2ஜி வழக்கை இழுத்தடிக்கும் திமுக : தேர்தலுக்கு முன் தீர்ப்பு வருவதற்கு கடும் முட்டுக்கட்டை!!!

By: Babu
6 October 2020, 5:11 pm
2G Case - Updatenews360
Quick Share

சென்னை: 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு வருவதைத் தடுக்கும் நோக்கத்தில் டெல்லி உயர்நீதிமன்ற விசாரணையைத் தாமதப்படுத்த திமுக திட்டமிட்டுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும், எம்.பி கனிமொழியும் மத்திய அரசின் அனுமதிக் கடிதம் உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்களில் வாதங்களைத் திருப்பி விசாரணையை இழுக்கத் தொடங்கியுள்ளனர்.

வழக்கின் முதல் நாளிலேயே ஆ.ராசாவுக்கும், கனிமொழிக்கும் ஆஜரான வழக்கறிஞர்கள் மேல் முறையீடு செய்ய சிபிஐக்கு மத்திய அரசு அனுமதி அளித்த கடிதத்தை அளிக்க வேண்டும் என்று கேட்டனர். மிகவும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ அப்பீல் செய்திருக்க வாய்ப்பில்லை. அதற்கான, அனுமதிக் கடிதம் ஒரு சாதாரண நடைமுறையாகும். அந்தக் கடிதத்தை குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் தங்களுக்கு அளிக்குமாறு கேட்பது வழக்கின் குற்றச்சாட்டுகளை மறுக்கவோ, வலியுறுத்தவோ எந்தவிதத்திலும் பயன்படாது. இந்தக் கடிதத்தை சில நாட்களில் சிபிஐ பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும். இதற்காக திமுக கோரிக்கை வைப்பது விசாரணையை இழுத்தடிக்கலாம் என்ற நோக்கம் கொண்டது என்றே கருதப்படுகிறது.

முதலில் கொரோனாக் காலத்தில் நீதிமன்ற விசாரணை கூடாது என்று ஆ.ராசாவும், கனிமொழியும் வாதாடி இந்த வழக்கைத் தள்ளிப்போட முயன்றனர். இதை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்காமல் தள்ளுபடி செய்தது. எனவேதான் வழக்கின் விசாரணை அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கியது. 2ஜி குறித்துப் பேச்சு வரும்போதெல்லாம் சிபிஐ நீதிமன்றத்தில் தாங்கள் வாய்தாவே வாங்காமல் விரைவாக முடிப்பதற்கு ஒத்துழைப்பு அளித்தோம் என்று ஆ. ராசா திரும்பத் திரும்பக் கூறிவருகிறார்.

2ஜி வழக்கே பொய்யானது என்றும், அரசியல் காரணங்களுக்காகத் தொடரப்பட்டது என்றும், கனிமொழியும், ஆ.ராசாவும் சொல்லிவருகிறார்கள். பொய்யான வழக்கு என்றால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அதை அவர்கள் எளிதாக நிரூபிக்கமுடியும். அப்படி நடந்தால் அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை இன்னோரு நீதிமன்றத் தீர்ப்பும் எடுத்துக்காட்டும். அது அவர்களுக்குப் பெருமையாகவே அமையும். ஆனால், வழக்கை இருவரும் இழுத்தடிக்க முயல்வது அவர்கள் சொல்வதில் அவர்களுக்கே நம்பிக்கையில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

kanimozhi - stalin - updatenews360

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே தங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்துவிடும் என்றும், அதனால் திமுகவின் தேர்தல் வாய்ப்புகள் கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவர்கள் கருதுவதால்தான், வழக்கை ஜவ்வாக இழுக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இனி விசாரணை நடைபெறும் நாட்களில் அரசு வழக்கறிஞர் இதுபோன்ற காலதாமதம் செய்யும் முயற்சிகளை எதிர்த்து நீதிபதியிடம் முறையிடுவார் என்று கருதப்படுகிறது.

முதல் நாள் விசாரணையில், மேல் முறையீடு செய்ய சிபிஐ-க்கு மத்திய அரசு அளித்த அனுமதி கடிதத்தை அளிக்க வேண்டும் என்றும், சி.பி.ஐ கையேட்டை சி.பி.ஐ-யே கடைபிடிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் வாதம் செய்தார். இதுபோல் பல டெக்னிக்கள் விஷயங்களை அவர் தொடர்ந்து எழுப்புவார் என்று தெரிகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்தபோது, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், கடந்த 2008-ல் 2ஜி அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில், ஏல நடைமுறைகளைப் பின்பற்றாததால், அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்குத் தணிக்கைத்துறை தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. தனி நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி போதுமான ஆதாரங்கள் இல்லையென்று இருவரைய்ம் விடுதலை செய்தார். இதைத் தொடர்ந்து சிபிஐ டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் 2ஜி ஊழல் வழக்கு பரபரப்பாகப் பேசப்பட்டது. மக்கள் மத்தியில் திமுக மீதி கடும் மக்களின் கடும் கோபத்தை ஏற்படுத்தி அக்கட்சி படுதோல்வி அடைவதற்கு 2ஜி ஊழல் வழக்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்த வழக்கு அன்றாட விசாரணை நடத்தப்பட்டால் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தீர்ப்பு வந்துவிடும் என்ற நிலையில் அதை தாமதப்படுத்த திமுக சார்பில் கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Views: - 37

0

0