முடக்கப்பட்ட மாவட்டங்களில் இனி என்ன நடக்கும்? எத்தகைய பாதிப்புகள் இருக்கும் ?

22 March 2020, 8:46 pm
curfew 01 updatenews 360
Quick Share

தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் 3 மாவட்டங்கள் உள்பட நாட்டின் 75 மாவட்டங்களில் போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் முடக்கப்பட்டாலும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும்; எனவே மக்கள் பீதியடையத் தேவையில்லை.

இந்தியாவில் படிப்படியாக தனது கோரப்பிடியை பரப்பி வருகிறது கொரோனா வைரஸ். இதன் பிடியில் இருந்து தமிழகமும் தப்பவில்லை. இந்த நிலையில்  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்திய மத்திய அரசு, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள, பரவ அதிக வாய்ப்புள்ள மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

இதில் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மற்றும் புதுச்சேரியின் மாஹே பகுதிகள் அடங்கும். எனினும், இது குறித்து தமிழக அரசிடம் இருந்து எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இன்றிரவோ, நாளையோ வரக்கூடும் என்று தெரிகிறது.

தனிமைப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவால், சம்மந்தப்பட்ட மாவட்ட மக்கள் மத்தியில் கவலையும் பீதியும் உண்டாகி இருக்கிறது.  அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமா, போக்குவரத்து வழக்கம் போல் இருக்குமா, தனிமைப்படுத்துவதால் என்னென்ன சிக்கல்கள் இருக்கும், வியாபாரம் முடங்கிவிடுமொ என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

ஆனால், மத்திய அரசு முடக்கச்சொன்ன மாவட்டங்களில் மக்கள் நடமாட்டத்தை தவிர்க்க போக்குவரத்து கட்டுப்பாடுகள் இருக்கும்; அதேபோல் ஊர்வலம், பொது நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு அனுமதி இருக்காது. திரையரங்குகள், வணிக வளாகங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். 5 பேருக்கு மேல் கூடுவது தடை செய்யப்பட வாய்ப்புகளும் உண்டு.

எனினும் அத்தியாவசிய போக்குவரத்து சேவைகலில் எந்த பாதிப்பும் இருக்காது. மளிகைப் பொருட்கள், காய்கறி, பழங்கள், பால், சமையல் காஸ், குடிநீர் வினியோகம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சேவைகள் தடையின்றி வழக்கம்போல் கிடைக்கும். தொலைத்தொடர்பு சேவைகள், மின்னணு வர்த்தகம் போன்றவை தடைபடாது.

கொரோனாவால் அலட்சியமாக இருக்க முடியாது; கண் முன்னே சீனாவும், இத்தாலியும், ஸ்பெயினும் சந்தித்து வரும் மரணப் போராட்டங்களை பார்த்து தான் வருகிறோம். மக்களின் உயிரும் முக்கியம் என்பதால் தான் அரசு, இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சிறிதுகாலத்திற்கு சிரமங்களை பொருத்துக் கொண்டு நம்மை காப்பாற்ற திட்டம் வகுக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு நாம் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.