3-வது அணி முதல்வர் வேட்பாளர் கமல்தான் : தினகரனின் பகல் கனவை கலைத்த சரத்!!

3 March 2021, 7:18 pm
Dinakaran - updatenews360
Quick Share

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த டிசம்பர் மாத மத்தியில் தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் தொடங்கியபோதே ஒரு உறுதியான முடிவுடன் இருந்தார். நடிகர் ரஜினி தனிக்கட்சி தொடங்கி அரசியலில் குதித்தால், அவருடன் இணைந்து தேர்தல் களத்தை சந்திக்கலாம் என்று கருதினார். அதே மாதம் 29-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக அரசியலில் குதிக்க போவதில்லை திடீரென்று ரஜினி அறிவித்ததால், அவருடைய ஆதரவைப் பெறுவதற்காக தீவிர முயற்சியும் மேற்கொண்டார்.

இந்த நிலையில், வீட்டில் ஓய்வெடுத்து வந்த ரஜினியை அண்மையில் கமல் நேரடியாகவும் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் உடல் நலம் சார்ந்த விஷயங்களை மட்டுமே பேசிக் கொண்டதாக கூறினாலும், அரசியல் விவகாரங்களையும் அவர்கள் விரிவாக ஆலோசித்தும் உள்ளனர். அப்போது, ரஜினி அரசியல் தொடர்பான சில முக்கிய ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கமலுக்கு
வழங்கியதாகவும் கூறப்பட்டது.

Rajini_Kamal_ - updatenews360

இதைத்தொடர்ந்து, கமல் வலுவான மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியை இன்னும் வேகமாக முன்னெடுத்தார். ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் மன்னார்குடியில் கமல் பேசும்போது, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை ஒரு பிடி பிடித்து இருந்தார். ஆர்.கே.நகரில் இருபது ரூபாய் டோக்கன் கொடுத்து ஓட்டு வாங்கியவர், இப்போது பரிசு பெட்டியுடன் இங்கே வருகிறார் என்று அப்போது நையாண்டி செய்திருந்தார்.

தற்போது அரசியல் சூழல் முற்றிலுமாக மாறி இருந்தாலும் கூட கமலுக்கு, டிடிவி தினகரன் பக்கம் செல்வதற்கு தயக்கம் நிறையவே இருந்தது. இதனால்தான் கமல், திமுக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் சிறுசிறு கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு வலுவான மூன்றாவது அணியை உருவாக்குவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். தினகரன் கட்சியை நாடாமல் தவிர்க்கவும் செய்தார்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கமல் எதிர் பார்க்காமலேயே சில அரசியல் நிகழ்வுகள் நடந்தன.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய ஜனநாயக கட்சியின் துணைத் தலைவர் ரவி பச்சைமுத்து அறிவித்தார். அதேநேரம் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மக்கள் நீதி மய்யத்துடன் மூன்றாவது அணிக்கான பேச்சுவார்த்தையை நேரடியாகவே தொடங்கியது. அதில் இந்திய ஜனநாயக கட்சியும் இணைந்துகொண்டது.

இப்படி கமலின் மக்கள் நீதி மய்யத்துடன் இரு கட்சிகள் நெருங்குவதை கண்ட டிடிவி தினகரன் இந்த அணியில் இணைய விரும்பினார். கடந்த 24-ம் தேதி சரத்குமாரும், அவருடைய மனைவி ராதிகாவும் சசிகலாவிடம் உடல் நலம் விசாரித்து சென்றபின்பு, இந்த எண்ணம் அவரிடம் வேகமாக வளர ஆரம்பித்தது. தமிழ் நாட்டில் ரஜினிக்கு அடுத்து மக்களால் மிகவும் அறியப்பட்ட நடிகர் கமல் என்பது தினகரனுக்கு நன்றாகவே தெரியும்.

