்புமணியிடம் தெரிவித்துள்ளனர்.

எதிர்ப்பு

அதேசமயம் திமுக கூட்டணியில் இணைவதில் பாமகவுக்கு பல சிக்கல்கள் உள்ளன. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவை பாமகவின் வரவை விரும்பவில்லை என்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் திமுக கூட்டணியில் பாமக சேர்ந்தால் தங்களுக்கு கிடைக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து போய்விடும் என்று அந்த கட்சிகள் நினைப்பதுதான்.

ஏற்கனவே தேசிய அரசியலில் திமுக தீவிர ஆர்வம் காட்டி வருவதால் அக்கட்சி மட்டுமே
32 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் என்று கூறப்பட்டு வருகிறது.
இதுபோன்ற நிலையில் தங்களுக்கு கடந்த தேர்தலில் திமுக ஒதுக்கிய தொகுதிகள் கைவிட்டுப் போய்விடக் கூடாது என்பதில் காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் உஷாராகவே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை திமுக கூட்டணியில் சேர்ந்து, மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்துவிட்டால் 2026 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும் எண்ணம் சிதைந்து போய் விட வாய்ப்பும் உண்டு.

அதேபோல திமுக கூட்டணியிலிருந்து, காங்கிரஸ் கழற்றிவிடப்பட்டு பாமக சேர்க்கப்பட்டாலும் அக்கட்சி எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைக்குமா? என்பதும் சந்தேகம்தான். இதனால் திமுக கூட்டணியில் இணைவதை இரண்டாவது சிந்தனையாகத்தான் பாமக வைத்துள்ளது என்று சொல்லப்படுகிறது.

முன் அனுமதி தேவையில்லை

அதேநேரம் கட்சியை பலப்படுத்தினால்தான் கூட்டணி தேடி வரும் என,
கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ள ராமதாஸ், அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன், மாவட்ட வாரியாக டாக்டர் ராமதாஸ் தினமும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை, தொண்டர்களை சந்திப்பதை வழக்கமாகவும் கொண்டுள்ளார். அதேபோல, தினமும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை, செல்போனில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் பேசியும் வருகிறார். தைலாபுரம் தோட்டத்தில் தன்னை சந்திப்பதற்காக யாரும் முன் அனுமதி பெறத் தேவையில்லை என்றும், ராமதாஸ் அறிவித்து இருக்கிறார். மேலும் நேற்று தனது கட்சியின் அமைப்பு ரீதியிலான 46 மாவட்டச் செயலாளர்களுடன் அவர் கலந்தாய்வும் மேற்கொண்டார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமையும் வரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் இந்த சந்திப்பு, செல்போனில் பேச்சு தொடரும் என்று கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், டாக்டர் ராமதாஸ் இப்படி 5 ஆயிரம் தொண்டர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியிருக்கிறார், என்கின்றனர்.

அதேநேரம் அடுத்த 2 ஆண்டுகளும் மாநிலம் முழுவதும் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

பாமகவின் திட்டம்

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “டாக்டர் ராமதாஸ் வயது மூப்பின் காரணமாக தைலாபுரம் தோட்டத்தில் இருந்தபடியே கட்சியை வலுவாக கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு அவருடைய கட்சியின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை.

வட மாவட்டங்களில் மட்டுமின்றி கொங்கு மண்டலத்திலும் ஒரு சில மாவட்டங்களில் டாக்டர் ராமதாஸ் மீது வன்னியர் சமுதாய மக்களிடம் மதிப்பும், மரியாதையும் இன்றளவும் உள்ளது. ஆனால் 20 வருடங்களுக்கு முன்பு டாக்டர் ராமதாசுக்கு கிடைத்த அதே மரியாதை அவருடைய மகன் அன்புமணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். ஏனென்றால் அன்றைய காலகட்டத்தில் வன்னியர்களை ஒருங்கிணைப்பதில் காடுவெட்டி குரு தீவிரமாக ஈடுபட்டார். ராமதாசின் வலது கரமான அவர் இன்று உயிருடன் இல்லாதது, பாமகவுக்கு சற்று பின்னடைவாகவே அமையும். அதனால்தான், அதிமுக, பாஜக அணியில் இணையும் முயற்சியை இப்போதே டாக்டர் ராமதாஸ் தொடங்கிவிட்டார்.

ஆனால் தமிழகத்தில் இந்த முறை குறைந்த பட்சம் 12 தொகுதிகள் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக போட்டியிட விரும்பும். எனவே அதிமுக கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 5 நாடாளுமன்ற தொகுதிகள் கிடைத்தாலே பெரிய விஷயமாக இருக்கும். அதேபோல தேமுதிகவுக்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படலாம். தென் மாவட்டங்களில் தொகுதி உடன்பாடு அடிப்படையில் டிடிவி தினகரன் கட்சிக்கு, தன் பங்கில் இருந்து பாஜக ஓரிரு தொகுதிகளை ஒதுக்கவும் வாய்ப்பு உள்ளது.

ஏனென்றால் திமுக கூட்டணிக்கு எதிராக வலுவான ஒரு அணியை உருவாக்கினால்தான், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 25 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என்று தமிழக பாஜகவினர் கருதுவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. அதனால் பாஜகவின் சிந்தனைகள் எல்லாம் 25க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமென்ற இலக்கையே பிரதானமாக கொண்டிருக்கும்.

அதேநேரம் பாமக மீதான மதிப்பீடு பற்றி பொதுவெளியில் அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றே சொல்லவேண்டும். தேர்தலுக்கு தேர்தல் நிறம் மாறும் டாக்டர் ராமதாஸ் தனக்கும் தனது மகனுக்கும் மட்டுமே நல்லதை தேடுவார். அதற்காக அடுத்து ஆட்சியமைக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்க முயல்வார். இவரை போன்ற நிறம் மாறும் அரசியல்வாதிகளை யாரும் ஊக்குவிக்காமல் இருக்க வேண்டும். பாஜக இவரை தன்னுடைய கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்ற கருத்துதான் நிலவுகிறது.

ஆனாலும் சமீப காலமாகவே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மேலிடத் தலைவர்களுடன் நல்ல தொடர்பில் உள்ளார்.

அண்மையில் பழங்குடியின வகுப்பை சேர்ந்த பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு சென்னை வந்தபோது அவரை நேரில் சந்தித்து அன்புமணி ஆதரவும் தெரிவித்தார். அதனால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இருக்கும் அணியில் தான் பாமகவும் இடம்பெறும் என்று உறுதியாக நம்பலாம்” என அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Views: - 492

1

0