விடாது துரத்தும் கொரோனா… 3-ம் அலையுடன் அச்சுறுத்தும் ‘டெல்டா பிளஸ்’… தமிழக அரசு குறைத்து மதிப்பிடுகிறதா..?

Author: Babu Lakshmanan
26 June 2021, 5:54 pm
erd wave - corona - updatenews360
Quick Share

2020-ம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இந்தியாவிற்குள் நுழைந்த கொரோனா வைரஸ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கி வருகிறது. தேசத்தின் பொருளாதாரத்தை முற்றிலுமாக சீர்குலைத்த கொரோனா இதுவரை 3.93 லட்சம் உயிர்களை காவு வாங்கிவிட்டது.

ரவுண்டு கட்டி தாக்கும் நோய்கள்

உருமாற்றம் பெற்ற வீரியம் மிக்க கொரோனா வைரசின் இரண்டாம் அலை கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் மெல்ல மெல்ல நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. இந்த ஆண்டின் மார்ச்,ஏப்ரல், மே மாதங்களில் விஸ்வரூபமெடுத்தது.

Delta Plus Corona - Updatenews360

தமிழகத்தை பொறுத்தவரை, முதல் அலையை விட இரண்டாம் அலையில் உயிர் பாதிப்புகள் மிக மிக அதிகம். அதுவும் கிராம மக்களின் ஊயிரிழப்புகள் கணக்கிட முடியாதவை.

இந்த நிலையில்தான் கொரோனாவின் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள் போல் கருப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள் பூஞ்சை போன்ற கலர் காலரான துணை நோய்களும் இந்திய மக்களை ரவுண்டு கட்டி தாக்கிவருகிறது.

இந்த நோய்களின் பாதிப்பாலும் இந்தியா முழுவதும் 2,200 பேர் இதுவரை பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்திலும் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
“மனிதர்களைத் தாக்கக்கூடிய பூஞ்சை நோய்கள் சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவை
இருந்தாலும் கருப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள் ஆகிய பூஞ்சைகள்தான் பெரும் எண்ணிக்கையில் உயிரை பறிக்கும் அபாயம் கொண்டவை” என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

கப்பா… டெல்டா….

முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய ‘பி.1.617.1’ வைரசுக்கு கப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் உலக சுகாதார நிறுவனத்தால் பெயர் சூட்டப்பட்டது. இந்த டெல்டா வைரஸ்தான் நமது நாட்டின் கொரோனா 2-வது அலைக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது என்கிறார்கள்.

அண்மையில் டெல்டா வைரசின் உருமாற்றத்தில் மேலும் சில மாற்றங்கள் ஏற்பட்டு ‘டெல்டா பிளஸ்’ ஆகி இருக்கிறது. கடந்த வாரம் வரையில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், சுவிட்சர்லாந்து, ரஷ்யா, சீனா, நேபாளம், போலந்து, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளை சேர்ந்த 200 பேர் இந்த உருமாற்ற வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

Coronavirus_NIAID_UpdateNews360

நமது நாட்டில் 48 நபர்களிடம் டெல்டா பிளஸ் உருமாற்ற வைரஸ் அறியப்பட்டுள்ளது. இதில் மராட்டிய மாநிலத்தில்தான் 20-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வேகமாக பரவுதல், நுரையீரல் செல்களோடு அதிகமாக ஒட்டிக்கொள்ளுதல், உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை துரிதமாக குறைத்தல் போன்றவை டெல்டா பிளஸ் தொற்று உருமாற்றத்தின் 3 பொதுவான முக்கிய அம்சங்கள்.

எண்ணிக்கையில் குளறுபடி..

இந்த நிலையில், தமிழகத்திலிருந்து 1159 மாதிரிகள் பெங்களூரு மரபணு ஆய்வுக்காக அனுப்பப்பட்டு அதில் 772 மாதிரிகளின் முடிவுகள் கிடைத்துள்ளன. இதில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா இருந்தது, தெரியவந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா,சுப்பிரமணியன் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, “இப்போதுள்ள தடுப்பூசியே டெல்டா பிளஸ் வைரஸை கட்டுக்குள் வைத்திருக்கும். ஏனெனில், இந்த டெல்டா பிளஸ் வைரஸ் இரண்டாவது அலையிலேயே ஏராளமானோருக்கு வந்துபோயிருக்குமோ என்ற சந்தேகமும் உள்ளது. இதன் பாதிப்பு பெரிதாக இல்லை. இந்த தொற்று வந்தவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதித்ததில் அவர்களுக்கு இந்த தொற்று பரவவில்லை” என்றார்.

ma subramanian - updatenews360

அதேநேரம், தற்போது தமிழகத்தில் மொத்தம் 9 பேர் டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.

டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரஞ்சித் குலேரியா,”இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது. இன்னும் 6 முதல் 8 வாரங்களில் அதை எதிர்கொள்ள நேரிடும்” என சமீபத்தில் எச்சரித்த நிலையில் தற்போது டெல்டா பிளஸ் பரவல் மிகுந்த அச்சமூட்டுவதாக அமைந்திருக்கிறது.

இப்போதைக்கு டெல்டா பிளஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகத் தெரிந்தாலும் இன்னும் அதிகமாகவே இருக்கலாம் என்றும், மரபணு வரிசைக்கான ஆய்வுகளை அதிகப்படுத்தினால் மட்டுமே உண்மையான தரவுகள் தெரியவரும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, “கொரோனா 3-வது அலையில் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுவதால் தமிழக மருத்துவமனைகளில் குழந்தைகளுக்காக ஒரு லட்சம் படுக்கைகளும் அவர்களை கவனித்துக் கொள்வதற்காக, தாய்மார்களுக்கு கூடுதலாக இன்னொரு லட்சம் படுக்கைகளும் தேவைப்படும் சூழல் ஏற்படும். எனவே இந்த விஷயத்தில் தமிழக அரசு மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

அலட்சியமாக இருக்கக் கூடாது

அதேநேரம், “கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் எதிர்கொள்ள திமுக அரசு தயாராக இருக்கிறது” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

cm stalin- updatenews360

கொரோனா மூன்றாம் அலை,டெல்டா பிளஸ் குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறும்போது, “எந்தவொரு பெருந்தொற்று நோயின் தன்மையும் மாறிக்கொண்டே தான் இருக்கும். உருமாறும்போது அதன் வீரியம் மிகக் கடுமையாகவும் இருக்கும். 1918ல் ஸ்பானிஷ் ப்ளூ உலகம் முழுவதும் பரவியபோது அதன் வேகம் தணிவதற்கு 3 வருடங்கள் ஆயின. அதன் பிறகும் அந்நோயின் தாக்கம் பல ஆண்டுகள் நீடித்தது. அலை அலையாய் தொடர்ந்து தாக்கியது.
அதனால் நோய் கட்டுக்குள் வந்துவிட்டது என்று யாரும் அலட்சியமாக இருக்கக் கூடாது. மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதனால் அரசுகள் முன்னெச்சரிக்கையாகவும், மக்கள் விழிப்புணர்வுடனும் இருந்தால் எந்தவொரு பெரும் தொற்று நோயையும் கட்டுப் படுத்திவிடலாம்” என்று குறிப்பிட்டனர்.

தமிழகத்தில் விரைந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடித்துவிட்டால் கொரோனா 3-ம் அலை அச்சம் மக்களிடம் தானாக குறையும் என்பது நிச்சயம்!

அதற்கு முகக் கவசம் என்னும் தற்காப்பு ஆயுதத்தை தொடர்ந்து பயன்படுத்தவேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டியதும் மிக அவசியம்!

Views: - 240

0

0