அதனால், ஏற்கனவே அமமுக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்ற கூறியிருந்த அறிவிப்பை மூட்டைகட்டி வைத்துவிட்டு, மக்கள் நீதி மய்யத்திற்கு சரத்குமார் மூலம் தூது விடத் தொடங்கினார். கமல் கட்சிக்கு 65 முதல் 75 தொகுதிகள் வரை கொடுப்பதாகவும், அதற்கான தேர்தல் செலவுகள் அனைத்தையும் முழுமையாக தானே ஏற்றுக் கொள்வதாகவும், அந்த தூதில் தினகரன் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

TTV dinakaran 01 updatenews360

முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்தபோது, சற்று சுதாரித்துக் கொண்ட நடிகர் கமல், எத்தனை கட்சிகள் என்னுடன் கூட்டணி சேர்ந்தாலும், நான் தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது என்று அதிரடி காட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த தினகரன் சில ஆடிட்டர்கள் மூலம் அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகள் வாங்கித் தருமாறு பாஜகவுக்கு நெருக்கடி அளித்ததாகவும், ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று அவருக்கு பதில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவை மீட்டு எடுப்பேன் என்று கூறிவந்த தினகரன், வேறுவழியின்றி தற்போது மக்கள் நீதி மய்யம் உருவாக்கும் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது.

இதனால்தான் நேற்று வரை பாஜக அதிமுக என்று எந்தக் கட்சி எனது கூட்டணியில் இணைந்தாலும், அதை நான்தான் வழி நடத்திச் செல்வேன் என்று கூறிவந்த தினகரன், தற்போது தனது நிலைப்பாட்டில் இருந்து அப்படியே குட்டிகரணம் அடித்து இருப்பது தெரியவந்துள்ளது.

மக்கள் நீதி மய்யத்திற்கும், அமமுகவுக்கும் இணைப்பு பாலமாக செயல்பட்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மூன்றாவது அணியில் முதல்வர் வேட்பாளர் கமல்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது திட்டவட்டமாக தெரிவித்தார்.

sarath kumar - updatenews360

இதன் மூலம் ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் ஸ்டாலின் ஆகியோருக்கு அடுத்தபடியாக முதல்வர் பதவிக்கு தகுதியான வேட்பாளர் தான் மட்டுமே என்று கருதிக் கொண்டிருந்த அமமுக பொதுச்செயலாளர் தினகரனின் பகல் கனவு அப்படியே கலைந்து போய்விட்டது.

இதனால் தினகரனை வைத்து அதிமுகவில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று திட்டமிட்டிருந்த சசிகலாவின் எண்ணமும் கூட தவிடுபொடி ஆகி விட்டது என்றே சொல்ல வேண்டும்.

இதுபற்றி இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, “முதல்வர் வேட்பாளர் கமல் தான் என்பதை தினகரன் ஒப்புக்கொண்டதாகவே சரத்குமாரின் அறிவிப்பை பார்க்கிறோம். எங்கள் அணியில் அம்முக இணைந்தாலும், நாங்கள் மிகுந்த எச்சரிக்கையாகவே இருப்போம். ஏனென்றால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தினகரன், முழுக்க முழுக்க பாஜகவை எதிர்த்தே பிரச்சாரம் செய்தார். வெற்றி பெற்றதும் அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்கு திமுகவுடன் இணைந்து எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். இவரும், சசிகலாவும் ஓ.பன்னீர்செல்வத்தை அடிமைபோல் நடத்த முயன்றதால்தான் அவர் ஜெயலலிதா சமாதிக்கு சென்று தர்மயுத்தமே நடத்தினார்.

OPS - updatenews360

அதே பன்னீர் செல்வத்தையே இன்று ஜாதிப்பற்றுதான் எல்லாவற்றையும் விட பெரியது எனக்கூறி மவுனமாக்கி விட்டார்கள் என்பதும் எங்களுக்கு தெரியும். சில நேரங்களில் ஜெயலலிதாவுக்கு அரசியல் வியூகங்களை டிடிவி தினகரன் வகுத்துக் கொடுத்து இருக்கிறார் என்றும் நாங்கள் கேள்விப்படுகிறோம். அதனால் அவர் தேர்தலுக்குப் பின் எப்படி நடந்து கொள்வார், நிறம் மாறுவார் என்பதையும் எங்களால் யூகிக்க முடியும். எனவே அவரிடம் மிகுந்த எச்சரிக்கையாகவே இருப்போம்” என்று அந்த நிர்வாகி கூறினார்.

அரசியலில் முன்ஜாக்கிரதை என்பது எப்போதுமே நல்ல விஷயம்தான்!

Views: - 24

0

0